Thu. Nov 21st, 2024

உத்தரப்பிரதேசத்தில் தண்ணீர் குடிக்கும் புல்டோசர் புகழ் யோகி ஆதித்யநாத்.
மதவெறியை தூண்டி தேர்தல் ஆதாயம் அடைந்த காலம் மலையேறி போச்சு…

பிரதமர் மோடியின் அதிகார மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மோடியை விட செல்வாக்கு மிகுந்தவர் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் அடையாளம் காட்டப்பட்ட யோகி ஆதித்யாநாத்தின் ஒட்டுமொத்த செல்வாக்கையும் உத்தரப்பிரதேச மக்கள் தூள் தூளாக்கிவிட்டார்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் மூன்று முறை வாகை சூடிய பாரதிய ஜனதா கட்சி, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
காங்கிரஸுக்கு வாக்களித்தால் புல்டோசரை வைத்து ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்று படு கேவலமாக மோடி பிரசாரம் செய்த போதும் கூட, தாமரைச் சின்னத்திற்கு அயோத்தி மக்கள் வாக்களிக்காமல், மோடி மற்றும் அமித்ஷா முகங்களில் கரியை பூசி அவமானப்படுத்தியிருந்தார்கள்.


பைசாபாத் தொகுதியைப் போலவே 30 தொகுதிகளில் பாரதிய ஜனதா படுதோல்வியை சந்தித்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியை சுத்தமாக துடைத்தெறியும் அளவுக்கு இந்து மத உணர்வாளர்களே அதிரடி காட்டியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் மதவெறிப் பிடித்த பாரதிய ஜனதாவுக்கு சரியான பாடம் புகட்டிய உத்தரப்பிரதேச மக்கள், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறார்கள்.
இரண்டு தேர்தல்களிலும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகியின் செல்வாக்கு மண்ணை கவ்வியதால், முதல் அமைச்சர் பதவியில் இருந்து யோகியை விரைவாக தூக்கியெறியுங்கள் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்களே பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளதால், எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் படு உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.

இந்து மதத்தின் செல்வாக்கை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று பரப்புரைச் செய்து வரும் பாரதிய ஜனதாவுக்கும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசியல் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி வரலாறு காணாத தோல்வியை எதிர்கொண்டதற்கு மோடி மற்றும் அமித்ஷாவின் மதவெறி பேச்சுதான் முதன்மையான காரணம் என்று யோகியின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டும் அதேநேரத்தில், யோகியின் புல்டோசர் ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதீத கோபம்தான் பாரதிய ஜனதா வேட்பாளர்களை படுகுழியில் தள்ளிவிட்டது என்று பதிலுக்கு பொங்குகிறார்கள் மோடி மற்றும் அமித்ஷாவின் தீவிர விசுவாசிகள்.

கட்டுக்கோப்பான கட்சி பாரதிய ஜனதா என்று கூறப்பட்டு வந்த நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் துண்டு துண்டாக உடையும் அளவுக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிலைமை படுமோசமாகி இருக்கிறது.
சொந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தூக்கியுள்ள போர்க்கொடியால் முதல் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து போய் கிடக்கிறார் யோகி என்று கூறும் அவரது தீவிர விசுவாசிகள், நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறும் 10 எம்எல்ஏ தொகுதிக்கான இடைத்தேர்தலை நினைத்து இப்போதிருந்த யோகி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுததான் உத்தரப்பிரதேச அரசியலில் ஹாட் நியூஸ் ஆகும்.
தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி செய்யும் அதிகார துஷ்பிரயோகத்தை பற்றி வாய் கிழியப் பேசும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் எம்எல்ஏ இடைத்தேர்தல் வெற்றிக்காக யோகி செய்து வரும் அதிகார துஷ்பிரயோகத்தை பற்றியும் சித்து விளையாட்டுகளைப் பற்றியும் வாய் திறப்பாரா என்கிறார்கள் திராவிட இயக்க சித்தாந்தவாதிகள்.


தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பட்டாளம் தொகுதி பக்கமே தலை காட்டும். ஆனால், உத்தப்பிரதேசத்தில் 5,6 மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கு இன்றைய தேதியில் இருந்தே அமைச்சர் பட்டாளத்தை அனுப்பி வைத்திருக்கிறார் யோகி ஆதித்யநாத் என்று கிண்டலடிக்கிறார்கள் ஆளும்கட்சியான திமுகவை சஞ்சலமின்றி ஆதரிக்கும் பகுத்தறிவு வாதிகள்.


உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்றுள்ள பாரதிய ஜனதாவுக்கு அபார வெற்றியை தேடி தந்த 5 சட்டமன்றத் தொகுதிகளையும் சமாஜ்வாதி கட்சியின் ஆளுமைக்குட்பட்ட எஞ்சிய 5 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய துடிக்கிறார் யோகி ஆதித்யநாத்.
நாடாளுமன்றத் தேர்தலில் சரிந்த செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்தி 10 தொகுதிகளையும் சிந்தாமல் சிதறாமல் மொத்தமாக வாகை சூடினால்தான், 2027 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் பாரதிய ஜனதா கட்சி, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் அமர முடியும் என்ற நெருக்கடியில் இருந்து வருகிறார் யோகி ஆதித்யநாத்.
தலைக்கு மேல் கத்தியாக நிற்கும் 10 இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெறுவதற்காக 30 பாஜக அமைச்சர்களையும் இடைத்தேர்தலுக்கு களமிறங்கிவிட்டார் யோகி. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று அமைச்சர்கள் வீதம் கடந்த வாரத்தில் இருந்தே மக்களை சந்திக்க தொடங்கிவிட்டார்கள். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஒவ்வொரு தொகுதியிலும் முகாமிட்டு தெரு தெருவாக சுற்றி வந்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து, பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று பாஜக அமைச்சர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பித்திருக்கிறார் யோகி ஆதித்யநாத்.


அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் அட்டகாசமான வளர்ச்சி, யோகியின் தூக்கத்தை முழுமையாக கெடுத்துவிட்டது என்கிறார்கள் உத்தரப்பிரதேச மாநில மூத்த ஊடகவியலாளர்கள்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றால் ஆளும்கட்சிகள் தேர்தல் விதிகளையை மீறி வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடுவார்கள் என்று திராவிட கட்சிகளுக்கு எதிராக பொங்கும் அண்ணாமலை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும்கட்சியான பாஜக அமைச்சர்கள், வாக்காளர்களை மூளை சலவை செய்வதற்காக படையென புறப்பட்டு இருக்கிறார்களே.. தொகுதியிலேயே முகாமிட்டிருக்கிறார்களே.. எஞ்சிய 5 மாதத்திற்கும் இடைத்தேர்தல் என்றே கதியாக கிடக்கப் போகிறார்களே பாஜக அமைச்சர்கள்..

இப்படி வேறு எந்தவொரு மாநிலத்திலும் ஆட்சியில் வீற்றிருக்கும் எதிர்க்கட்சி அரசுகள் அரசியல் செய்தால் வாயை பொத்திக் கொண்டு சும்மா இருப்பார்களா பாஜக மேலிட தலைவர்கள் என்று குமறுகிறார்கள் சமாஜ்வாதி கட்சி முன்னணி தலைவர்கள்.
ஒட்டுமொத்த உ.பி. மக்களின் வளர்ச்சிக்காக உழைக்காமல், இடைத் தேர்தல் நடைபெறும் 10 தொகுதியின் வெற்றிக்காக, பதவி வெறிப் பிடித்து ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் மோடிக்கு எதிராகவும் யோகியின் அதிகார துஷ்பிரயோகத்தை பற்றியும் கேள்வி எழுப்புகிற ஆண்மை, அண்ணாமலைக்கு இருக்கிறதா என்று கோபமாக கேள்விகளை முன்வைக்கிறார்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள்.