Tue. Dec 3rd, 2024

செந்தில் பாலாஜி மீது இரக்கம் காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை மேயர் ரங்கநாயகி , செந்தில் பாலாஜியின் செலக்சன்தான்..
கோவை மாவட்ட திமுகவில் எப்போதுமே கிங் மேக்கர் செந்தில் பாலாஜிதான்.

ஒரு வருடத்திற்கு மேலாக சிறைவாசியாகிவிட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகமாக இரக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறது கோவை மாநகராட்சியின் புதிய மேயராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளதுதான் என்கிறார்கள் கோவை மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.
2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசில் செல்வாக்கு மிகுந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டவுடனேயே திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களே அதிர்ச்சியடைந்தார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அன்பை பெற்ற மூத்த அமைச்சர்களை விட செந்தில் பாலாஜிக்கு முதல்வர் குடும்பத்தினரிடம் கிடைத்த அபரிதமான செல்வாக்கைப் பார்த்து, திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்பட பாரம்பரிய திமுக தலைவர்கள் பலர் நொந்து போனார்கள்.


2022 ஆம் ஆண்டில் இரண்டாம்கட்டமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்ற போது, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட நேரத்தில், கோவை மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த அதிமுக தலைவரான எஸ்.பி.வேலுமணிக்கு சப்தநாடியும் அடங்கி போய்விட்டது என்று கிண்டலடித்தார்கள் கொங்கு சமுதாய தலைவர்கள்.
எஸ்.பி.வேலுமணியின் கோட்டையாக திகழ்ந்த கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் திமுக கூட்டணி அபாரமாக வெற்றிப் பெற்று, கோவை மாநகராட்சியை மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்றங்களில் திமுக தலைவர்களே வாகை சூடி, அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக கூட்டணி மகத்தான வெற்றிப் பெற்றதற்கு செந்தில் பாலாஜியின் அயராத உழைப்பும், தாராளமாக பணம் செலவு செய்யப்பட்டதும்தான் பிரதான காரணங்களாக கூறப்பட்டது.
கொங்கு மண்டலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரை விட அதிக செல்வாக்குப் பெற்ற அரசியல்வாதியாக செந்தில் பாலாஜி தலையெடுப்பதை அதிமுக முன்னணி தலைவர்கள் விரும்பாத நேரத்தில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கும் கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி அசுர பலத்தோடு வலம் வருவது எரிச்சலையே ஏற்படுத்தியது.

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளின் செல்வாக்கை தவிடு பொடியாக்கிவிடும் ஆற்றல் கொண்டவர் செந்தில் பாலாஜி என்பதை உணர்ந்து கொண்ட இரண்டு கட்சித் தலைவர்களும், செந்தில் பாலாஜியின் கடந்த கால குற்றவழக்குகளை தூசி தட்டி எடுத்து, சிறைக்கு அனுப்பி வைக்கும் வைபவத்தை வெற்றிக்கரமாக நிறைவேற்றினார்கள்.
சட்டவிரோத பணபரிவர்த்தனையில் கடந்தாண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு, அமைச்சர் பதவி பறிபோனதுடன் ஓராண்டுக்கு மேலாக ஜாமீன் கிடைப்பதும் கூட குதிரை கொம்பாக மாறிவிட்டது.
சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைபட்டு கிடந்தாலும் கூட கோவை மாவட்ட திமுகவில், அவர் வைத்ததுதான் சட்டம் என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியின் விருப்பத்தின் பேரில்தான், அவரது ஆதரவு பெற்ற கணபதி ராஜ்குமார், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதிமுக முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமார், செந்தில் பாலாஜியின் அழைப்பை ஏற்றுதான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


திமுகவில் இணைந்து ஒரு வருடம் கூட முடியாத போதும், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமாரை அறிவிப்பதற்கு, செந்தில் பாலாஜி மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருந்த அதீத நேசம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த கொங்கு நிர்வாகிகள்.
கணபதி ராஜ்குமாருக்கு முன்பாகவே செந்தில் பாலாஜியால் கோவை மாநகராட்சி மேயர் பதவியில் அமர்த்தப்பட்டவர்தான் கல்பனா ஆனந்தகுமார். கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த கல்பனா, கோவை மேயர் பதவியில் அமர்ந்த நாள் முதலாகவே, கோவை மாநகர மத்திய மாவட்டச் செயலாளர் கார்த்தி, திமுக பெண் பிரமுகர்களும் கவுன்சிலர்களுமான மீனா லோகு, சாந்தி முருகன் உள்பட பலர், செந்தில் பாலாஜி மீது கடும் கோபம் அடைந்தார்கள்.

செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வதற்கு முன்பு வரை கூண்டு கிளியாக இருந்த மேயர் கல்பனா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜாமினில் கூட வெளியே வர முடியாத நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு, சகட்டு மேனிக்கு ஊழல் பணத்தை வாரி குவிப்பதில் வெறி கொண்டு அலைந்தார்.
திமுக முன்னணி தலைவர்களை மட்டுமின்றி திமுக கவுன்சிலர்களுக்கும் மரியாதை தராமல் அடாவடியாக நடந்து கொண்ட கல்பனா, ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் கப்பத்தை கறாராக வசூலித்து, திராவிட மாடல் அரசுக்கு குறுகிய காலத்திலேயே அவப்பெயரை தேடி தந்தார் கல்பனா ஆனந்தகுமார்.
கல்பனாவின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்திலேயே திமுக பெண் கவுன்சிலர்கள் உள்பட ஒட்டுமொத்த மாநகராட்சி கவுன்சிலர்களும் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, திமுக தலைமையின் கட்டளைக்கு அடிப்பணிந்து மேயர் பதவியில் இருந்து கல்பனா விலகினார்.


அடுத்த மேயர் யார் என்ற போட்டி தலைதூக்கிய நேரத்தில், கொங்கு, முதலியார் உள்பட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர்கள் 8 க்கும் மேற்பட்டோர், மேயர் பதவியை கைப்பற்றும் நோக்கில் சென்னைக்கு படையெடுத்தார்கள்.
திமுக தலைமையின் ஆசியை பெறுவதற்காக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியின் தயவை தேடி ஓடினார்கள். மேயர் தேர்வு விவகாரத்தில் திமுக தலைமையே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என ஒதுங்கி கொண்டார் அமைச்சர் முத்துசாமி.
மேயர் பதவி மீதான தீராத காதலால், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு மிகமிக நெருக்கமான அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா ஆகியோரின் பரிந்துரை பெறுவதற்காக சமுதாய ரீதியாகவும் திமுக பெண் கவுன்சிலர்கள் முனைப்புடன் போராடினார்கள்.


நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலம் முதல்வரின் ஆசியை பெறுவதற்காக ஒரு சில பெண் கவுன்சிலர்கள் முயற்சித்த போதே, அமைச்சர் கே.என்.நேரு தரப்பில், கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் அடுத்த மேயர். முதல்வரின் தனிப்பட்ட உரிமையில் யாரும் தலையிட முடியாது. மு.க.ஸ்டாலின் யாரை மேயராக தேர்வு செய்கிறாரோ, அவர்தான் புதிய மேயராக பதவியேற்பார் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அதேநேரத்தில், திமுக எம்பி கணபதி ராஜ்குமார், செந்தில் பாலாஜியின் ஆசி பெற்றவர்தான் மேயர் பதவியிலும் அமர வேண்டும், அதுவும் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த ரங்கநாயகிதான் மேயர் பதவிக்கு தகுதியானவர் என சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு தகவல் அனுப்பியுள்ளார். கணபதி ராஜ்குமாரின் பரிந்துரையை ஏற்று ரங்கநாயகியை மேயர் பதவியில் அமர வைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி தெரிவித்ததாகவும், ஓராண்டிற்கு மேல் சிறைவாசியாக இருந்து வரும் செந்தில் பாலாஜி மீது அளவற்ற இரக்கம் காட்டி வரும் முதல்வரும், செந்தில் பாலாஜியை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலேயே முடிவெடுத்துள்ளார்.


