சிறப்புச் செய்தியாளர் …
நக்கீரன் ஆசிரியர், உரிமையாளர் கோபால் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களை நேற்று மகிழ்வற்ற ஒரு இடத்தில் சந்திக்க நேரிட்டது. துயரமான நேரமோ, மகிழ்வான தருணமோ, ஊடகவியலாளர்கள் சந்தித்துக் கொண்டால், உரையாடல் இல்லாமல் களைவது சாத்தியமானதல்ல என்ற விதிப்படி, மலரும் நினைவுகளைப் பற்றி பேச்சு எழுந்தது. தராசு குடும்பத்தில் இருந்து வீறுகொண்டு எழுந்த நக்கீரன் ஆசிரியர், பல்வேறு காலங்களில் சோதனைகளை எதிர்கொண்டு, பீனிக்ஸ் பறவையாக இன்றைக்கும் புகழ்கொடி தாங்கி நிற்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் ஊடகவியலாளராக ஒரு மகிழ்ச்சி ஆழ்மனதில் துள்ளாட்டம் போட்டாலும், அதை அப்படியே அழுத்தம் கொடுத்து அடக்கி போட்டுவிடும் தராசு ஆசிரியர் ஷ்யாமின் இன்றைய நிலைமை..
1987-88ல் அவருடன் அறிமுகம் ஏற்பட்டு, 1989 ஆம் ஆண்டில் இருந்து அவருடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு பெற்ற பலரில் நானும் ஒருவனதாக இருந்திருக்கிறேன். சென்னையில் அரசியல் பிரமுகர்களை சந்திக்க சென்ற காலங்களிலும், வெளியூர் நிகழ்ச்சிகளிலும் காரில் ஒருவராக பயணித்திருக்கிறேன். முதன்முதலாக நான் சந்தித்த ஊடக ஆசிரியர். அதேபோல, தலைவர் என்ற அழைத்த முதலும் கடைசியுமான பிரமுகர் அவர்தான். 1988 முதல் 1998 வரை பத்தாண்டு காலம் தராசு மக்கள் மன்றம் கொடி கட்டிப் பறந்தது. இந்த பத்தாண்டுகளில் தராசு ஷ்யாம் தொடாத சிகரமே கிடையாது.
1995- 96 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்ஸி நில முறைகேடு ஆவணங்களை ஊர் ஊராக மேடைப்போட்டு முழங்கியவர் தராசு ஆசிரியர் ஷ்யாம்.
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, அப்போதுதான் திருமணமாகியிருந்தது என்ற போதும் திரட்டிய நிதியை கொண்டு செலவை சமாளிக்க முடியாத நேரத்தில் மனைவியின் நகையை அடகு வைத்து சமாளித்திருக்கிறேன்.
சேலத்தில் புகழ்பெற்ற நேஷனல் ஹோட்டலில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி வழக்கமாக தங்கும் சூட் அறையில் (அன்றைய காலத்தில் பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கும் அறை அது) தராசு ஆசிரியருக்கும், என்னைப் போன்ற மற்ற மாவட்டச் செயலாளர்களுக்கும் அறைகள் பதிவு செய்து வைத்திருந்தேன்.
சேலம் பொதுக்கூட்டத்திற்கு மறுநாள் முழுவதும் ஏற்காட்டில் முக்கியமான மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தராசு ஆசிரியரின் துணைவியாரும் வந்திருந்தார்கள். ஆசிரியரை சந்திக்க விருப்பம் தெரிவித்த எஸ்டேட் உரிமையாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை வரிசைப்படுத்தி அனுப்பி வைப்பதில் நான் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
அவரின் கடுமையான எதிர்ப்புப் போராட்டத்தைப் பார்த்து, அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டி, தனது சொந்த புதல்வன் மீது காட்டும் அன்புக்கு இணையாக அவர் மீது மிகுந்த பாசமும், மரியாதையும் வைத்திருந்தார். அவரின் மனதோடு நெருக்கமாக பேச வேண்டும் என்பதற்காக குறுகிய காலத்தில் தெலுங்கு மொழியை கற்றுக் கொண்டார் தராசு ஆசிரியர். அவருடன் ஆளுநர் மாளிகைக்கு பயணித்த பல நேரங்களில், காலை, இரவு என பல வேளைகளில் ஆளுநர் மாளிகையில், நான் உள்பட தராசு மக்கள் மன்ற நண்பர்கள் சிற்றுண்டி அருந்தியிருக்கிறோம்.
