முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக, முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் பதவியேற்று இருப்பது, கொரோனோவின் கோரத்தாண்டவம் உச்சத்தில் இருக்கும் இந்த காலத்தில் நம்பிக்கை தரும் ஒரு அம்சமாகும்.
சென்னை மேயராக அவர் பணியாற்றிய காலத்தில் சென்னை மாநகராட்சியில் ஊழல் என்று செய்தி வெளியானாலோ, முறைகேடு என்ற கூறினாலோ, அதற்காக வெட்கப்பட்டவர், பதறிப் போனவர் மா.சுப்பிரமணியம் என்பதை, அவரது காலத்தில் சென்னை மாநகராட்சி தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்களே நிறைய அனுபவம் மூலம் அறிந்திருப்பார்கள்.
அதையும் கடந்து அவரின் அயராத உழைப்பு, வியக்கத்தக்க வகையில்தான் இருக்கும். களத்திற்கு சென்று ஆய்வு செய்யாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு பம்பரமாக ஓடியாடி உழைத்தவர் மா.சுப்பிரமணியம். அப்படிபட்டவர், கொரோனோ தொற்று உச்சத்தில் இருக்கும் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அமைச்சராக பொறுப்பு ஏற்றிருக்கிறார் என்பதே நிம்மதி தரக்கூடிய அம்சம்.
உலகையையே சீரழித்துக் கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனோ தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக, சுகாதாரத்துறையை முழுவீச்சில் முடுக்கிவிட்டு, மக்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் தாமதம் இன்றி கிடைத்திட உயிரைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார், அமைச்சர் மா. சுப்பிரமணியம்.
ஆனால், இந்த நேரத்தில் தமிழக சுகாதாரத்துறையின் கட்டமைப்பு எப்படி அமைந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே பகீரென்று இருக்கிறது. மாவட்ட அளவில் ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை (தாலூகா) மாவட்ட மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை கண்காணிக்கும் பொறுப்பு, சுகாதாரத்துறையின் துணை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்திலான அரசு அதிகாரிகள் வசம் இருக்கிறது.
ஒரு மாவட்டத்திற்கு துணை இயக்குனராக பணியிடம் மாற்றம் பெறுவதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கருக்கு 5 முதல் 10 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தவர்கள்தான், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்களாக இன்றைக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோல, இரண்டு, மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இணை இயக்குனர் பதவிக்கான நியமனங்களைப் பெற்றவர்கள், 10 முதல் 15 லட்சம் வரை விஜயபாஸ்கருக்கு லட்சம் கொடுத்தவர்கள்தான் இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனாக (முதல்வராக) பணியாற்றுபவர்கள், 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து பதவியை பெற்றவர்கள்தான் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள்.
கடந்தாண்டு திருநெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரி டீன், கொரோனோ பரிசோதனை செய்யாமலேயே பரிசோதனை செய்ததாக கணக்கு காட்டுங்கள் என்று கூறியது வீடியோ மூலம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை இப்போது நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.
இதேபோல, அரசு மருத்துவமனைகளில் ஆர்.எம்.ஓ. என்ற பதவியில் அமர்ந்திருப்பவர்களும் விஜயபாஸ்கருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்தவர்கள்தான் பெரும்பாலும் பணியில் இருக்கிறார்கள்.
இதைவிட கொடுமையாக குக்கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் வரை சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வரை, மருத்துவர்கள் விருப்பப்பட்ட பணியிடத்திற்கு பணி மாறுதல் பெறுவதற்கு 5 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்தவர்களும், செவிலியர்கள் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ருபாய் வரை கொடுத்து பணிமாறுதல் பெற்றவர்களும்தான் 70 சதவிகிதத்திற்கு மேல் பணியில் உள்ளனர்.
இப்படி கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை ஒட்டுமொத்தமாக ஊழலில் புரையோடி போய் இருக்கும் சுகாதாரத்துறையை வைத்துக் கொண்டு வரும் காலங்களில் பெருக்கெடுக்கும் கொரேனோ தொற்று பேரிடரை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகப்பெரிய சவாலாகதான் இருக்கும்.
இந்த ஊழல் சாம்ராஜ்யத்தைவிட விஜயபாஸ்கரால் பழிவாங்கப்பட்ட நேர்மையான, சளைக்காமல் உழைக்கும் குணம் கொண்ட அரசு மருத்துவர்கள், செவிலியர்களை நூற்றுக்கணக்கில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தூக்கியடித்ததால் மனம் நொந்து போயிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான இருதய நோய் சிறப்பு மருத்துவர் ஒருவர், ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் நாள்தோறும் காலையில் 3 மணிக்கு ரயில் மூலம் விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்து 6 அல்லது 7 மணிக்கு பணி வருகிறார். காலையில் ஒரு சுற்று நோயாளிகளை பார்த்து சிகிச்சை அளிப்பதற்குள் அவர் சோர்ந்து போய்விடுவார்.
