Sun. Nov 24th, 2024

பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து தமிழகத்தில் அக்கட்சி தலைவர்கள் அதிகமாக பேசியதைவிட, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிதான் அதிகமாக கூக்குரலிட்டார். 1987 ல் புதிய தமிழகம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த நாள் முதல், தாழ்த்தப்பட்ட மக்களின் குறிப்பாக,தேவேந்திர குல வேளாளர் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறார்.

தன்னை தலித் தலைவராக அடையாளப்படுத்துவதை தொடக்கம் முதலே எதிர்த்து வரும் கிருஷ்ணசாமியின் நீண்ட, நெடிய போராட்டத்தின் விளைவுதான், தேவேந்திர குல வேளாளர் இனம், தாழ்த்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்க, மத்திய அரசு முன் வந்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 சாதியினரை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், டாக்டர் கிருஷ்ணசாமியின் உழைப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

ஆனால், தேவேந்திர குல வேளாளர் இனத்தின் ஒட்டுமொத்த ஆதரவை, இந்த தேர்தலில் அறுவடை செய்ய, பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ஆனால், கடந்த 25 ஆண்டுகளுக்காக இந்த கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய டாக்டர் கிருஷ்ணசாமியை, தமிழக பாஜக தலைவர்களோ, டெல்லி பாஜக தலைவர்களோ கண்டு கொள்ளவில்லை என்பதுதான் பரிதாபம்.

1996 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ. ஆன டாக்டர் கிருஷ்ணசாமி, 1999 ல் நடைபெற்ற மாஞ்சோலை பேரணி மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அவர், 2001ல் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதற்கடுத்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட போதும், அவர் தோல்வியையே தழுவினார்.

2011 ஆம் ஆண்டு அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, கிருஷ்ணசாமி உள்பட 2 பேர் எம்.எல்.ஏ.வாக தேர்வாகினர். 2016 ல் திமுக.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமியும், அவரது கட்சியினரும் தோல்வியையே தழுவினர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டபோதும் அவர் தோல்வியையை தான் சந்தித்தார்.

சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கே அவருக்கு, திமுக மற்றும் அதிமுக.வின் தயவு தேவைப்படுகிறது. ஆனால், கூட்டணிக்கு முன்பாக ஒரு பேச்சும், தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு வேறு மாதிரியாக பேசுவதும் கிருஷ்ணசாமியின் பிறவிக்குணமாக இருப்பதால், அவரை கூட்டணியில் சேர்ப்பதற்கே திமுக மற்றும் அதிமுக ரெம்ப யோசிக்கும். இப்படிபட்ட நேரத்தில்தான் பாஜக. ஆதரவு நிலையை எடுத்தார், டாக்டர் கிருஷ்ணசாமி.

தமிழகத்தில், பாஜக.வை பகிரங்கமாக ஆதரிக்க பல தலைவர்கள் யோசித்தபோது, டாக்டர் கிருஷ்ணசாமி, அக்கட்சியின் ஊதுகுழலாக மாறி, ஊர், ஊராகச் சென்று பாஜக கொள்கைகளை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். ஹிந்தி திணிப்பை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எதிர்த்தபோது, அதனை ஆதரித்து, டாக்டர் கிருஷ்ணசாமி பேரணி நடத்தினார். அவரைப் பார்த்துதான் தமிழக பாஜக தலைவர்களே ஹிந்தி மொழிக்கு ஆதரவாக கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த தொடங்கினார்.

அடுத்து, தமிழக மாணவர்களை குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களை கடுமையாக பாதித்து வரும் நீட் தேர்வை, டாக்டர் கிருஷ்ணசாமி விழுந்து விழுந்து ஆதரித்தார். இப்படி, பாஜக.வை பல்லக்கில் தூக்கிக் கொண்டு ஊர்,ஊராக சுற்றித் திரிந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை, சட்டமன்றத் தேர்தலையொட்டி, டெல்லி பாஜக மேலிடம். கண்டுகொள்ளவே இல்லை.

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகளை எல்லாம் மாலை போட்டு பாஜக.வில் சேர்ந்து வரும், தமிழக பாஜக தலைவர் முருகன், டாக்டர் கிருஷ்ணசாமியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

திமுக, அதிமுக, அ.ம.மு.க. ம.நீ.ம., என எந்த கூட்டணி தலைவர்களும் ஒரு பேச்சுக்குக் கூட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இந்த லட்சணத்தில், கழகங்கள் இல்லாத கூட்டணியை அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம் என்று சூளுரைத்த டாக்டர் கிருஷ்ணசாமி, 30 நாட்களாக எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்கிறார்கள், அவரது கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள்.

தமிழக அரசியலில் தான்தான் அதிபுத்திசாலி மாதிரி, தமிழக அரசியலில் நேர்மை இல்லை. உண்மையாக இல்லாதவர்களிடம் கைகோர்த்து எந்த பலனும் இல்லை. வெளிப்படைத் தன்மை உள்ளவர்களிடம் மட்டுமே கைகோர்ப்போம் என்று பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் கூக்குரலிட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக பாஜக. வை நம்பி, திமுக, அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியாமல் போன டாக்டர் கிருஷ்ணசாமியின் இன்றைய நிலையை எண்ணி பரிதாபப்படுவதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள், அவரது கட்சியில் உள்ள நிர்வாகிகள்.

அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியன் இடம் பிடித்துவிடும் நிலையில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அருந்ததியர் கட்சியும் கௌரவமான இடங்களை பெற்று சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளன. ஆனால், நேர்மையையும், உண்மையையும் தேடிக் கொண்டிருக்கும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஏப்ரல் 6 ஆம் தேதியன்றாவது, முகம் காட்டுவாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள், அவரது கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்.