Sat. Nov 23rd, 2024

உசிலம்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

பெண்களை தெய்வமாக மதிக்கும் தமிழகத்தில், இன்றைக்கு ஆ.ராசாவும், எடப்பாடி பழனிச்சாமியும் எப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். தன் அம்மாவை தவறாக ராசா பேசிவிட்டார் என்று முதல்வர் பழனிச்சாமி அழுகிறார். உங்களை ஒருத்தவங்க முதல்வராக்கிட்டு, சிறைக்கு போனாங்களே ஞாபகம் இருக்கா ? தவழ்ந்து வந்து தரையில விழுந்தீங்க. இன்னிக்கு சசிகலா யார்னு கேள்வி கேட்குறீங்க. நீங்களே ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துட்டு, இப்ப பெண்களுக்காக அழுவது போல பேசுறீங்க, இது நியாயமா?

ஆட்சி அதிகாரத்தை நல்லவர்கள் கையில் கொடுங்கள். துரோக கூட்டணி பண மூட்டையோடு அலைவதற்கு இந்த தேர்தலோடு முடிவு கட்ட வேண்டும்.

உள்ஒதுக்கீடு வழங்குவதாக கூறி 69 சதவிகித இடஒதுக்கீட்டில் குளறுபடி செய்யப்பட்டுள்ளது. அமமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுத்து, அனைத்து சாதியினிருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் அமைக்க அமமுக.வுக்கு வாக்களியுங்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றிப் பெறுவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், காந்தி தாத்தா படம் போட்ட பணத்தை வைத்துக் கொண்டு தமிழின துரோகிகள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கிருந்து வந்தததோ, அங்கேயே திரும்பிச் செல்லும் என்பார்கள். அந்த வகையில், மக்களிடம் இருந்து திருடப்பட்ட பணம், மீண்டும் மக்களுக்கே திரும்பி வருகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு உங்களுக்கு உழைக்கிறவர்களுக்கு வாக்களியுங்கள்.

ஒரு கட்சி ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்கிறது. மற்றொரு கட்சி ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்போம் என்றிர்கள். யார் வீட்டுப் பணம்.. அவர்கள் அப்பன் வீட்டுப் பணம் பணத்தையா கொடுக்கப் போகிறார்கள். அரசு கஜனாவே காலியாக இருக்கிறது.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று நாங்கள் வாக்குறுதி வழங்கியிருக்கிறோம். இது நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிதான். உங்களுக்கு ஆயிரம் ரூபாய் வேணுமா? உங்க வீட்டுக் குழந்தைக்கு வேலைவாய்ப்பு வேண்டுமா? 500. 1000 ரூபாய் பணம் கொடுக்கிறார்கள். வாங்கிக்குக்கிட்டு அவர்களுக்கு ஓட்டுப் போட்டால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும்.

இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.