திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை, கடந்த மே 7 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டபோது, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மருத்துவர் மா.மதிவேந்தன்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைச்சர் மருத்துவர் சரோஜாவை தோற்கடித்த இவருக்கு, அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் இளம்தலைமுறை அமைச்சர்களில் ஒருவர். முதல்முறை தேர்தல் போட்டி, அதிலும் வெற்றி, அடுத்து அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.
பதவியேற்ற ஓரிரு நாட்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொண்ட போது இவருக்கு, உடல்நலம் சிறிது குன்றியது. உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது, அவருக்கு கொரோனோ தொற்று அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மதிவேந்தன், கொரோனோ பாதிப்பில் இருந்து விடுபட்டு தற்போது 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனால், சட்டமன்ற உறுப்பினராக கூட இவர் இன்னும் பதவியேற்கவில்லை. இருப்பினும், ராசிபுரம் நகரிலும், தொகுதியிலும் கொரோனோ தொற்று வேகமாக பரவி வருவதை கேள்விப்பட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு, ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதன்பேரில், சேலம் – நாமக்கல் நெடுஞ்சாலையில் ராசிபுரம் எல்லைக்குட்பட்ட ஆண்டளுர் கேட் எனும் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் போர்க்கால அடிப்படையில் உருவாக்கப்பட்டு, நேற்று திறந்து வைக்கப்பட்டது. தனது வருகைக்காக காத்திருக்காமல் உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அமைச்சர் மா.மதிவேந்தன் விடுத்த கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஐஏஎஸ், அதை திறந்து வைத்தார்.
ராசிபுரம் நகரம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருவதால், ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இடம் இல்லாததால், தொற்றாளர்கள் நாமக்கல் மற்றும் சேலத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவர்களுடனும் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மா.மதிவேந்தன் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த அறிவுரை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரை தொகுதிக்கே செல்லாமல் சென்னையிலேயே தங்கியிருக்கும் அமைச்சர் மா.மதிவேந்தன், இரண்டொரு நாளில் ராசிபுரம் தொகுதிக்கு சென்று, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரே ஒரு அமைச்சர் பதவிதான் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, பூரண நலம் பெற்ற பிறகே அமைச்சர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியை துவங்கலாம் என்று கூறும் நாமக்கல் மாவட்ட திமுக பிரமுகர்கள், நாமக்கல், சேந்தமங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் உள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் முறையே பி.ராமலிங்கம், கே.பொன்னுசாமி ஆகியோரும், கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஈ.ஆர். ஈஸ்வரனும் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளிலும், நிவாரணப் பொருட்கள் வழங்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தனின் நேரடி பார்வையும், கண்காணிப்பும் இருந்தால், ராசிபுரம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளதைப் போல நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறப்பு சிகிச்சை மையங்களை வேகமாக உருவாக்கி விட முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்கள் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள்.