2025 – 26 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கலுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 14 ஆம் தேதி தொடங்குகிறது அன்றைய தினம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகிறார் ..கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை முதல் முறையாக தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டாவது முறையாக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, தேர்தலை மனதில் கொண்டு பொதுமக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான நலத்திட்ட உதவிகள், வரி இல்லாத பட்ஜெட், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்ப்பு தலைமைச் செயலகத்தில் நிலவி வருகிறது.

மார்ச் 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி நிலை அறிக்கை, துறை ரீதியலான மானியக் கோரிக்கைகள் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதம் என வரும் மே மாதம் இரண்டாவது வாரம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
காலை மாலை என இரு வேளைகளாக அவசர அவசரமாக பேரவை கூட்டத்தை நடத்தாமல் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு முழுமையான வாய்ப்பு தந்து கூட்டத் தொடரை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு 9 நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு தேர்தல் முடிவு வெளியான பிறகு கிட்டத்தட்ட 120 நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஜூன் மாதம் 24 ஆம் தேதிதான் மீண்டும் கூடியது. கடந்த ஆண்டு 45 நாட்களுக்கு மேலாக பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்ற நிலையில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் 50 நாட்களுக்கு மேலாக மே மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதிநிலை அறிக்கையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முனைப்பு காட்டிவரும் நிலையில் துறை அமைச்சர்களும் தத்தம் துறை அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போல தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் மற்றும் முதலமைச்சர் அலுவலக செயலாளர்களும் மானிய கோரிக்கைகளில் கவர்ச்சிகரமான திட்டங்கள், சலுகைகள் இடம் பெரும் வகையில் முனைப்பான ஆலோசனை களில் ஈடுபட்டு வருகிறார்கள்.