Sat. Nov 23rd, 2024

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பாமா வேட்பாளர் திலகபாமா, ஒப்பனை களையாமல் தொகுதியை சுற்றி வரும் நிலைதான். திமுக.வின் ஆகப் பெரிய ஆளுமையான ஐ.பெரியசாமி, அந்த தொகுதியை நிரந்தமாக பட்டா போட்டு வைத்திருக்கிறார். பாமக.வின் பொருளாளராக இருந்தாலும் கூட தேர்தல் செலவுக்கு பணம் பற்றாக்குறையாக இருக்கிறது என்று திலகபாமா தகவல் அனுப்பினால் கூட கரண்ஸி கட்டுகளை தாரளாமாக வாரி வழங்கும் அளவிற்கு பெருந்தன்மையான குணத்திற்குச் சொந்தக்காரர் ஐ.பெரியசாமி…

பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏற்கெனவே இருமுறை வெற்றிப் பெற்றிருக்கிறார். டாக்டர் ராமதாஸின் மனசாட்சியாக இருந்தாலும் கூட தொகுதி மக்களுக்கு, குறிப்பாக வன்னியர்களுக்கு, அதிலும் சிறப்பாக பாமக வினருக்கு ஒரு நன்மையும் செய்ததில்லை என்பதுதான் பரலான குற்றச்சாட்டு. பென்னாகரத்திலேயே அவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்தான், 2006 தேர்தலில் மேட்டூருக்கு தாவினார் ஜி.கே.மணி. இப்போது மீண்டும் பென்னாகரத்திலேயே போட்டியிடுகிறார். இருந்தாலும் பாமக.வினரிடம் கோபம் தணியவில்லை.

இதுதான் கடைசி தேர்தல் என்று சொல்லாமல், பென்னாகரத்தில் இனிமேல் போட்டியிட மாட்டேன் என கெஞ்சி வருகிறார் ஜி.கே.மணி. அவரின் நாடகத்தை இனியும் பென்னாகரம் பாமக.வினர் தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவு காட்டும். பாமக உட்கட்சிக்குள் நடக்கும் வெட்டுக்குத்துவை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் சிட்டிங் திமுக எம்எல்ஏ இன்பசேகரன், தோளில் கிடக்கும் கருப்பு, சிகப்புத்துண்டை, தலையில் பரிவட்டம் போல இப்போதே கட்டிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறாகள் பென்னாகரம் திமுக நிர்வாகிகள்.

ஜெயங்கொண்டத்தல், பாமக.வின் வழக்கறிஞர் பாலு, தனது வெற்றிக்ககாக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்து போடடியிடும் திமுக.வேட்பாளர் கே.எஸ். கண்ணன், வக்கீல் பாலுவை விரட்டிக் கொண்டே இருக்கிறார். காடுவெட்டி குருவின் மனைவி சுவர்ணலதாவின் கண்ணீர் பிரசாரம், பாலுவின் வெற்றியை தடுத்து விடும் என உறுதியாக நம்புகிறார் கண்ணன். ஆனால், தொகுதியில் உள்ள நடுநிலை வாக்காளர்களின் பார்வையோ, பாவமய்யா வக்கீல் பாலு. அவரு நல்ல மனுஷன். இருக்கிற கட்சியோடு தலைமைதான் சுயநலமா இருக்கு என்ற பரிதாப பார்வையை பாலு பக்கம் வீசுகிறார். வெற்றிச் செய்தியோடு வக்கீல் பாலு சென்னை திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை…

தருமபுரி பா.ம.க வேட்பாளர் வெங்கடேசன் பரிதாபமாக தொகுதியில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு அறிவிப்பு தொடக்கத்தில் காற்று அடைந்த பலூன் மாதிரி, பிரம்மாண்டமாக காட்சியளித்தது. அதுதொடர்பாக அமைச்சர் உதயகுமார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்மையில் தெரிவித்த கருத்துகள், ஊசியாய் பலூனை பதம் பார்க்க, தருமபுரியில் திமுக கொடி உயர, உயர பறக்கத் தொடங்கிவிட்டது. சிட்டிங் எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணியம், ஸ்டாலின்தான் வரராரு., விடியலதான் தரப் போராரு என வாக்குப்பதிவுக்கு முன்பாகவே உற்சாமாக பாட தொடங்கிவிட்டார்.

