Fri. Mar 29th, 2024

கடும் குளிர்ருக்கும் கன மழைக்கும் அஞ்சாமல் குடும்பம், குடும்பமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் இந்தப் போராட்டம் 40 வது நாளை எட்டியுள்ளது. டெல்லி எல்லைகளில் முகாமிட்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகள் எழுப்பும் முழக்கங்கள், உலகில் பல நாடுகளில் எட்டியுள்ளது. அந்த நாட்டின் தலைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உடல்நலக்குறைவாலும், மாரடைப்பாலும் விவசாயிகள் பலர் இறந்துள்ளனர். இதனிடையே, விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து, கடந்த 30ம் தேதி 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இருப்பினும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச உத்தரவாத விலை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகளில் முடிவு எட்டப்படாததால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தையிலாவது விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணுமா? என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.