1996 ல் தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகி திமுக.வுடன் கூட்டணி அமைத்த நேரத்தில், துக்ளக் ஆசிரியர் சோவுக்கு நற்பெயர் கிடைத்தது. நடிகர் ரஜினியின் புகழ் ஓங்கியது. ஆனால், திரைமறைவில் அப்போதைய ஜெயலலிதாவின் ஆட்சியை வீழ்த்த பல ஆண்டுகளாக போராடிய தராசு ஆசிரியரின் உழைப்புக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போனதுதான் மிகுந்த சோகம்.
1996 ல் த.மா.கா., -திமுக கூட்டணி உருவானபோது, ஆளுநர் சென்னாரெட்டி, தராசு ஆசிரியர் ஷ்யாமை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினார். அவரது பங்காக, திமுக கூட்டணியில் தராசு மக்கள் மன்றத்திற்கு மூன்று தொகுதிகள் பெற்று தருவதற்குக் கூட ஆளுநர் தயாராக இருந்தார். ஆளுநரின் விருப்பம் தொடர்பாக, அப்போது சேத்துப்பட்டில் இருந்த தராசு அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
நான், தராசு மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மனோகரன், திருநெல்வேலி ஆலங்குளம் பழனிசங்கர், கோவை கொழுமம் தாமோதரன், இன்னும் ஒன்றிரண்டு நண்பர்கள் இருந்தார்கள். பழனிசங்கர் உள்பட சிலர் 1989 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தீவிரமாக களப்பணியாற்றியவர்கள். அப்போது மனம்திறந்த தராசு ஆசிரியர், மூன்று தொகுதியை கேட்டால் கொடுத்து விடுவார்கள். அதில் எனக்கு துளியும் சந்தேகம் கிடையாது.
மூன்று தொகுதிகளை உங்களில் மூவருக்கு பெற்று தந்துவிட முடியும். நீங்களும் எம்.எல்.ஏ. ஆகிவிடுவீர்கள். ஆனால், எம்.எல்.ஏ., ஆனபிறகு உங்களை திமுக நிச்சயமாக விலைக்கு வாங்கிவிடும். அதனால், தலா 3 லட்சம் ரூபாயை தராசு மக்கள் மன்ற கட்சியின் சேவைக்காக, 108 போன்ற ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு நிதியாக கொடுக்க யார் முன் வருகிறீர்களோ அவர்களுக்கு எம்.எல்.ஏ.சீட் நிச்சயம் என்றார். அந்த காலத்தில், எங்களில் ஒருவர் கூட அந்தளவுக்கு பண வசதி படைத்தவராக இல்லை. (அன்று இருந்த அனைவரும் இன்றும் உயிரோடுதான் இருக்கிறோம்) அப்படி அவர் ஏன் கேட்டார் என்றால் எதிர்காலத்தில் ஆளும்கட்சி என்னமாதிரியான ராஜதந்திரங்களை கையாளும் என்பதை முன்கூட்டியே யூகித்திருக்கிறார் ஷியாம்.
அவரின் யூகம் சரியானதுதான் என்பதை புரிந்து கொள்ள 16 ஆண்டுகள் தேவைப்பட்டது. 2011 ல் அதிமுக.வோடு கூட்டணி அமைத்த நடிகர் விஜயகாந்த்துக்கு நேர்ந்த கொடுமையை 16 ஆண்டுகளுக்கு முன்பு யோசித்த அதிராஜதந்திரி தராசு ஆசிரியர் ஷ்யாம்.
அந்த பேச்சுவார்த்தை முடிந்து கலைந்தபோது, 1996 அமைச்சரவையில் நான் உள்பட சிலர் அமைச்சர்கள் என்ற அளவுக்கு கற்பனை காட்சிகள் உருவானது. அத்தனைக்கும் அடிப்படை காரணம், அப்போதைய ஜெயலலிதா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி. அதேகாலகட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடனும் தராசு ஆசிரியர் ஷ்யாமுக்கு நல்ல அறிமுகமும் இருந்தது. அவரின் தீவிரமான போராட்டத்குணத்தை அங்கீகரிக்கும் விதமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் பதவியை வழங்கினார் மறைந்த சென்னாரெட்டி, அப்போதே தகவல் தொழில் நுட்பத்தில் ஆழ்ந்த அறிவு என பல வியப்பிற்குரிய தகுதிகள் தராசு ஆசிரியரிடம் இருந்ததை பார்த்து வியந்திருக்கிறேன்.
