Sun. Nov 24th, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய முதல் நாளிலேயே, திரையுலகில் இருந்து முதல் நபராக அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் நடிகை ஸ்ரீபிரியாதான். 1974 ல் இருந்து 1984 வரை தென்னிந்திய திரையுலகில் உச்சபட்ச நடிகையாக இருந்தவர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெய்சங்கர் உள்ளிட்டமுன்னணி நடிகர்களுடன் நடித்து, மாபெரும் புகழ் பெற்றவர்.

2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் தொடக்கப்பட்ட நாளில் இருந்தே கமல்ஹாசனுக்கு உறுதுணையாக நின்று, அறிவார்ந்த விஷயங்களை மட்டுமே பேசி தனித்த ஆளுமையாக அடையாளம் காட்டிக் கொண்டு வருபவர் ஸ்ரீபிரியா. மநீம தொடக்க நிகழ்வின் போது கமல்ஹாசனனோடு கைகோர்த்த பிரபலங்கள், ஒருவர் பின் ஒருவராக விலகியபோதும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கமல்ஹாசனோடு இணைந்தே பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீபிரியா.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மநீம.த்திற்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். நடிகையாக இருந்த காலத்திலேயே துணிச்சல் மிக்கவர் என்பதும், எவ்வளவு செல்வாக்கு மிக்க நபராக இருந்தாலும், அவர்கள் அநீதிக்கு துணைப் போனால், அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதற்கும், அவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் ஒருபோதும் தயங்கியது கிடையாது என்பது, திரையுலகத்தில் அவரோடு சமகாலத்தில் பயணித்தவர்களின் புகழாராமாக இன்றைக்கும் இருக்கிறது.

ஆனால், தன்னலம் பாராமல், தன்னுடைய சொந்த காசை செலவழித்து, மக்கள் நீதி மய்யத்தின் வளர்ச்சிக்காகவும், கமல்ஹாசனின் வெற்றிக்காகவும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தனக்கு உரிய மரியாதை கட்சியில் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள், ம.நீ.ம. தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர்.

இந்த தகவலில் உண்மை இருக்கிறதா என்ற கேள்வியோடு ஸ்ரீபிரியாவின் நெருங்கிய தோழிகள் சிலரிடம் கேட்டோம். நீண்ட யோசனைக்குப் பிறகு அவர்கள் மனம் திறந்து பேசினார்கள்.

தான் இருக்கும் இடத்தில் தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருபவர்,ஸ்ரீபிரியா என்பதால்தான், அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தவுடன், அவரது வழியில் நாங்களும் ம.நீ.மய்யத்தில் இணைந்தோம். கடந்த சில நாட்களாக, மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல்பாடுகளோடு முரண்பாடு ஏற்பட்டு, வருத்தத்தில் ஸ்ரீபிரியா இருப்பதாக அறிகிறோம்.

மக்கள் நீதி மய்யத்தில் கமல்ஹாசனுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை கண்டு மனம் மகிழும் ஸ்ரீபிரியா, அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, கட்சிக்குள் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கும், அவரவருக்கு தனித்தனியாக ஒரு விசுவாசமிக்க கூட்டத்தை சேர்ப்பதற்காகவும் அவரோடு நிழலாக இருக்கும் பிரபலங்கள், சுயநலத்தோடு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டு, அதிருப்தியடைந்துள்ளார் ஸ்ரீபிரியா.

தனித்துவமிக்க அடையாளங்களோடு, ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக கருத்துகளை வெளிப்படையாக கூறி வரும் ஸ்ரீபிரியா, மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தை பிடிப்பதற்காக, திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் சதி வேலைகளை கண்டு மனத்திற்குள் கொந்தளிக்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.

தன் மனதில் பட்டதை நேரிடையாக கமல்ஹாசனிடமே தெரிவிக்கக் கூடிய ஸ்ரீபிரியா, தனது மனக்குமறலை கமல்ஹாசனிடம் தெரிவித்தாரா அல்லது அவர் தெரிவித்த பிறகும், இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா, கமல்ஹாசன். அதனால் அதிருப்தியில் உள்ளாரா என்ற கேள்விகள் எங்கள் மனதிலும் இருக்கிறது.

ஒரு எல்லைக்கு மேல் ஸ்ரீபிரியாவிடம் கூட நெருங்கி எங்களால் கூட பேச முடியாது. அந்தளவுக்கு தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு வாழ்பவர் அவர். அதனால், அவரிடம் மனம் விட்டு எங்களால் கூட பேச முடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தனக்கோ, மக்கள் நீதி மய்யத்தில் உள்ள தொண்டர்களுக்கோ எந்தவொரு அவமானம் ஏற்பட்டாலும் கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் மல்லுக்கு நிற்பவர் ஸ்ரீபிரியா என்பதால், அவரே மனம் திறக்கட்டும் என்று அமைதியாக இருக்கிறோம்.

ஸ்ரீபிரியா விரும்பி கேட்டபடியே, மைலாப்பூர் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதைப் பற்றியோ, கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது பற்றியோ. அவருக்கு வாழ்த்து தெரிவித்தோ, தனது டிவிட்டர் பக்கத்தில் எந்தவொரு தகவலையும் ஸ்ரீபிரியா வெளியிடவில்லை. மகளிர் தினத்திற்குப் பிறகு டிவிட்டர் பக்கத்தில் எந்தவொரு பதிவையும் அவர் பதிவிட வில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, ஸ்ரீபிரியா வருத்தத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இந்த நேரத்தில் ஸ்ரீபிரியாவே முன்வந்து பேச வேண்டும். அதுவரை, மக்கள் நீதி மய்யத்தின் மேல் மட்ட தலைவர்களிடையே நடந்து கொண்டிருக்கும் பனிப் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஸ்ரீபிரியாவோடு இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சிங்கப் பெண்ணே… மனதிற்குள் உள்ள குமறல்களை கொட்டு தீர்த்துவிடுங்கள்…