Sat. Nov 23rd, 2024

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் கடும் பாதிப்பு..

தொலைக்காட்சி விவாதங்களில் நடுநிலையோடும் மனசாட்சியோடும் நடந்து கொள்கிற நெறியாளர்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவராக பணியாற்றி வருபவர் சத்யம் டிவியின் அரவிந்தக்க்ஷன்.

தொலைக்காட்சி விவாதங்களில் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் மூத்த ஊடகவியலாளர் அரவிந்தக்க்ஷன் முன்வைக்கும் கருத்துகளும் பொதுதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதாக அனுபவம் மிகுந்த மூத்த ஊடகவியலாளர்களே மனம் திறந்து பாராட்டி வருகிறார்கள்.

மிகுந்த பொது சிந்தனையோடு, ஊடகத்தர்மத்தோடு சேவையாற்றி வரும்  அரவிந்தக்க்ஷனே இளம் ஐஏஎஸ் அதிகாரியின் நடவடிக்கைகளால் ஆவேசமடைந்திருக்கிறார் என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

சென்னை மாநகராட்சியின் பொதுப் பணிகளை(பணி துறை) நிர்வகிக்க கூடிய இளம் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் சமீரன், இணை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.  சென்னை போன்ற பெருநகரங்களில் புதிய சாலைகள் அமைத்தல், கட்டடம் கட்டுதல், வடிகால் கால்வாய் அமைத்தல்  உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என்பது சவாலான ஒன்று. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகங்களே ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து விட்டது என்பதை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எண்ணிலடங்காத அளவுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றன.

ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக அடிமையாகி, தலையாட்டும் பொம்மைகளாக இருந்ததுடன் மட்டுமல்லாமல் சுயநலத்துடன் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பற்றி அறப்போர் இயக்கமே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது. முன் ஏர் மனசாட்சியை விற்றுவிட்ட போது,  மாநகராட்சி பொறியாளர்கள், அலுவலர்கள் என அனைவருமே (நேர்மையான அதிகாரிகள் ஒரு சிலரும் இருக்கதான் செய்கிறார்கள்)  லஞ்சப் பணத்திற்காக மனசாட்சியை ஒட்டுமொத்தமாக விற்றுவிட்டார்கள் என்பதுதான் துயரம்.  

இப்படிபட்ட குற்றச்சாட்டுகள் பிரதானமாக இருந்து வரும் நிலையில் திராவிட மாடல் ஆட்சியிலாவது நிர்வாகம் சீரடைய வேண்டும் என்று மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள் சமூக ஆர்வலர்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் சென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய உயரதிகாரியான ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் சிறந்த நிர்வாகத்தை வழங்கினார் என்றே தகவல் வெளியானது. தமது புதல்வியை விட இளையவரான மேயர் பிரியாவிடம் கூட கனிவுடனே நடந்து கொண்டார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். எவ்வளவு சிறப்பாக பணியாற்றினாலும் திருஷ்டிபட்டுவிடும் என்பதற்கு ஏற்ப, தலித் விரோத மனப்பான்மை கொண்டவராக இருக்கிறார் என்று அவரது தலைமையின் கீழ் பணியாற்றிய இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரே வெளிப்படையாக குற்றம் சாட்டும் அளவுக்கும் மாநகராட்சி நிர்வாக சூழல் இருந்திருக்கிறது.

இன்றைய தேதியில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பொறுமை இல்லையோ.. சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் ஊதி பெரிதாக்குகிறார்களோ என்று பொதுமக்கள் அச்சம் கொள்ளும் அளவுக்குதான் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக, அனுபவம் மிகுந்த அரசு உயர் அதிகாரிகளே கவலையோடு கூறுகிறார்கள்.

இந்த பின்னணியில், மூத்த ஊடகவியலாளர் அரவிந்தக்ஷன், மருத்துவர் சமீரன் ஐஏஎஸ்ஸின் நிர்வாக நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதில் நியாயம் இருக்கிறது என்பதுதான் நல்லரசுவின் கருத்து.

கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்திலேயே மருத்துவர் சமீரன் ஐஏஎஸ்ஸை பற்றி பல தகவல்கள் நல்லரசுவுக்கு கிடைத்தன.

அதில் முதன்மையானது என்று சொல்வதைவிட, ஆழ்ந்த கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், இன்றைக்கு ஆட்சிப் பணியில் இருக்கும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை எதிர்கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதுதான். பொது வாழ்க்கைக்கு ஒப்படைத்துக் கொண்டவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? என்ற ஆணவம் அதிகமாக இருப்பதாகவே கூறுகிறார்கள்.

கோவை ஆட்சியராக மருத்துவர் சமீரன் ஐஏஎஸ் பணியாற்றிய காலம் முழுவதும், ஆளும்கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை விட, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கே மரியாதை கொடுக்க வில்லை என்பதுதான் பிரதானமாக இருந்தது. ஆனால், அதேநேரத்தில் அதிமுக பிரமுகர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தார் என்றும் விமர்சனம் எழுந்தது.

