Sat. Nov 23rd, 2024

கடலூரில் போட்டியிடும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கருத்துக் கணிப்புகளை கூட நம்பாமல், கரண்ஸி நோட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 ம் தேதி கடைசி நிமிடங்களில் கூட தன் தலையெழுத்து மாறிவிடும் அளவுக்கு கள நிலவரம் இருப்பபதால், ஆயிரம் ஆயிரமாய் கரண்ஸி நோட்டுகளை இறைத்து வருகிறாராம். அவரின் பயத்திற்குக் காரணம், திமுக வேட்பாளர் ஐயப்பன்தான். எம்.சி.சம்பத்திற்கே அரசியல் கற்றுக் கொடுத்தவர், தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவதைக் கண்டுதான் பதற்றமாகவே இருக்கிறாராம்.

2011 ஆம் ஆண்டுக்கு முன்பு எம்.சி. சம்பத், ஐயப்பனின் சிஷ்யராகதான் இருந்திருக்கிறார். அரசியல் நெளிவு சுழிவுகளை எல்லாம் அவர்தான் சம்பத்திற்குகே கற்றுத் தந்திருக்கிறார். கடலூரில் தனது வளர்ச்சி பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உச்சம் தொட பாதை வகுத்துக் கொடுத்த ஐயப்பனை எதிர்ப்பதுதான் அமைச்சர் சம்பத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாம்.

2001 சட்டமன்றத் தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் வெற்றிப் பெற்ற எம்.சி.சம்பத், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். 2006 தேர்தலில் கடலூரில் திமுக சார்பில் வெற்றிப் பெற்றவர் ஐயப்பன். 2011ல் மீண்டும் கடலூர் தொகுதியில் போட்டியிட ஐயப்பனுக்கு திமுக.வில் வாய்ப்பு தரவில்லை. இதனால் மனம் வருத்தம் அடைந்த ஐயப்பன், நெல்லிக்குப்பம் தொகுதியைச் சேர்ந்த எம்.சி.சம்பத்தை கடலூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆலோசனை வழங்கியதாகவும், அந்த தேர்தலில் எம்.சி.சம்பத் வெற்றிப் பெற பொருளாதார ரீதியான உதவிகளையும் ஐயப்பன் செய்ததாகவும் இப்போதும் கடலூரில் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படி தனது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த ஐயப்பன், தற்போதைய தேர்தலில் கடும் போட்டியாளராக மாறியிருப்பதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத். கருத்துக் கணிப்புகளில் கூட அதிமுக.தான் வெற்றிப் பெறும் என்று தகவல் வெளியான பிறகும், கடைசி நிமிடம் வரை தனது வெற்றி நிச்சயமல்ல என்ற அவரின் உள்ளுணர்வு எச்சரிப்பால், கரண்ஸி நோட்டுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

முதல் தவணையாக, மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆட்டோ தொழிற்சங்கம், கூலி தொழிலாளர்கள் சங்கம் என கடலூரில் உள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ஆயிரம் ரூபாயை வாரி இறைத்துவிட்டாராம் எம்.சி.சம்பத்.

அதிமுக.வுக்கு நிச்சயம் ஓட்டுப் போடுவார்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு 500 ரூபாயும். பணம் அதிகமாக கொடுத்தால்தான் அதிமுக.வுக்கு ஓட்டுப்போடுவார்கள் என்ற பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு 1000 ரூபாயும் முதல் தவணையாக விநியோகிக்கப்பட்டு விட்டதாம்.

ஆனால், இந்த நிமிடம் வரை திமுக தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படாததால், ஐயப்பனின் தீவிர ஆதரவாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். திமுக.வில் இருந்து அதிமுக.வுக்குச் சென்று பின்பு மீண்டும் திமுக.வுக்கு திரும்பியவர் ஐயப்பன். அவரா திமுக வேட்பாளர் என்று அதிருப்தியோடு இருந்த இள.புகழேந்தி ஆதரவாளர்கள் கூட, தங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற வெறியோடு இருப்பதால், உட்கட்சிப் பூசலை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு ஐயப்பனின் வெற்றிக்காக கடுமையாக களப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.சி.சம்பத்தோடு ஐயப்பனை ஒப்பிட்டு பேசும் அரசியல்வாதியாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும், நல்ல மனுஷன் ஐயப்பன். பழகுவதற்கு இனிமையானவர். நன்றி மறவாதவர். கடலூர் வளர்ச்சிக்கு உண்மையாக உழைப்பவர் என்று மனம் திறந்து பேசுகிறார்களாம். அதே குரல்கள் எம்.சி. சம்பத்தைப் பற்றி பேசும் கரித்துக் கொட்டுகிறதாம்.

கடந்த பிப்ரவரி மாதத்திற்கு முன்பாக, கடலூரில் மழை நீர் வடிகால் கால்வாயை 200 கோடி ரூபாயில் நிறைவேற்றியதாக புளுகிய அமைச்சர் எம்.பி.சம்பத், பிப்ரவரி மாதத்தில் கடலூர் நகரே வெள்ளத்தில் மூழ்கியபோது, தலைமறைவாகிவிட்டாராம். அப்படியெல்லாம் ஆபத்து காலங்களில் ஓடி ஒளியக் கூடியவர் அல்ல ஐயப்பன் என்ற பிரசாரமும் , கடலூரில் மூளை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருப்பதால், நகர வாக்குகள் கடைசி நிமிடத்தில் கூட திமுக.வுக்கு பெருமளவில் மாறிவிடும் என கதறுகிறாராம் எம்.சி.சம்பத்.

பத்தாண்டுகளாக அமைச்சராக இருந்த போதும் கடலூர் வளர்ச்சிக்காக சொல்லிக்கொள்ளும்படியாக எந்த சாதனையையும் செய்யாதவர் என்ற அதிருப்தியும், குறிப்பாக வெள்ளம், புயல் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கடலூரை பாதுகாக்க நிரந்தரமான திட்டங்களையும் நிறைவேற்றாதவர் என்ற கோபம் அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு எதிராக அலையடித்துக் கொண்டிருக்கிறதாம். மேலும், வன்னியர்களுக்கான தனி உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் இ.பி.எஸ் ஒன்று சொல்ல, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும், உதயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் முரண்பாடாக பேசி வருவதும், கடலூரில் உள்ள வன்னியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இந்த அதிருப்தி திமுக.வுக்கு சாதமாக மாறும் என்ற கணக்கிலும், கஞ்சத்தனம் பண்ணமாட்டார், வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாயாவது கடைசி நிமிடத்தில் ஐயப்பன் வாரி வழங்குவார் என்று திமுக நிர்வாகிகளின் எதிர்ப்பார்ப்போடு இருக்கின்றனர். எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களை குறி வைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.சி. சம்பத்தை வீழ்த்துவதற்காக தனிப்பட்ட வியூகம் எதுவும் அமைக்கவில்லை.

இருந்தாலும் அதிமுக.வினருக்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் வெறித்தனமாக களப்பணியும், மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் அதிமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையாலும் குறைந்த வாக்குகளிலாவது எம்.சி.சம்பத்தை வீழ்த்தி, அவருக்கு மட்டுமல்ல, கடலூரில் உள்ள அரசியல் வாதிகளுக்கும் தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிச்சயம் நிரூபிப்பார் ஐயப்பன், அவரின் வெற்றி கடலூருக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே மிகப்பெரிய அதிர்ச்சியாக அமையும் என்று தீர்க்கமான குரலில் பேசுகிறார்கள் கலைஞர் மு.கருணாநிதி காலத்து திமுக விசுவாசிகள்.