சேலம் மேற்கில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா. அருள், டாக்டர் ராமதாஸின் செல்லப்பிள்ளைப் போன்றவர். அவர் வெற்றிப் பெற வேண்டும் என்பதற்காக, சேலம் மாவட்ட பாமக நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக சேலம் மேற்கில் குவிய வைத்துள்ளார். அதிமுக கூட்டணி பலமாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட வன்னியரல்லாத பிற சமுதாயத்தினர் ஒருமித்த உணர்வோடு இரா அருளுக்கு எதிராக திரும்புகின்றனர். இதனால், திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரன், உற்சாகமாகவே இருக்கிறார். திமுக.வில் சீட் வாங்குவதற்காக சேலத்தின் முக்கிய பிரமுகருக்கு லம்பாக கொடுத்த நன்கொடைக்கு கேடு வராதுபோல.

மேட்டூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சதாசிவம், தொடக்கம் முதலே உற்சாமாகவே இருக்கிறார். அந்த தொகுதியில் வன்னியர் பெரும்பான்மையாகவுள்ளதாலும், டாக்டர் ராமதாஸின் அதிதீவிர தொண்டர்களும் வெறித்தனமாக மாம்பழத்திற்கு பிரசாரம் செய்தவாலும், திமுக வேட்பாளர் சீனிவாசப் பெருமாளை பின்னுக்கு தள்ளிவிடடார் பாமக வேட்பாளர்.

நெய்வேலியில் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ சுபா.ராஜேந்திரனுக்கு எதிராக அதிருப்தி அலை பெரிதாக இல்லை. அங்குள்ள என்.எல்.சி நிறுவனத்தில் மத்திய பாஜக அரசு செய்யும் தகிடுதத்தங்கள், தொகுதி முழுவதும் பாஜக.வுக்கு எதிரான எதிர்ப்பு அலையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதோடுஅதிமுக அதிருப்தி அலையும் சேர, திமுக சிட்டிங் எம்.எல்.ஏ., இப்போதே விசிலடித்து வெற்றியை கொண்டாடி வருகிறார். பாவம் பாமக வேட்பாளர் ஜெகன். வன்னியர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விழுந்தாலும் கூட வெற்றிமாலை கழுத்தில் விழாது என்பதால் நொந்து போய் இருக்கிறார்.

மயிலம் தொகுதியில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. மாசிலாமணிக்கு ஆதரவான மேள தாளம்தான் களைகட்டிக் கொண்டிருக்கிறது. அந்த சத்தத்தில் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு பெருமையெல்லாம் தொகுதி மக்கள் காதிலேயே விழாததால் பாமக வேட்பாளர் சிவக்குமார் தொண்டை கிழிய பரிதாபமாக கத்திக் கொண்டிருக்கிறார்.

வந்தவாசி தொகுதியில் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார், படு உற்சாகமாக இருக்கிறார். கணிசமாக இருந்த அதிருப்தி அலையையும் சரிகட்டி, பாமக.வுக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யவும் வகுத்த வியூகம் வெற்றிப் பெற்றுவிட்டதால், சென்னைக்கு பறக்க தயாராகவே இருக்கிறார் தற்போதைய திமுக. எம்.எல்.ஏ. அவருக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் பாமக வேட்பாளர் முரளி சங்கர்.

விருத்தாசலத்தில் காங்கிரஸின் கை பா.ம.க.வின் மாம்பழத்தை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாமக வேட்பாளர் கார்த்திகேயனை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது என்கிறார்கள் மஞ்சள் சட்டை மாவீரர்கள். திமுக கூட்டணி பலத்தால், வெற்றிக் கோட்டை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் கதர்ச்சட்டை கதாநாயகன் ராதாகிருஷ்ணன். தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவின் புண்ணியத்தால், காங்கிரஸ் கொடி, விருத்தாசலத்தில் உயர பறக்கிறது.

செஞ்சியில் பாமக வேட்பாளர் ராஜேந்திரன், அதிமுக கொடியோடும் மஞ்சள் படையோடும் வலம் வந்த போதும், திமுக சிட்டிங் எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தான் பக்கமே வெற்றிக் காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது.

கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் பிச்சாண்டி. முன்னாள் திமுக அமைச்சர். பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள்தான் வெற்றியை தீர்மானிப்பார்கள் என்றபோதும், பிற சமூக மக்களை ஒருங்கிணைப்பதில் வெற்றிப் பெற்றிருக்கிறார் பிச்சாண்டி. அவரை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருக்கும் பாமக வேட்பாளர் செல்வக்குமார், டாக்டர் ராமதாஸின் வார்த்தைகளை பாமக.வினர் மீற மாட்டார்கள் என்பதால், நூலிழையிலாவது வெற்றி வாய்ப்பை பெற்றுவிட முடியும் இருக்கிறார் செல்வக்குமார். மே 2 ஆம் தேதி வரை பிச்சாண்டிக்கு திக்.திக்.தான்.

