Thu. Apr 18th, 2024

முதல்வர் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 93 வயதான அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தென் மாவட்டச் சுற்றுப்பயணத்தை ரத்துச் செய்துவிட்டு முதல்வர், சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்று, இறுதிச்சடங்கு உள்ளிட்ட சடங்குகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அவரது முகாம் இல்லத்தில் ஒருவாரத்திற்கு மேல், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள் அவரது தாயாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, முதல்வருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

 எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால், அவரது தாயாரின் மறைவு, தமிழ்நாட்டின் துயரமாக மாறியது. பிரதமர், குடியரசுத் துணைத்தலைவர் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

முதல்வரை பெற்ற தாய்க்கு இதைவிட வேறு பெருமை ஏதுவும் இருக்க முடியாது. நாமும், அதே மனநிலையில்தான் உள்ளோம். ஆனால், ஒருவரின் உயிர் என்பது உயர் பதவியில், பிரபலமாக இருந்தால்தான் முக்கியமானதாக இருக்குமா? ஊடகங்களால் பேசப்படும் பொருளாக அமையுமா? ஏழை, பாழைகளாக இருந்தால் அவர்கள் அனாதைகள் தானா? என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

முதல்வர் இ.பி.எஸ்.ஸின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் இருந்து 5, 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, குஞ்சம்பாளையம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரில் பெரும்பாலோனர் விவசாய கூலிகள்தான். இந்த கிராமத்தில் உள்ள  சாலையின் ஒருபக்கம்  (தார் ரோடு) எடப்பாடி சட்டமன்றத் தொகுதியாகவும், மறுபக்கம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியின் எல்லையாகவும் உள்ளது. எடப்பாடி எம்.எல்.ஏ. யாரென்று உங்களுக்கே தெரியும். சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சேர்ந்த எஸ். ராஜா என்பவர் தான்.கிராம மக்களில் சரி பாதியாக, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க என காலம் காலமாக பிரிந்து இருக்கிறார்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கடந்த மாதம் 15 ஆம் தேதி சிறிய சரக்கு வாகனத்தில் ஏறி சாலைப் பணிக்காக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையிலேயே தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது எதிர்திசையில் இருந்து வந்த லாரி, சாலையில் விழுந்த கிடந்த தொழிலாளர்கள் மீது ஏறி கடந்துச் சென்றது.  

இதில், படுகாயமடைந்த தொழிலாளர்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு  செல்லப்பட்டனர். வழியில், மெய்வேல்(60), சிறுவன் மணிகண்டன் (4) உயிரிழந்தனர். எஞ்சிய 18 பேர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் விபரம் :  வைத்தீஸ்வரன் (13), பழனிசாமி (40),ராஜவேல் (24), ஆறுமுகம் (26), ருத்ரசாமி(30), ராஜா(60), காவியா(11), பாப்பாத்தி(41), கோவிந்தராஜ் (32)பாலமுருகன் (24), துரைசாமி (39), கனகாம்பரம்(55), வேல்முருகன் (35), அய்யம்பெருமாள் (40), பெருமாயி (45), கதிர்வேல் (21), அய்யம்மாள் (57) உள்ளிட்டோர். சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் அய்யம்பெருமாள், சாமிக்கண்ணு ஆகிய இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த எஞ்சிய 16 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சைப் பெற்று வந்தனர்.  

ஒருவாரம் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், இடுப்பு, கை, கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு முறையாக ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படவில்லை என்றும், உரிய சிகிச்சை வழங்கப்படாமல், சும்மா படுக்கையில் வைத்திருந்ததாகவும் படுகாயமடைந்தவர்கள், அவர்களது உறவினர்களிடம் கண்ணீருடன் கூறியுள்ளனர். இந்த தகவல் ஊர்க்காரர்களுக்கும் தெரிய வர, அந்த கிராமத்தை உள்ளடக்கிய அரசிராமணி பேரூராட்சி நகர அ.தி.மு.க. செயலாளர் காளியப்பனிடம் சென்று கதறியுள்ளனர். அவர், முதல்வர் இ.பி.எஸ். கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறி அவர்களை அனுப்பியுள்ளார். ஒருசில நாள்கள் கடந்த பிறகும் மருத்துவமனையில் சிகிச்சை முறையில் மாற்றம் இல்லாததால், முதல்வரின் மைத்துனர் வெங்கடாச்சலத்திடமும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், மனம் நொந்துப் போன படுகாயமடைந்தவர்களில் ஒன்றிரண்டுப் பேரைத் தவிர மற்றவர்களை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொந்த ஊரான குஞ்சாம்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.  ஆனால், அவர்கள் வைத்துள்ள முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டையின் அடிப்படையில், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற முடியாதது தான் சோகம்.

இந்தநேரத்தில், அதிகமான வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு சிலரை மட்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, கிராம மக்களே தங்களால் இயன்ற நூறு, இருநூறு ரூபாய் என சிறுவாடு காசுகளை வசூலித்து, 20,000 / 30,000 ரூபாய் என திரட்டி, தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக செலவழித்துள்ளனர். கை எலும்பு உடைந்தவர்கள், நாட்டு வைத்தியமாக மாவு கட்டுப் போட்டுக் கொண்டு, படுத்த படுக்கையாக வீட்டிலேயே கதறிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், ஒருமுறை கூட முதலமைச்சர் இ.பி.எஸ். குஞ்சம்பாளையத்திற்குச் சென்று உயிரிழந்த குடும்பத்தினருக்கோ, படுகாயமடைந்தவர்களுக்கோ ஒரு வார்த்தைக் கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை. அதைவிட மனிதாபிமானமற்ற செயல் என்னவென்றால், எந்த விபத்து நடந்தாலும், அடுத்த நொடியே அறிவிக்கப்படும், முதலமைச்சர் நிவாரண நிதிக் கூட, குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த இந்த அப்பாவி மக்கள் ஒருவருக்குக் கூட இன்று வரை கிடைக்கவில்லை என்பதுதான். 

பஞ்சை பராரிகள் பற்றி யாருக்கென்ன கவலை?  நாமும் உரக்கச் சொல்லுவோம்; முதல்வரே உழவராய்.. உழவரே முதல்வராய்.. வெற்றிநடை போடும் தமிழகம் என்று….