மாலையில் பணி முடித்து மீண்டும் விழுப்புரம் பயணம். இப்படி ஒவ்வொரு நாளும் அவதிப்பட்ட அவர், பல மாதங்களாக விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு பணி மாறுதல் கேட்டு விஜயபாஸ்கரை அணுகியுள்ளார்.
அவரிடம் 25 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். இப்படி கடந்த 7 ஆண்டுகளாக சுகாதாரத்துறையையே ஊழல் சாம்ராஜ்யமாக கட்டமைத்த விஜயபாஸ்கரின் நிர்வாக அமைப்பு அடியோடு மாற்றியமைத்தால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கும் உலக தரமான மருத்துவ வசதி, தமிழக மக்களுக்கு கிடைப்பதற்கு சாத்தியமாகும்.
மிகுந்த நெருக்கடியான இன்றைய காலத்தில் சுகாதாரத்துறையை சீரமைப்பது என்பது கடினமான பணி என்றாலும் கூட, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவர்களுடனும் காணொலி வாயிலாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துரையாடி, கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தியவுடன் திறமையின் அடிப்படையில் பதவி உயர்வும், அவரவர் விரும்பும் இடங்களிலும் பணியாற்றும் வாய்ப்பும் நிச்சயம் ஏற்படுத்தி தரப்படும் என்ற உறுதியை தர வேண்டும்.
மேலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனோவுக்கு மட்டுமே சிகிச்சையளித்து வரும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இளைப்பாறவும், அவர்களது உடல்நலத்தை பேணிக் கொள்ளவும் விடுமுறை வழங்க வேண்டும். அதனால் சிகிச்சை அளிப்பது பாதிக்கப்படாமல் இருக்க, புதிய மருத்துவர்களை ஆயிரக்கணக்கில் பணியமர்த்த வேண்டும்.
அதுபோலவே, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் செவிலியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியையும் அரசு தர வேண்டும். முடிந்தளவுக்கு உடனடியாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அடிப்படையில் ஒரு மருத்துவராக இல்லாவிட்டாலும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் அமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்தே மா.சுப்பிரமணியத்தை கொரோனோ பேரிடர் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனால், அவர் நிம்மதியிழந்து இருப்பதை, ஊடகவியலாளர்களின் கேள்வியை எதிர்கொள்ளும்போது, பதற்றப்படுவதை அவரின் உடல்மொழியே காட்டி கொடுத்து விடுகிறது.
ஒரு நல்ல மனிதர், உழைப்புக்கு அஞ்சாதவர், 95 சதவிகிதத்திற்கு மேல் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு இருக்கும் மா.சுப்பிரமணியத்திற்கு கொரோனோ காலம் ஒரு அக்னிப் பரீட்சைதான். இதில் இருந்து அவர் மீண்டு வருவார். ஆனால், நடிப்பில் மன்னனாக திகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரைப் போல, மேக்கப்பே கலையாமல் கொரோனோ காலத்தை கடத்தியதைப் போல, மா சுப்பிரமணியத்தால் கடக்க முடியுமா? சந்தேகம்தான்..
கடந்த ஓராண்டில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொரோனோ தடுப்பு மற்றும் மருத்துவ சிசிக்சை கட்டமைப்புக்கு செலவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனோ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தவுடன், கடந்த ஓராண்டில் சுகாதாரத்துறையில் செலவழிக்கப்பட்ட தொகை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு நடிப்பு மன்னன் விஜயபாஸ்கரின் முகத்திரையை கிழிக்க வேண்டும். இதுவும் கடந்த காலங்களில் அவரால் பழிவாங்கப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் வேண்டுதலாகதான் இருக்கிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு இதுவுமே ஒரு சவாலான பணிதான்…
வரும் நாட்களில் போகிற போக்கில் ஒரு விஷயத்தை மட்டுமே அழுத்தமாக சொல்லுங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களே..
சுகாதாரத்துறையில் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சிறையில் தள்ள கூட தயங்க மாட்டோம் என்று சொல்லிப் பாருங்கள்.
சுணங்கிக் கிடக்கும் சுகாதாரத் துறையே வீறுகொண்டு உழைக்கும். உங்களின் அனைத்து உத்தரவுகளுக்கும் செவி மடுக்கும். இது நிச்சயம் நடக்கும். துளியும் சந்தேகம் வேண்டாம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களே..