சங்கராபுரம் தொகுதியில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ உதயசூரியன், கோடை வெயிலைப் போல தகதகவென ஜொலிக்கிறார். அவரை சுற்றி வலம் வரும் ஒளிவெள்ளத்தில் பாமக வேட்பாளர் டாக்டர் ராஜாவை தேட வேண்டியிருக்கிறது. உச்சியிலேயே எப்போதும் இருக்கும் உதயசூரியனால், பாம்பழம் சூம்பி போய் கிடக்கிறது.

மயிலத்தில் பாமக வேட்பாளர் சிவக்குமார், திமுக சிட்டிங் எம்.எல்.ஏ இரா.மாசிலாமணியோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். அதிமுக எனும் வலுவான கூட்டணியாக இருந்த போதும் எளிய மனிதராக காட்சியளித்துக் கொண்டிருக்கும் திமுக வேட்பாளரே, தங்கள் தொகுதியின் கதாநாயகன் என மக்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

திருப்பத்தூரில் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, உற்சாகமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். செல்லும் இடமெல்லாம், பெண்கள் உள்ளிட்டோர் வெற்றித் திலகத்தை சூட்டுவதால், திமுக கொடி, தொகுதி முழுவதும் பட்டொளி வீசி பறக்கிறது. பழைய துணிகளை காய போட்டதைப் போல, மஞ்சள் கொடி கசங்கி போய் இருப்பதால், பாமக வேட்பாளர் டி.கே.ராஜா சோக கீதம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

ஆற்காட்டிலும் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனின் லொள்ளுவை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் பாமக வேட்பாளர் இளவழகன். முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் ஈஸ்வரப்பனின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு ஈடுகொடுகக முடியாமல் திண்டாடுகிறார் இளவழகன்.

சோளிங்கரில் பாமக காற்று பலமாகவே வீசிக் கொண்டிருக்கிறது. பாமக வேட்பாளர் கிருஷ்ணனின் பிரசார வாகனம் வெற்றிக் கோட்டை நோக்கி வேகமாகவே பறந்துக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தின் நிலையைப் பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகளே பரிதாபப்படுகிறார்கள்.

திருப்போரூரில் திமுக கூட்டணி வேட்பாளரான விசிக எஸ்.எஸ்.பாலாஜி, பானை சின்னத்தை தூக்கி கொண்டு அலைகிறார். அவரின் வியர்வைக்கு வாசனைத் திரவியம் பரிசாக கிடைக்கும் என்றாலும் கூட, பாமக வேட்பாளரான திருக்கச்சூர் ஆறுமுகம், தனது ஒட்டுமொத்த அரசியல் அனுபவத்தையும் காட்டி, தொகுதி மக்களின் மனதை கரைத்துக் கொண்டிருக்கிறார். பானையா, மாம்பழமா.. ஏப்ரல்6 ஆம் தேதி வரை மல்லுகட்டுதான்.

காஞ்சிபுரத்தில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார், அதிமுக நிர்வாகிகளை தாஜா செய்வதிலேயே நிறைய நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார். அவரை எதிர்த்து களத்தில் நிற்கும் திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. எழிலரசனும்,கோடையில் கூட கொடைக்கானலில் இருப்பதைப் போல கூலாக தொகுதியைச் சுற்றி மகிழ்ச்சியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் போட்டியிடும் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தொகுதியில் வாக்குசேகரிப்பில் முழுமையாக ஈடுபடாத போதே, அவரை எம்.எல்.ஏ., என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள் தொகுதி மக்கள். அவரை எதிர்த்து யாருங்க போட்டியிடுறாங்கன்னு மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி.

பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார், திமுக சிட்டிங் எம்.எல்.ஏ கிருஷ்ணசாமியின் அதிரடி முன்பு அடிபட்ட பாம்பு போல சுருண்டு கிடக்கிறார் பாமக வேட்பாளர் ராஜமன்னார்.

கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷை ஆட்டத்திற்கு வராதே என விரட்டிக் கொண்டிருக்கிறார் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன். அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ விஜயகுமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், அவரோடு சேர்ந்து அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடக்கிவிட்டனர்.

மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு எதிராக சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்டோர்களும் அக்னிப் பார்வை காட்டுவதால், காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்குமார் பலமாக சிரித்துக் கொண்டே, தொகுதியைச் சுற்றி வருகிறார்.