கோவை மாநகர திமுக முன்னணி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாக ரங்கநாயகியையே மேயர் பதவிக்கு தேர்வு செய்து, சமூக நீதி காவலரான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவிட்டார் செந்தில் பாலாஜி என்கிறார்கள் கோவை திமுக அதிருப்தி பெண் கவுன்சிலர்கள்.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும் கூட செந்தில் பாலாஜியின் செல்வாக்கு குறையவே இல்லை என்று உற்சாகமாக கூறும் அவரது தீவிர விசுவாசிகள், செந்தில் பாலாஜியின் கண்ணசைவுக்கு ஏற்பதான் திமுக எம்பி கணபதி ராஜ்குமாரும், மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கநாயகியும் கோவை மாவட்டத்தில் அரசியல் செய்வார்கள் என உறுதிபட கூறுகிறார்கள்.
கோவை மாவட்ட, மாநகர திமுக நிர்வாகிகளின் விருப்பத்திற்கு மாறாகவும், மாநகராட்சியில் உள்ள திமுக பெண் கவுன்சிலர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் இல்லாத ரங்கநாயகியை தேர்வு செய்து அறிவித்திருப்பதன் மூலம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தலைவருக்கு உரிய அதிகாரத்தை வெளிப்படுத்தாமல், செந்தில் பாலாஜி என்ற ஒரே ஒரு மனிதருக்கான விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றி வைத்திருப்பதால், ஒட்டுமொத்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுமே அதிருப்தியோடு தான் இருக்கிறார்கள். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த கல்பனா மேயராக பதவி வகித்துவிட்டதால், எஞ்சிய காலத்திற்கு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலரை மேயர் பதவியில் அமர வைத்து சமூக நீதி கொள்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரோட்டம் கொடுத்திருக்கலாம்.ஆனால், மீண்டும் மீண்டும் கொங்கு சமுதாயத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதால், திராவிட மாடல் ஆட்சி முன்வைக்கும் சமூக நீதி கொள்கை என்பது மேடைகளில் மட்டுமே அலங்கார சொற்களாகவும், வெற்று முழக்கமாகவும் இருந்து கொண்டிருக்கிறது என்று வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.

கோவையை போலவே, திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக எம்எல்ஏவும் முன்னாள் மாவட்ட செயலாளருமான அப்துல் வஹாப்பின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வஹாப்பின் சிஷ்யர்தான் ராமகிருஷ்ணன் என்றாலும் கூட நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றிருப்பவர் என்பதுடன், மக்கள் சேவையில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர் என்பதாலும், ஊழல் பெருச்சாளி மற்றும் அதிகார மமதையோடு வலம் வந்த முன்னாள் மேயர் சரவணைப் போல நடந்து கொள்ளமாட்டார் என்பதாலும் கோவையை போல நெல்லை மேயர் ராமகிருஷ்ணுக்கு எதிராக அதிகமான அதிருப்தி குரல்கள் எழவில்லை என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் நெல்லை திமுக முன்னணி நிர்வாகிகள்.


அதேசமயம், நெல்லையிலும் சமூக நீதி கொள்கையை நீர்த்துப் போக செய்யும் வகையில்தான், பிள்ளைமார் சமுதாயத்திற்கே மீண்டும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று வருத்தப்படும் பகுத்தறிவுவாதிகள், எஞ்சிய இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலான மேயர் பதவிக்கு தேவர் அல்லது நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலரை மேயராக அறிவித்து, சமூக நீதிக்கு என்றைக்கும் அரணாக நிற்பது திமுகவே என்று உரக்க கூறியிருக்கலாம் என்கிறார்கள்.
கோவை மாநகராட்சி மற்றும் நெல்லை மாநகராட்சி ஆகிய இரண்டு மேயர் தேர்வும் கூட திமுக தலைமையின் தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாகதான் அமைந்திருக்கிறது என்று மனம் நொந்து கூறுகிறார்கள் அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகிகள்.

மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவைப் போல கம்பீரமான தலைவராக மு.க.ஸ்டாலின் விஸ்வரூபம் காட்டாமல், திமுக முன்னணி நிர்வாகிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து போவது, வருங்காலத்தில் திமுகவை மிகவும் பலவீனப்படுத்திவிடும் என்றும் சமூக நீதி காவலர் மு.க.ஸ்டாலின் என்று சரித்திரத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும் ஆபத்தும் உள்ளதாக கவலையோடு கூறுகிறார்கள் கோவை மற்றும் நெல்லை மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகள்.