திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் செய்யும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்காமல், அவர் இஷ்டத்திற்கு துணை வேந்தர்களை நியமனம் செய்து வருவதுதான் பிரதான காரணமாக கூறப்பட்டது.
ஆளுநரின் பிடிவாதத்தின் காரணமாகவே, பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கிவிட்டு, முதல் அமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமனம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை வலியுறுத்தியது திராவிட மாடல் அரசு.
ஆனால், தனது அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டார் ஆர்.என்.ரவி. ஆளுநர் மீதான கோபத்தின் காரணமாகவே, தமிழ்நாட்டில் புதிதாக தொடங்க திட்ட சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு முதல் அமைச்சர் தான் வேந்தராக இருப்பார் என்ற தமிழக அரசின் சட்ட முன்வடிவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சம்மதிக்காததால், தமிழ்நாடு சித்த பல்கலைக்கழகம் தொடங்கும் பணியும் முடங்கிவிட்டது.
வேந்தர் நியமனம் தொடர்பான மசோதாக்கள் மட்டுமின்றி பத்துக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது, திராவிட மாடல் ஆட்சிக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மாநில சுயாட்சிக்கு உரக்க குரல் கொடுத்து வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு, அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாட நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது என்று திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்ட திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தாலே, அவை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் திறமை மீதே சந்தேகத்தை எழுப்பியது. பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், ஆளும்கட்சிக்கு குடைச்சல் கொடுக்கும் வகையிலேயே, மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்பை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் நாடு முழுவதும் எழுந்தது.
தமிழகத்தைப் போலவே, மேற்கு வங்கம், கேரளம், டெல்லி, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அதிகார வரம்பை மீறி செயல்பட்டு வருகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட அதிக அதிகாரம் படைடத்தவர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆளுநர் என்ற பதவிக்குரிய கண்ணியத்தை கடைப்பிடிக்காமல், பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் போலவே செயல்படுகிறார்கள் என்று அந்தந்த மாநில முதல்வர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு உள்பட பாரதிய ஜனதாவை சேராத முதல் அமைச்சர்களுடன் ஆளுநர்கள் தொடர்ந்து மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள். இதனால், மாநிலங்களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று குற்றம் சுமத்தி, ஆளுநர்களின் அதிகார வரம்புமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு, உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வரிசையில், பஞ்சாப் மற்றும் கேரள மாநில அரசுகள் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை விட அதிகாரம் படைத்தவர்கள் ஆளுநர்கள் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை காப்பாற்றும் வகையில் ஆளுநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பஞ்சாப்,கேரளம் வழியில் தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் சட்ட மசோதக்களை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மனு மீது உச்சநீதிமன்றம் காட்டமாகவே பதில் தெரிவிக்கும் என்பதை உணர்ந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அவசர அவசரமாக, நிலுவையில் வைக்கப்பட்டிருந்த மசோதாக்களை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்தார்.
மத்திய பாஜக அரசின் ஏஜென்டாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாக்குவார் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி நிறைவேற்றி, மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கே அனுப்பி வைத்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
உச்சநீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பயந்துபோன ஆளுநர் ஆர்.என்.ரவி,, டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக, தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதக்களுக்கு ஒப்புதல் அளித்து விடுவார் என்று கூறும் சட்ட வல்லுநர்கள், இருப்பினும் ஐபிஎஸ் அதிகாரிக்கு உரிய மனநிலையை வெளிப்படுத்தும் வகையில், ஒன்றிரண்டு மசோதாக்களை நிறுத்தி வைப்பார் என்றும் பொடி வைக்கிறார்கள்.
ஆர்.என்.ரவி ஒருபோதும் அடிபணிந்து போக மாட்டார். தமிழக அரசு முக்கியமான சட்ட மசோதாவாக நினைத்துக் கொண்டிருக்கும் பல்கலைக் கழகங்களுக்கு வேந்தராக முதல் அமைச்சராகவே இருப்பார் என்ற சட்ட திருத்த மசோதாவுக்கு ஒருநாளும் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க மாட்டர் என்று கூறுகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல்கள் இருக்கும். உச்சநீதிமன்றத்திலும் வேந்தர் நியமன விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு கிடைத்துவிடாது. சனாதன தர்மத்தை தூக்கிப் பிடித்து கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் அமர்ந்திருக்கும் வரை வேந்தராக அவரே தொடர்வதைதான் விரும்புவார். அந்த பதவியை ஒருபோதும் முதல் அமைச்சருக்கு விட்டுக் கொடுக்க மாட்டார் என்று விரிவாக பேசுகிறார்கள் பிரபல கல்வியாளர்கள்.