நக்கீரன் ஆசிரியரைப் பற்றி சொல்ல ஆரம்பித்து தராசு ஆசிரியர் புராணமாக தடம் புரண்டதற்கு காரணம், இன்றைக்கும் ஊடகவியலாளர் என்ற அடையாளத்தை இழக்காமல் தாங்கிப் பிடித்து இருப்பதால் ஊடகத்துறையில் தனித்த அடையாளத்தோடு, அதே போராட்டக்குணத்தோடு நிற்கிறார் நக்கீரன் ஆசிரியர். ஆனால், 2000 ம் ஆண்டு நிறைவில் ஊடகவியலாளர் என்ற அடையாளத்தை துறந்த தராசு ஆசிரியர், இன்றைக்கு தொலைக்காட்சி விவாதங்களில் வரும் பிரமுகர்களில் பத்தோடு பதினொன்றாக இருக்கிறார் என்ற வருத்தம் அவருக்கு இருக்கிறதோ, இல்லையோ நினைத்து பார்க்கும்போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன் நான்.
2008 ல் எனக்கு ஒரு அறுவைச் சிகிச்சை நடந்தபோது, நக்கீரன் ஆசிரியர், நான் யாரென்று தெரியாதபோதே உதவிக்கரம் நீட்டியவர். அவரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அன்றைய நண்பர் பிரகாஷின் தவறான சிந்தனைப் போக்கால், நக்கீரன் ஆசிரியரை நெருக்கமாக சந்தித்த பல நிகழ்வுகளில் விலகிப் போயிருக்கிறேன். நேற்றைய சந்திப்பின்போது 2008 கால நிகழ்வுகளை காதோடு காதாக பேசுகிற அளவுக்கு தனிமையான நேரம் அமைந்தது. அவரது நிறுவனம் சார்ந்த நிறைய நிகழ்வுகள், அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், துரோகங்கள் என நிறைய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நிறைய ஊடகவியலாளர்கள், அவரோடு பயணித்த நண்பர்கள் என ஒவ்வொருவராக இணைந்துக் கொண்டனர்.
தலைப்புக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2018 அக்டோர் மாதம் 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் அதிகாலை நேரத்தில் நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். அப்போது நிகழ்ந்த பல அம்சங்களை அதே சூட்டோடு விவரித்தார். அந்த நிகழ்வைப்பற்றி அதற்குரிய நேரங்களிலும் சொல்லியிருக்கிறார். பிற்காலத்திலும் அதை விவரித்திருக்கிறார். ரகசியமாக கைது செய்து அழைத்துச் செல்வது என்ற காவல்துறையின் திட்டம், வாட்ஸ் அப் தகவல் மூலம் வெளிச்சத்திற்கு வந்து போலீஸின் திட்டம் தூள் தூளானதை, அவ்வளவு பூரிப்பாக சொன்னார் நக்கீரன் ஆசிரியர்.
ஊடகத்திற்கே தெரியாமல் ரகசியமாக திட்டம் தீட்டி, அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு, அவரோடு வந்த இரண்டு நண்பர்களை தனிமைப்படுத்திவிட்டு, போலீஸ் காரில் அவரை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்தை தாண்டுவதற்குள், அவர் கைது செய்யப்பட்ட தகவல், வாட்ஸ் அப் மூலம் பரவியதை, அவர் பயணித்த வாகனத்தில் இருந்த ஒரு போலீஸ்காரரே, சார் நக்கீரன் ஆசிரியர் கைது என செய்தி வந்திருக்கிறது என்று சத்தமாக சொல்ல, அந்த டீமுக்கு தலைமை தாங்கிய போலீஸ் அதிகாரிக்கு வியர்த்துப் போய்விட்டதாம்.
அதேநேரத்தில் ஆசிரியரும் சந்தோஷமாகி, இனிமே எங்க வேண்டுமானாலும் கூட்டிப் போங்கள் என்று கூறிவிட்டு கூலாகிவிட்டாராம். மூன்றாம் ஆண்டை நெருங்கும் வேளையிலும், அந்த நிகழ்வை, அதே உணர்வுகளோடு அவர் விவரித்ததுதான் ஊடகவியலாளருக்கு இருக்கிற தணித்த குணம். வாட்ஸ் அப் வசதி அறிமுகத்தால் ஊடகத்துறைக்கு பேரழிவு ஏற்பட்டிருந்தாலும் கூட, அந்த நேரத்தில் வாட்ஸ் அப்.பின் முக்கியத்துவத்தை தான் உணர்ந்து கொண்டதாக நக்கீரன் ஆசிரியர் விவரித்தது ருசிகரமாக இருந்தது.
