Sat. Nov 23rd, 2024

சேலத்தில் நடைபெற்ற மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூடடணி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.:

இன்றைக்கு இருக்கும் அதிமுக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக என்று தமிழக மக்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது. இன்றைக்கு இருப்பது பாஜக எனும் முக கவசம் அணிந்திருக்கும் அதிமுக.

அ.தி.மு.க.வின் முகத்தில் உள்ள முகக் கவசத்தை நீக்கிப் பார்த்தால் மதவெறிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க.வின் உண்மை முகம் தெரியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இருந்த பழைய அதிமுக போய்விட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினால் இயக்கப்படும் அ.தி.மு.க தான் தமிழகத்தில் உள்ளது. 

தமிழகத்தின் முதல்வராக தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு பதவி ஏற்கப் போகிறார். மே 2 ஆம் தேதி வரை காத்திருக்காமலும், தேர்தல் முடிவுகளை பார்க்காமலும் என்னால் இதனை உறுதியாக சொல்ல முடியும்.

அதற்கு காரணம் என்னவென்றால், தமிழக மக்களாகிய நீங்கள் இப்போதே எடுத்துவிட்ட தீர்மானம் என்பதுதான்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் காலில் விழுவதற்கு தமிழர்கள் ஒருவர் விரும்ப மாட்டார்கள். ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மாறாக, தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் முதல்வர் பழனிசாமியை காலில் விழ மத்திய அரசு வற்புறுத்திக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி காலிலோ, அமித்ஷா காலிலோ விழாதவரின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்றால், அது திமுக.வினரால் மட்டுமே, அதுவும் மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும். அந்த நிலை தான் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் நிச்சயம் உருவாகும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.