Mon. Nov 25th, 2024

பிரபல கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு எதிராக வருமானத்துறை துறையின் பிடி இறுகுகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

1986 ஆம் ஆண்டில் இயேசு அழைக்கிறார் என்ற நிறுவனத்தை கிறிஸ்துவ மதபோதாகர் டி.ஜி.எஸ். தினகரன் தொடங்கினார். அன்றைய காலகட்டத்தில் மத பிரசாரங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த நிலையில், மததொடர்புகளை வணிகத்திற்கு பயன்படுத்த தொடங்கினார் தினகரன். அதன் முதற்கட்டம்தான் கல்வி நிறுவனங்கள். அதன் உச்சகட்ட வளர்ச்சி, காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இன்று உயர்ந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த அவரது தொடர்பாகள், இந்திய முழுவதும் பரவியதுடன், உலகம் முழுவதும் விரியத் தொடங்கியது. இதன் விளைவாக நன்கொடைகள் பெருக ஆரம்பித்தன. குறுகிய காலத்திற்குள்ளேயே பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்தது இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பும், காருண்யா நிகர்நிலைப்பல்கலைக்கழகமும். தினகரன் இறந்த பிறகு, அவரது சிந்தனையும், செயல்பாட்டையும் மேம்படுத்தி, தன்னுடைய பாணியில் பெரும் திரளான கிறிஸ்துவர்களை கவர்ந்தார். லட்சங்களில் வந்துக் கொண்டிருந்த நன்கொடைகள், கோடிகளைத் தாண்டியது.
செல்வத்திலும், செல்வாக்கிலும் அவர் உயர பறந்தபோது, அரசியல் தொடர்பான மேல்மட்டங்களிலும் நட்பை பலப்படுத்திக் கொண்டார் பால் தினகரன்.

அவரின் வளர்ச்சிக்காக, அரசு துறைகளிலும், தொழில்துறைகளிலும் இருந்த கிறிஸ்துவர்கள், இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பு மாபெரும் நிறுவனமாக மாறுவதற்கு பெரிதும் உதவினார்கள். இதன் விளைவாக, கணக்கில் அடங்காத சொத்துகள், சட்ட ரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் வாங்கிக் குவித்தார் பால் தினகரன். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகும், இயேசு அழைக்கிறார் அமைப்புக்கு வரும் நன்கொடைகள் குறையவில்லை. ஆனால், முறையான கணக்குகள் இல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக காருண்யா நிறுவனம் சொத்துகளை வாங்கிக் குவிக்கிறது என்ற புகார், வருமான வரித்துறைக்கு அதிகளவில் அனுப்பப்பட்டன. அதனை ஆற அமர்ந்து ஆய்வு செய்த வருமான வரித்துறை, கடந்த 20ம் தேதி பால் தினகரனுக்கு எதிராக சாட்டையை சுழற்றியது. அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மத பிரசார அமைப்பு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட 28 வருங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை, அடுத்தடுத்த நாள்கள் என 3 நாட்கள் நீடித்தது. இந்த சோதனையில், 120 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்து கண்டறியப்பட்டதுடன், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக 28 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், தங்கம் உள்ளிட்டவை மூலம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது உறுதியானது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பால் தினகரனுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்போது நடைபெறும் விசாரணைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பால் தினகரன் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று வருமான வரித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.