ஆளுநரின் எண்ணவோட்டத்தை முழுமையாக புரிந்து வைத்திருப்பவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில்தான், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை பாராட்டி பேசியதை எடுத்து கொள்ள வேண்டும். சென்னையில் நடைபெற்ற இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக விழாவில் பேசிய முதல்வரும் வேந்தருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மனதாராக பாராட்டினார். “பல்கலைக்கழகங்களுக்கு முதல்வர் வேந்தராக இருந்தால்தான் கல்வித்துறை சிறப்பாக வளர முடியும். மற்றவர்கள் கையில் வேந்தர் பதவி இருந்தால், அதனுடைய நோக்கமே சிதைந்துவிடும் என்று நினைத்துதான் 2013 ஆம் ஆண்டே இசை மற்றும் கவின்கலைப் பல்கழகத்திற்கு வேந்தராக முதல் அமைச்சராக இருப்பார் என்ற உரிமையை உருவாக்கியவர் செல்வி ஜெயலலிதாதான். இப்படிபட்ட துணிச்சலான நடவடிக்கை எடுத்ததற்காகவே செல்வி ஜெயலலிதாவை மனதார பாராட்டலாம்” என்று மிகுந்த நெகிழ்ச்சியோடு கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வரின் இந்த மனம் திறந்த பாராட்டை கேட்டு பூரிந்து போன பிரபல கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவி மட்டுமல்ல, துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தையும் தமிழக அரசிடம் இருக்கும் வகையிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பார் என்று நம்பிக்கையோடு கூறி வந்தார்கள்.
ஆனால், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமரச நிலைக்கு சென்று விட்டாரோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்கள் பிரபல சட்ட வல்லுநர்கள்.
சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்த சட்ட மசோதா க்களில், வேந்தர் நியமனம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் தான் அதிக அச்சத்தை தருவதாக கூறுகிறார்கள். வேந்தர் பதவியில் ஆளுநரே நீடிக்கட்டும். அதில் எந்த மாற்றமும் வேண்டாம். ஆனால், துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்குதான் இருக்க வேண்டும் என்ற வகையில்தான் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்களை ஆளுநர் மாளிகையில் இருந்து கசிந்து கொண்டிருப்பதாக அச்சத்தோடு கூறுகிறார்கள் பிரபல கல்வியாளர்கள்.
வேந்தர் நியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற முடியாது என்ற சந்தேகம் தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், துணை வேந்தர் நியமன அதிகாரத்தை மட்டும் ஆளுநரிடம் இருந்து பறித்து, தமிழ்நாடு அரசிடம் வைத்துக் கொள்வதை மட்டுமே திராவிட மாடல் அரசு முதன்மையானதாக நினைத்து விட்டது..
ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றமே அதிருப்தியோடு இருக்கும் இந்த நேரத்தில், வேந்தர் நியமன அதிகாரத்தை பறிப்பதற்கு துணிச்சலாக போராடாமல், திராவிட மாடல் அரசு பின்வாங்கியது, மாநில சுயாட்சி கொள்கைக்கே அவமானம் என்று ஆதங்கப்படுகிறார்கள் பிரபல சட்ட வல்லுநர்கள்.
வேந்தர் நியமன அதிகாரத்தில் சமரசம் செய்து கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா போன்று துணிச்சலான தலைவர் இல்லையா என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பரவலாக எழுவதற்கு அவரே காரணமாக அமைந்து விட்டாரே என்று கவலையோடு கூறுகிறார்கள் திமுக ஆதரவு மனநிலையில் உள்ள பிரபல கல்வியாளர்கள்.
வேந்தர் நியமன விவகாரத்தில் திராவிட மாடல் அரசு பின்வாங்கிவிட்டதா…? பிரபல கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் எழுந்துள்ள சந்தேகத்தை தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்துமா…?