Sun. May 4th, 2025

இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இணைந்த நடராஜன், தனது முதல் அயல்நாட்டுப் பயணத்திலேயே சர்வதேசப் போட்டியின் மூன்று பிரிவு போட்டிகளிலும் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி.20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று, தனது அபாரமான பந்து வீச்சால், இந்திய கிரிக்கெட் அணியின் கவனத்தையும் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற வெளிநாட்டு அணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடராஜன்.

ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி என்ற பெருமையுடன் கோப்பை கைப்பற்றி, தாயகம் திரும்பியுள்ளது. சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் உள்ள தனது சொந்த ஊருக்கு இன்று மாலை வந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஊரின் நுழைவு வாயிலில் இருந்து அவரது இல்லம் வரை, வழியெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டு நின்று, நடராஜனை வாழ்த்தி முழக்கமிட்டு வரவேற்றனர்.

கொரோனோ தொற்று காரணமாக, வரவேற்பு ஏற்பாடுகளை ரத்து செய்து சேலம் மாவட்ட சுகாதாரம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து நடராஜன் இந்தியா திரும்பியுள்ளதால், அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.