Wed. Mar 12th, 2025

தமிழத்தில் இன்றைய தேதியில் சுமார் எட்டு லட்சம் மாணவ மாணவியர்களின் எதிர்கால தலையெழுத்தை நிர்ணயக்க கூடிய 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிற நேரம் இது ..இன்றைய தேதியில் புகழ்பெற்ற பன்னாட்டு கனிணி நிறுவனங்களிலேயே கொத்து கொத்தாக பணிநீக்கம் நடைபெற்று வரும் நிலையிலும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக இளம் தளிர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர நிகழ்வுகளும் அரங்கேறி பெற்றோர்களின் ஒட்டுமொத்த நிம்மதியையும் குழைத்து கொண்டு இருக்கிறது.. இப்படி லட்சக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் எந்தவொரு நல்ல செய்திகளும் கடந்த பல நாட்களாக அவர்தம் செவிகளுக்கு சென்று சேரும் வகையில் ஊடகங்களின் பங்களிப்பு சிறிதளவு கூட இல்லை என்பதுதான் பெரும் துயரம்.

‘விருப்பப்பட்டு வந்து உறவு வச்ச’ என்ற விவகாரம் தான் அனைத்து விதமான ஊடகங்களிலும் பிரதானமான செய்தியாக இடம் பெற்று இருக்கிறது..இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது..

கடந்த பல வருடங்களாக உயர்கல்வி மட்டுமின்றி பள்ளிக்கூட மாணவர்கள் வரை போதை பழக்கமும் பாலியல் துன்புறுத்தல்களும் அதிகரித்து தமிழக மாணவர்களின் எதிர்காலம் என்னாகுமோ என்பதுதான் பெற்றோர்களை விட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் கவலையாகும். கல்வி, சமூகம், அரசியல் என அன்றாட வாழ்வில் நம்பிக்கையளிக்கும் அனைத்து துறைகளின் எதிர்காலமும் வலிமை மிகுந்த மனிதர்களுக்கே அச்சமூட்டுபவையாக மாறியிருக்கும் இன்றைய சூழலில் இதனை அகற்றி நிம்மதியான வாழ்வியலுக்கு உத்தரவாதம் தர வேண்டிய ஆட்சியாளர்கள், துதிபாடிகளின் உண்மைக்கு மாறான மொழிகளில் மயங்கி கிடக்கிறார்கள்.. சாட்டையை சுழற்றுகிற ஆட்சியாளர்கள் இல்லாததால் அரசு நிர்வாகத்தை ஆக்கிரமித்து இருக்கும் அதிகார வர்க்கமும் மக்கள் நலன் பற்றி துளியும் கவலையின்றி பொன்னான காலத்தை வீணடித்து கொண்டு இருக்கிறது..

இப்படிப்பட்ட இருட்டு உலகத்தில் ஒற்றை மெழுகுவர்த்தியாக தன் வாழ்வை தியாகமாக்கி கொண்டு இளம் தலைமுறை வளமான வாழ்க்கையை வசமாக்கி கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு இடைவிடாது உழைத்து கொண்டு இருக்கிறார் ஓய்வு பெற்ற தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறை அன்பு ஐஏஎஸ்..

https://www.facebook.com/share/v/12KHpaBP1BP

33 ஆண்டுகளுக்கு மேலான ஆட்சி பணியில் ஒரு நிமிடம் கூட சுயநலமாக சிந்திக்காமல் வாழ்ந்த அவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய இரண்டு ஆண்டு காலமும் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.. அதற்கு முந்தைய அரசு பணிகளின் போது ஆற்றிய மக்கள் சேவையும் வரலாறாக தான் பதிவு ஆகி இருக்கிறது என்றாலும் கூட அவருக்கு முன்பும் பின்பும் தலைமைச் செயலாளராக பணியாற்றிவர்களில் ஒருவர் கூட முனைவர் இறை அன்பு ஐஏஸின் மகத்தான மக்கள் சேவையை மிஞ்சியவர்களாக காலம் பதிவு செய்து வைக்கவில்லை.

தலைமைச் செயலாளராக இறை அன்பு பணியாற்றிய காலம் முழுவதும் அவரது அலுவலக அறை விளிம்பு நிலை மக்களுக்கு சொர்க்கவாசல் போல அமைந்து இருந்தது.. தூய்மை பணியாளர், அஞ்சல் துறை ஊழியர் என பலதரப்பட்ட எளிய மனிதர்கள், அவரின் அன்பு அரவணைப்பால் உள்ளம் குளிர்ந்த நிகழ்வுகள் ஏராளம்..நாள்தோறும் விளிம்பு நிலை மனிதர்கள் தலைமை செயலர் அறையில் குதூகளித்து கொண்டே இருந்தார்கள்.. அவர் ஓய்வு பெற்று சென்ற பிறகு கடந்த 20 மாதங்களில் அப்படிப்பட்ட எளிய மனிதர்கள் ஒருவர் கூட தலைமை செயலர் அறையில் வாசம் செய்யவில்லை என்பதால் மனித நேயமிக்க ஒருவர் கூட தகுதியுடைவர்களாக இல்லையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

முனைவர் இறை அன்பு பணியாற்றிய நேரத்தில் முதலமைச்சர் குறை தீர்க்கும் பிரிவில் நம்பிக்கையோடு பல நூறு மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தார்கள். கடந்த 20 மாத காலத்தில் முதலமைச்சர் குறை தீர்க்கும் பிரிவு வெறிச்சோடி காணப்படுகிறது என்றால்

ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் தலைமை செயலகம் வந்தவர், முனைவர் இறை அன்பு . வார விடுமுறை நாட்களிலும் மாவட்டங்களில் ஆய்வு நடத்தியவர். அவர் ஓய்வு பெற்ற பிறகு தலைமை செயலாளர் பதவியில் அமர்ந்தவர் முன்னவர் போலவே ஓரிரு நாட்கள் வார விடுமுறை நாட்களில் ஆய்வு என்று செய்திகளில் இடம் பெற்றார் ..ஆனால் ஓய்வு பெறுவதற்கு முன்பே மற்றொரு பதவி கண்முன் காட்டியதும் தான் புலி அல்ல, அதை போன்று வேஷம் போட முயன்ற பூனை என்று நிரூபித்து விட்டார்.. அவருக்கு பிறகு தலைமை செயலாளர் பதவியை அலங்கரித்து வருபவர் ஆட்சியாளர்களிடம் நற் பெயரை எடுக்கவே பகல் இரவு பாராமல் நேரத்தை செலவிட்டு வருகிறார் என்கிறார்கள் தலைமை செயலக அதிகாரிகள்..

தலைமை செயலாளர் பதவிக்கு தனித்த பெருமையை சேர்த்தவர் முனைவர் இறை அன்பு என்று கூறும் இப்போதைய துறை செயலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் இன்றைக்கும் நெகிழ்ச்சியோடு கூறுவது, “எந்த நிமிடமும் அவரது அறையில் அச்சம் இல்லாமல் நுழைய முடியும். பாரபட்சம் இல்லாமல் அன்பு பாராட்டியவர்.உணமையான மக்கள் சேவராகவே பிரதிபலித்தவர் முனைவர் இறை அன்பு என்கிறார்கள் . அவருக்கு பிந்தைய அதிகாரிகளின் தலைமையின் கீழ் இன்றைய தேதியில் திராவிட மாடல் அரசு எதை முதன்மை நோக்ககமாக கொண்டு இருக்கிறது என்பதையே புரிந்து கொள்ளமுடியவில்லை”என்கிறார்கள் ஆழ்ந்த கவலையோடு ..

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று 20 மாதங்களை கடந்த பிறகும் முனைவர் இறை அன்பு அவர்களின் மக்கள் சேவை தலைமை செயலகத்தில் நினைவு கூறப்படுகிறது.. ஓய்வுக்கு முன்பே தலைமை செயலர் பதவிக்கான சமமான அந்தஸ்தில் முன்வைக்கப்பட்ட உயர் பதவிகளை புறம்தள்ளிவிட்டு தன்னுடைய ஒட்டுமொத்த ஆவியையும் மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணித்து விட்டார்..பல நூறு மேடைகளில் உயர் கல்வியில் சிகரத்தை அடைவதற்கான வியூகங்களை மாணவ சமுதாயத்திற்கு போதித்து கொண்டு வருகிறார்..வெளி நாடுகளுக்கும் பயணம் செய்து கல்வியும் ஒழுக்கமும் மனித வாழ்வை சிறக்க வைக்கும் என்று இடைவிடாது கல்வியாளர்களை மிஞ்சி பயிற்றுவித்து கொண்டு இருக்கிறார்..

புகழ் பெற்ற நிறுவனங்களின் மேடை என்று இல்லாமல் விளிம்பு மக்கள் நிறைந்து இருக்கும் குக்கிராமங்களிலும் அவரின் சத்தியமான வார்த்தைகள் ஒலித்து கொண்டே இருக்கிறது.. பைத்தியக்கார பேச்சுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய ஊடக தளங்களில் அவரின் சத்திய சோதனையை தேடி தான் பார்க்க வேண்டி இருக்கிறது..

வெறும் மேடை பேச்சுகளாக இல்லாமல் கள செயற்பாட்டாளராகவும் அவதாரமெடுத்து இருக்கிறார் என்பது தான் வியப்பிற்குரிய ஒன்றாகும். சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள அரசு பள்ளியில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 300க்கும் டியூசன் ஆசிரியர் போல போதித்துக்கொண்டே இருக்கிறார்.. அவர்களின் பெற்றோர்களான விளிம்பு நிலை மக்களை அவர்களது இல்லங்களுக்கே தேடிச் சென்று நம்பிக்கை வார்த்தைகளை விதைத்து கொண்டு இருக்கிறார்..

முனைவர் இறை அன்பு ஐஏஎஸ் போல ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு சேவை ஆற்றினால் அரசியல்வாதிகளின் ஆபாச அர்ச்சனைகள் மாணவ சமுதாயத்தின் செவிகளை பதம் பார்க்காது..மகாத்மா காந்தியடிகள் போதித்த போதனைகளுக்கு ஏற்ப தீயவைகளை அடையாளம் கண்டு ஒதுங்கி விடுவார்கள்..

அரசு பணியில் 30 ஆண்டுகள் கிடைத்த மகிழ்ச்சி போல மாணவர்களை நல்வழிபடுத்தும் பணியில் நிச்சயம் கிடைக்காது..ஆனால் ஆயிரமாயிரம் ஆலயங்களை தொழுத நிம்மதி கிடைக்கும் ..வெற்றி பெற்ற மாணவர்களின் நெஞ்சில் குல தெய்வமாக என்றைக்கும் நிலைத்து நிற்கலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *