Sun. Nov 24th, 2024

அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு சேப்பாக்கம் மற்றும் ராஜபாளையம் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், முறையே நடிகைகள் குஷ்பும், கௌதமியும், அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்குள் ஒரு ரவுண்ட் தேர்தல் பிரசாரத்தையே முடித்துவிட்டார்கள். இந்தநேரத்தில் இரண்டு தொகுதிகளும் பாஜக.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பட்டியலில் இடம் பெறாதது, இரண்டு பிரபல நடிககைகளும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறுகிறார்கள் அவர்களது ஆதரவாளர்கள்.

சேப்பாக்கம் தொகுதியைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால், அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றி வந்த நடிகை குஷ்பு, சலாம் சொல்லியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிறந்த குழந்தைகளை எல்லாம் கையில் தாங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

முதல், இரண்டு மூன்று சுற்றுகளிலேயே பல லட்சம் ரூபாய் வரை செலவழித்திருப்பார் நடிகை குஷ்பு என்கிறார்கள், பாஜக நிர்வாகிகள். தொகுதியில் உற்சாமாக சுற்றி வந்த நடிகை குஷ்பு, வாக்காளர்கள் தந்த உற்சாகத்தைப் பார்த்து திக்கு முக்காடி போய்விட்டதாக, அவரோடு பிரசாரத்திற்குச் சென்று பாஜக நிர்வாகிகள் மேலும் தெரிவித்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்று மாலை வெளியிடப்பட்ட தொகுதிப் பட்டியலில், சேப்பாக்கம் தொகுதி பாஜக.வுக்கு வழங்கப்படாமல், பாமக.வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

திட்டமிட்டடே தன்னை பாஜக தலைவர்கள் பழிவாங்கிவிட்டதாகவும், தொகுதி உமக்குதான் தைரியமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுங்கள் என்று கூறி தன்னை திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டதாகவும், நடிகை குஷ்பு, தனக்கு நெருக்கமான பாஜக மகளிர் அணி நிர்வாகிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை குஷ்பு கூட பரவாயில்லை. சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். ஆனால் நடிகை கௌதமியோ, சென்னையில் இருந்து விருதுநகர் மாவடடம் ராஜபாளையத்திற்கு சென்று அங்கே முகாமிட்டு கடந்த பல நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வயதான பெண்கள் முதல் இளம் பெண்கள் என அவர்களை தேடி வீடு வீடாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியும், குழு, குழுவாக அமர்ந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

மேலும், அந்த தொகுதியில் வெற்றியைக் தீர்மானிக்கிற அளவுக்கு கௌதமியின் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகளவு வசித்து வருவதால், தேர்தல் பிரசாரமும், வெற்றியும் மிகவும் கடினமாக இருக்காது என்று மிகுந்த நம்பிக்கையுடன் வார்த்தைகளை தனது நட்பு வட்டத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.

இப்படி ஆர்வமாக இரண்டு பிரபல நடிகைகளும் தொகுதியில் பல நாட்கள் சுற்றி வந்த நிலையில், இரண்டு தொகுதிகளின் பெயரும், பாஜக பட்டியலில் இடம் பெறாதது, திட்டமிட்ட சதியா அல்லது எதோச்சையான செயலா அலலது அதிமுக.விடம் பாஜக தலைவர்கள் போராடி பார்த்தும் இரண்டு தொகுதிகளையும் அதிமுக ஒதுக்க முன்வரவில்லையா அல்லது சேப்பாக்கம் தொகுதியை பாமக அடம் பிடித்து பெற்றுக் கொண்டதா என்று குஷ்புவும், கௌதமியும் தங்களின் நலம் விரும்பிகள் மூலம் தமிழக பாஜக உள்வட்டாரத்தில் நடந்த சித்துவிளையாட்டுகளை தெரிந்து கொள்ள முனைப்பு காட்டி வருவதாக தகவல்கள் கசிக்கின்றன.

”சென்னையில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் பாமக வெற்றிப் பெறாது. அதுவும் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடும் தொகுதியில் கடுமையான எதிர்ப்பு கொடுத்தால்தான் அவரை வீழ்த்த முடியும். கடந்த பல நாட்களாக நான் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தும் கூட சேப்பாக்கம் தொகுதியை பாமக குறி வைத்தது ஏன் என்று தெரியவில்லை. ஏற்கெனவே திமுக.வில் தான் இருந்ததாலும், பெண்கள் மத்தியிலும் தனக்கு ஆதரவு இருப்பதாலும், உதயநிதி ஸ்டாலினுக்கு என்னால் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். இப்படிபட்ட நேரத்தில், பாமக., சேப்பாக்கம் தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கலாம் ‘என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறாராம் நடிகை குஷ்பு.