தமிழகத்தின் உபயோகத்திற்காக ஒப்பந்தம் செய்திருநத 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழக அரசின் ஒப்புதல் இன்றி தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துவிட்டதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் கேட்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி சீமானும் கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவரம் இதோ….
சென்னையில் உற்பத்தியாகும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதலோ, அனுமதியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக எதேச்சதிகாரப்போக்கோடு ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைத்திருக்கும் மத்திய அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதிக்குள் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக இருக்குமென எதிர்பாக்கப்படும் இந்நேரத்தில் தமிழகத்தில் உற்பத்தியாகிற ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பினால் உற்பத்தி செய்கிற தமிழகம் அம்மாநிலங்களைவிடக் குறைவான அளவே ஆக்சிஜனைக் கொண்டிருக்கும்
சரிசமமான வழங்கலை முடுக்கிவிடாமல் கையாலாகத்தனத்தை மறைக்க தமிழகத்திலுள்ள 80,000 கொரோனா தொற்றுக்கு ஆளான நோயாளிகளுக்குரிய ஆக்சிஜனை அபகரித்து அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி முறையற்றப் பரிமாற்றத்தை செய்து வரும் மத்திய அரசின் செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி; பச்சைத்துரோகம்
இவ்வாறு சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.