Sat. Nov 23rd, 2024
https://twitter.com/Udhaystalin/status/1378331286264160258?s=20

திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை அவர் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட திருமாவடி விநாயகர் கோயில் தெருவில் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஒவ்வொரு வீட்டில் இருந்த பெண்களிடமும், உதயநிதிக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் என்றுச் சொல்லி, தேங்காயும் கற்பூரத்தையும் அப்பகுதி திமுக.வினர் வழங்கினர். கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், ஆட்டோவில் உதயநிதி வர, அவரின் வாகனத்திற்கு முன்பும், பின்பும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் அணிவகுத்ததால், அந்த தெருக்களில் உள்ள பெண்கள் உள்ளிட்டபொதுமக்கள் திணறி விட்டார்கள்.

தேங்காயின் குடுமியில் கற்பூரத்தை கொளுத்திய அந்த தெரு பெண்கள் வீட்டு வாசலில் நின்று திருஷ்டி கழிப்பது போல, தேங்காயை சுற்றிவிட்டு, அதை உடைப்பதற்கு இடம் இல்லாததால், கற்பூரம் அணையும் வரை அப்படியே நின்றுக் கொண்டிருந்தனர். இதற்குள் உதயநிதியின் ஆட்டோ அந்த தெருவை கடந்து அடுத்த தெருவுக்குள் நுழைந்துவிட்டது.

அந்த பகுதியில் ஓர் தெருவில் அவர் இறங்கிச் சென்று வாக்கு சேகரித்த போது, அங்கிருந்த பெண்கள், உதயநிதி ஸ்டாலினை மறித்து, எங்கள் தெருவுக்கு குடிநீர் முறையாக வருவதே இல்லை. குழந்தைகள், வயதானவர்களுடன் வசித்து வரும் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக கோரஸாக கூறினார்கள். அவர்களுக்கு பதிலளித்த உதயநிதி, தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய வசதிகளும் முழுமையாக செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

அதன் பிறகு நடந்து சென்றே வாக்குசேகரிக்கவில்லை. ஆட்டோவில் தெரு, தெருவாக சுற்றி வந்து வாக்கு சேகரித்தார். இன்று காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த வாக்குசேகரிப்பு நண்பகல் 1 மணியளவில் முடிவடைந்தது.

தனது தொகுதியில் வாக்கு சேகரித்தது தொடர்பான இன்றைய நிகழ்வு குறித்த ஒரு புகைப்படங்கள் கூட உதயநிதியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்படவில்லை. அதற்கு மாறாக, நேற்றைய தினம் கோவை மாவட்டத்தில் உதயநிதி பேசிய பிரசாரக் கூட்டங்கள் புகைப்படங்கள் பதிவு வேற்றப்பட்டுள்ளன.

அதைவிட சிறப்பாக, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரைப் பற்றியும், பிரதமர் மோடியைப் பற்றியும் தான் அவதூறாக பேசவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தன்னிலை விளக்கம் கொடுக்கும் வீடியோ பதிவு ஒன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

பிரதமர் துன்புறுத்தியதால்தான் சுஷ்மாவும், அருண்ஜெட்லியும் இறந்து போனார்கள் என்று பிரசாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளது.

இப்படிபட்ட சூழலில், அவர்களின் புகாருக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் நேற்று சிங்காநல்லூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டபோது அந்த புகாருக்கு விளக்கம் அளித்தது போல ஒரு வீடியோ பதிவு, உதயநிதி ஸ்டாலினின் டிவிட்டர் பக்கத்தில் இன்றைய தேதியில் இடம் பெற்றுள்ளது.

திடீர் பல்டிக்கு காரணம் என்ன? பாஜக புகாரை கண்டு உதயநிதி ஸ்டாலின் பயப்படுகிறாரா ? என்று தமிழக பாஜக ஊடக தொடர்பாளர்கள் கிண்டலாக கேள்வி எழுப்புகின்றனர்.