Fri. Nov 22nd, 2024

கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆயுதப்படை தலைமைக் காவலர் குடும்பத்தினரை, அவர்களது இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஆறுதல் கூறியதுடன், காவலரின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தார்.

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஆயுதப்படை தலைமை காவலர் சதீஷ் பாபு என்பவர், கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவரின் உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப. இன்று கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் வழங்கினார். அவரின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

தலைமை காவலர் சதீஷ் பாபு, கடந்த 14 ஆம் தேதி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடந்த 19 ஆம் தேதி தேதி கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தலைமைக் காவலரின் இல்லம் தேடிச் சென்று அவரது குடும்பத்தினருக்கு காவல் ஆணையர் ஆறுதல் கூறியது, காவல் துறையினருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் காவல்துறை சார்பில் வழங்கப்படும் என்றும் காவல் ஆணையர் உறுதியளித்தது, அந்த குடும்பத்தினருக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ், சென்னை மாநகர காவல்துறையில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவுப்படுத்தப்பட்டு வருதாக தெரிவித்தார். ஆணையருடன் ஆயுதப்படை துணை ஆணையர் சௌந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.