கோவை சமூக ஆர்வலர்கள் வேடிக்கையாக என்று சொல்வதை விட வேதனையாக கூறியதை இங்கு பதிவு செய்யாமல் கடந்து செல்ல முடியவில்லை.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசியல் என்றாலே ஒரு இளக்காரம்தான். குறிப்பாக, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை வெகுவாக பாராட்டுபவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் அரசியல் சாதூர்யம், ஆளுமைக்குணம் பற்றி பேசாமல், தேவையற்ற வெறுப்பை காட்டுவது, பொதுப்புத்தியாகவே இருக்கிறது என்பதுதான் கோவை சமூக ஆர்வலர்கள் சுட்டிகாட்டிய விடயம் ஆகும்.

இந்த பின்னணியோடு மருத்துவர் சமீரன் ஐஏஎஸ்ஸின் ஆட்சிப் பணியை பொறுத்தி பார்ப்பது நியாயம் இல்லை என்றாலும் கூட கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய போதும் பொதுமக்களின் அன்பை பெறும் வகையில் மருத்துவர் சமீரன் ஐஏஎஸ் செயல்பட்டதே இல்லை என்கிறார்கள் கோவை சமூக ஆர்வலர்கள்.

பொது சிந்தனையே இல்லாமல் அதிகாரத் திமீர் மட்டுமே தலைகாட்டியதற்கு உதாரணமாக கோவை சமூக ஆர்வலர்கள் முன்வைப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மருத்துவர் சமீரன் ஐஏஎஸ் ஆட்சியராக இருந்த காலத்தில் மாநகராட்சி ஆனையராக இருந்தவர் பிரதாப் ஐஏஎஸ். இருவருமே இளம்வயது அதிகாரிகள் என்பதால், இருவருக்குமே யார் அதிகாரம் படைத்தவர் என்ற போட்டியில், இருவருமே மக்கள் பணியை மறந்தே போனார்கள் என்றே குற்றம் சாட்டுகிறார்கள்.

மருத்துவர் சமீரன் ஐஏஎஸ் சொல்லுக்கு பிரதாப் ஐஏஎஸ் கீழ்படிய மாட்டார். பிரதாப் ஐஏஸ் முன்வைக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கு மருத்துவர் சமீரன் ஐஏஎஸ் விரைவாக ஒப்புதல் தர மாட்டார் என்று இரண்டு இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முட்டல் மோதல்களை கதை கதையாக சொல்லுகிறார்கள் கோவை சமூக ஆர்வலர்கள்.

கோவை மாவட்டத்திற்கென்று தனியாக அமைச்சர் இல்லாததால், இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருமே மிகுந்த ஆணவத்துடனேயே செயல்பட்டார்கள் என்கிறார்கள் வேதனைக்குரலில்.

பொதுவாக, மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியை பணியிட மாற்றம் செய்யும் போது ஒரு துறையின் ஆணையருக்கு அல்லது செயலாளருக்கு கீழான பதவிகளில் நியமனம் செய்யும் போது, அந்த பதவிக்குரிய பொறுப்புணர்வை உணர்ந்து கொள்ள முடியாத மனநிலையில்தான் இருப்பார்கள்.

கோவை ஆட்சியர் என்ற பதவியில் பத்து சட்டமன்றத் தொகுதிகளை நிர்வகித்த சமீரன் ஐஏஎஸ்ஸை, சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸின் நிர்வாகத்தின் கீழ்தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை உருவாகும்போது, சமீரன் ஐஏஎஸ்ஸுக்கு மட்டுமல்ல, மற்ற இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கீழ்படிந்து பணியாற்றும்  மனப்பக்குவமே இருப்பதில்லை.

படிப்படியாகதான் அரசு நிர்வாகத்தில் உயர்வு கிடைக்கும் என்ற சிந்தனையே இல்லாமல், அனுபவம் மிகுந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு பணிந்து போக வேண்டுமா என்ற சிந்தனையோடுதான் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு மருத்துவர் சமீரன் ஐஏஎஸ்ஸும் விதிவிலக்கல்ல என்பதை மூத்த ஊடகவியலாளர் அரவிந்தக்ஷனின் குற்றச்சாட்டு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் சேவையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை காட்டாமலும், விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், அரவிந்தக்ஷனே சுட்டிக்காட்டியிருப்பதை போல, மருத்துவர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட சமீரன் ஐஏஎஸ், அரசு நிர்வாகத்தில் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கும்போது, அரசு நிர்வாகத்தில் மிகுந்த அனுபவம் கொண்டவரும், பொதுமக்களிடம் மிகுதியாக நற்பெயரை பெற்றவருமான மருத்துவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸின் அறிவுரைகளை கூட புறம்தள்ளிவிடுவது என்பது சமீரன் ஐஏஎஸ்ஸுக்கு ஒருபோதும் நன்மை பயக்காது என்கிறார்கள் ஆழ்ந்த அக்கறையோடு.

ஊடகவியலாளரின் சிந்தனைப்போக்கிற்கு இணையாகவே எழுத்தாளர் என்ற அடையாளத்தோடு அரசு நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் சமீரன் ஐஏஎஸ்ஸுக்கு நல்லரசு பாணியில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் எழவில்லை.