அதே நாளில் எனக்கு ஒரு துயரம் ஏற்பட்டது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கல்லூரி பேராசிரியை உள்பட, ஆளுநரின் அராஜகங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டவிரோத செயல்கள் என அனைத்தையும் தொகுத்து, அக்டோர் 9 ஆம் தேதியின்று வெளியாக இருந்த குமுதம் ரிப்போர்ட்டருக்கு ரெட் அலர்ட் என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி தயாரித்து இருந்தோம்.
அக்டோர் 8 திங்கள்கிழமை. அந்த இதழ் அச்சுக்கு அனுப்ப சில நிமிடங்கள் இருந்த நேரத்தில், அந்த கவர் ஸ்டோரியை மாற்றுங்கள் என்ற நிர்ப்பந்தம் எழுந்தது. வேறொரு கவர் ஸ்டாரியோடு நக்கீரன் ஆசிரியர் கைதான அதிகாலை குமுதம் ரிப்போர்ட்டர் வெளியானது. நொந்து போனேன். அந்த கவர் ஸ்டோரிக்காக சனி, ஞாயிறு, திங்கள் கிழமை என மூன்று நாள் உழைத்து இருந்தேன். அதில் என்னுடைய உழைப்பு மட்டுமல்ல. சில நண்பர்களை துன்புறுத்தி தகவல் பெற்றிருந்தேன்.
அந்தவகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு டெக்கான் கிரால்டில் பணியாற்றிய நண்பர் அருணை, நீண்ட தேடலுக்குப் பிறகு தேடிப்பிடித்து நிறைய தகவல்களைப் பெற்று அந்த கட்டுரையில் சேர்த்திருந்தேன். எல்லாம் வீணானது.. நக்கீரன் ஆசிரியர் கைதைவிட, நான் தயாரித்த ஆளுரைப் பற்றிய கவர் ஸ்டோரி வெளியே வராமல் கருவிலேயே கரைந்துபோனது, அதீத வலியை தந்தது.
தலைப்பு என்னுடையது அல்ல. ஆசிரியர் வைத்ததுதான். அவருக்கும் அந்த வேதனை இருந்தது. மனதை கட்டுப்படுத்த முடியாமல், போகிற போக்கில் செய்தி ரொம்ப ஆழமான கருத்தாக்தோடு இருந்தது என்று ஒரு பாராட்டை உதிர்த்தார். அதை உள்வாங்கி ரசிக்கும் மனநிலை கூட அன்றைக்கு இல்லை.
பேச்சுவாக்கில், தம்பி போல பாவித்த சபீர், கார்த்திகைச்செல்வன் உள்பட இளம்தலைமுறை ஊடகவியலாளர்களின் உழைப்புகளையும், அதன் மூலம் நக்கீரன் அடுத்த பரிணாமத்திற்கு சென்றிருக்க வேண்டிய முன்னேற்றத்தை, கெடுத்தவரையும் அடையாளப்படுத்தி ஆதங்கத்தோடு நினைவுக்கூர்ந்தார். அவரின் தம்பிகளான இருவரும், இன்றைக்கு மிகுந்த உச்சத்தை எட்டியிருக்கிறார்கள். திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாய் அவரும் நெகிழ்ந்தார்.
ஊடகவியலாளர் எல்லாவற்றையும் இழக்கலாம்.இழப்பதற்கு ஒன்றும் இல்லாமல் கூட போகலாம். ஆனால், காலமாற்றத்திற்கு ஏற்ப, தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது ஊடகவியலாளர்களின் அழகல்ல என்பதை அழுத்தமாக சொல்வது போலதான் இருந்தது நக்கீரன் ஆசிரியரின் ஒட்டுமொத்த உரையாடல்களும். அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களும் உண்டு. ஆனால், போராட்டக்குணம் என்ற ஆயுதத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன் என்ற மனஉறுதி, அவரது உயரத்தை விட பலமடங்கு உயர்ந்து நிற்பதை, அவரது ஒவ்வொரு சொல்லும், உடல்மொழியும் உணர்த்திக் கொண்டே இருந்தது.
கடந்து போகும் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்க்கையில் ஆயிரம் பாடங்களை நிகழ்த்திக் கொண்டே செல்கிறது. ஊடகவியலாளராக வாழ்வது தவமல்ல…அதே மனஉறுதியோடு ஆயுளை நிறைவது செய்தால், கரைந்து போகும் ஆத்மா, ஊடக அறத்தை அழுக்காக்காமல் அழகாக்கும்…