அதிமுக.வில் சாதாரண தொண்டரும் எம்.எல்.ஏ., ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன் முதலமைச்சராக கூட ஆகலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வாய் கிழியப் பேசி, திமுக.வை வம்புக்கு இழுத்தார்கள். ஆனால், அதிமுக சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் லட்சணத்தைப் பார்த்தால், இருவரும் சேர்ந்து அதிமுக தொண்டர்களின் காதில் மட்டுமல்ல, பொதுமக்களின் காதுகளிலும் முழம், முழமாக எவ்வளவு பூ சுற்றியிருக்கிறார்கள் என்பதை சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ள முடியும்..
அதிமுக வேட்பார்கள் பட்டியலில், திருச்சியல் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களைப் பார்த்து, அந்த மாவட்டத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் ரத்தம் கொதிக்க, அதிமுக.வின் இரட்டை தலைமைகளை கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய ஹாட் நியூஸ்.
முதலில் அதிக அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களைப் பார்ப்போம்.
மணப்பாறை தொகுதிக்கு தற்போதைய எம்.எல்.ஏ., வான இரா சந்திரசேகரனுக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2006 முதல் தற்போது வரை எம்.எல்.ஏ. வாக தொடரும் இவர், இரண்டு முறை பதவி கிடைத்தபோதும், பத்தாண்டுகளில் தொகுதிக்கு பெயர் சொல்லும்படி ஒரு வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்ற அதிருப்தி தொகுதி முழுவதும் பரவிக் கிடக்கிறத. மேலும், அவரின் உடல்நிலையும் கூப்பிட்ட குரலுக்கு ஓடும் அளவக்கு ஆரோக்கியமாக இல்லை என்கிறார்கள் அதிமுக.வினர். இரட்டை இலை செல்வாக்கை விட, எம்.எல்.ஏ, மீதான அதிருப்தியே இலையை கருக வைத்துவிடும் என்கிறார்கள் சோக குரலில் மணப்பாறை அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
ஸ்ரீரங்கம் தொகதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதிக்கு வாய்ப்பு தரவில்லை. 2015 ம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பதவி விலகியதையடுத்து, நடைபெற்ற இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2016 ல் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததுடன், அமைச்சர் பதவியும் தேடி வந்தது. அதிமுக.வில் சாதாரண நிலையில் இருந்த வளர்மதிக்கு, எம்.எல்.ஏ., பதவியும் அமைச்சர் அந்தஸ்தும் கிடைத்த போதும், தொகுதிக்கோ, அதிமுக தொண்டர்களுக்கோ ஒன்றும் செய்யவில்லை என்ற புகார்கள் ஏராளம். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, ஸ்ரீரங்கத்தில் சின்ன முணுமுணுப்பு கூட இல்லை.
மாற்று வேட்பாளராக , முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 91 96 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் சிக்கியவர். 2010 ல் வழக்கில் இருந்து விடுதலை பெற்றவர். இடைப்பட்ட காலத்தில் அதிமுக.வில் நிலைத்து நிற்காமல், தமிழர் பூமி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார்.அதுவும் போணி ஆகாததால், தேமுதிக.வில் இணைந்தார். அதிலிருந்து விலகி மீண்டும் அதிமுக.வில் இணைந்தார்.
2011 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ., ஆனார். ஆனால், அவருக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் டம்மியாக வைத்திருந்தார் ஜெயலலிதா. 2016 தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. நல்ல பிள்ளையாக இருந்தார். முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணனுக்கு அவரது சமுதாயத்தில் நல்ல பெயர். திருச்சியில் பரவலாக அந்த சமுதாயத்தினர் செல்வாக்கோடு இருக்கிறார்கள்.
திருச்சியில் திமுக முன்னணி தலைவர் கே.என்.நேருவின் அரசியல் விளையாட்டுகளுக்கு ஈடு கொடுப்பார் என்று கருதியே இவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் வேட்பாளராக அறிவித்துள்ளார் என்கிறார்கள், தலைமைக் கழக நிர்வாகிகள்.
இவரும், மணச்சநல்லூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படடுள்ள மு.பரஞ்சோதியும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்துள்ளனர். இருவரின் மனைவியும் சகோதரிகள் என்பதால், அண்ணன், தம்பி என்ற சகலை உறவைக் கொண்டவர்கள். ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகளியே புகைச்சல் அதிகமாக இருக்கிறது. இருப்பினும், பந்தா இல்லாதவர், பழகுவதற்கு இனிமையானவர் என்பதால், கு.ப.கிருஷ்ணனுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் என்கிறார்கள், அதே நிர்வாகிகள்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு வி.பத்மநாபன் என்ற புதியவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார், (திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்). சிங்கத்தின் முன்பு எலியை நிறுத்தியதைப் போல இருக்கிறது என்கிறார்கள் தொகுதி அதிமுக.வினர். திமுக முன்னணி தலைவரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவை எதிர்த்து, இவர் களம் காண வேண்டும். வாய்ப்பு இல்லை ராஜா என்று பத்மநாபனைப் பார்த்து அதிமுக.வினரே பரிதாப்படுகின்றனர். மார்ச் 7 ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற திமுக.வின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் பார்த்து, வெளி மாவட்ட திமுக தொண்டர்களே, கே.என்.நேருவை தலையில் வைத்து கொண்டாடும் போது, திருச்சி மேற்கு தொகுதி திமுக தொண்டர்கள் எவ்வளவு வெறித்தனமாக வேலைப் பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி பம்முகிறார்கள், திருச்சி அதிமுக நிர்வாகிகள்.
திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி என் நடராஜன்(, திருச்சி மாநககர் மாவட்ட செயயலாளர்) மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் கெட்டப் பெயரை சந்தித்துள்ளார். இவரின் சாதனைகளை விட, சோதனைகளும், வேதனைகளும் அதிகம் என்கிறார்கள், திருச்சி மாவட்ட அதிமுக.வினர். நடராஜனை எதிர்க்க பலம் பொருந்திய வேட்பாளர் தேவையில்லை, சாதாரண ஒரு திமுக தொண்டரை நிறுத்தினால்கூட, திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக. கொடி வெற்றி முரசு கொட்டும் என்று உற்சாகமாக பாடுகிறார்கள், திருச்சி மாவட்ட திமுக. நிர்வாகிகள்.
திருவெறும்பூர் தொகுதியில் முன்னாள் எம்.பி. ப.குமார் (திருச்சி புறநககர் தெற்கு மாவட்ட செயலாளர் ) போட்டியிடுகிறார். 50 சதவிகிதம் நல்ல மனிதர் என்றாலும், இவரை எதிர்த்து திமுக வேட்பாளராக களமிறங்க கூடியவர் சிட்டிங் எம்.எல்.ஏ.வான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. போட்டி கடுமையாக இருந்தாலும், மகேஷ் வெற்றி பெறுவார் என்பதும், திமுக அமைச்சரவையில் அவருக்கு இடம் உண்டு என்பதாலும், மகேஷ் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்பது இன்றைய தேதியின் கள யதார்த்தம்.
லால்குடி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள புள்ளம்பாடி வடக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் டி. ராஜாராம் , டம்மி பீஸ்… ஒற்றை வார்த்தையில் சொல்லுகிறார்கள் லால்குடி அதிமுக. நிர்வாகிகள். இந்த தொகுதியில் மூன்று முறை (2001 முதல் 2016) திமுக எம்.எல்.ஏ, வாக இருக்கும் எ.சவுந்தரபாண்டியனுக்கு மீண்டும் சீட் கொடுத்தால், டம்மி கூட சட்டமன்றத்திற்கு செல்லக் கூடிய அதிர்ஷ்டம் கை கூடலாம.
மணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி போட்டியிடுகிறார். இவரைப் பற்றி சொல்ல, தனிப்பட்ட வாழ்க்கையில் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது. அதை கடந்து விடுவோம்.
2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றிப் பெற்ற தொகுதி. இங்கு திமுக நேரடியாக களம் இறங்கினால் போட்டி கடுமையாக இருக்கும். இல்லையென்றால், பரஞ்ஜோதி, எம்.எல்.ஏ.வாகி விடுவார்.
முசிறி எம். செல்வராஜ.. இவர்தான் இப்போதைய அதிமுக எம்.எல்.ஏ., தொகுதி மக்களிடம், அதிமுக தொண்டர்களிடம் இவருக்கு நல்ல பெயரும் இல்லை. கெடட பெயரும் இல்லை. கட்சியினரிடம் அதிருப்தி அமோகமாக விளைந்து இருக்கிறது. நல்ல வேட்பாளரை களமிறக்கினால், திமுக கொடியை அதிமுக.வினருக்கு தூக்கி கொண்டு பரப்புரையில் தூள் கிளப்புவார்கள்.
துறையூர் தொகுதியில் த.இந்திராகாந்திதான் அதிமுக வேட்பாளர். 2011 ல் இவரை இதே தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 5 ஆண்டுகளில் அவரின் புகழ், தொகுதி முழுவதும் பெருக்கெடுத்ததால், 2016ல் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மைவிழி என்பவரை களமிறக்கினார், ஜெயலலிதா. ஆனாலும், இந்திராகாந்தியின் புண்ணியத்தால் தொகுதி ஊத்திக் கொண்டது. திமுக.வின் எஸ்.ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ, வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளில் இவரின் பெயரும், தொகுதி முழுவதும் படுமோசம். மீண்டும் இவருக்கே திமுக.வில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், பேயயை விட பிசாசு பரவாயில்லை என்ற கதை ஆகலாம்.
ஆனால், அதிமுக.வில் தனக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், நலத்திட்டம் என்ற பெயரில் தொகுதி முழுவதும் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்திருப்பார் என்று உச்சு கொட்டுகிறார்கள் துறையூர் அதிமுக நிர்வாகிகள்.
ஆக மொத்தத்தில், திருச்சி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அத்தனை அதிமுக வேட்பாளர்களும், அதிமுக.வுக்கு விசுவாசமானவர்கள் என்பதைவிட, தனக்கான விசுவாசிகளாக பார்த்துதான் முதல்வர் எடப்பாடியார் தேர்வு செய்து அறிவித்திருக்கிறார் என்ற மனக்குமறல், ஒட்டுமொத்த திருச்சி மாவட்டத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
திமுக.வை கண்டு பயப்படுகிறர்களா இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்.ஸும்….