Sat. Nov 23rd, 2024

அதிமுக தலைவர்களின் கள்ள மெளனத்தால் ரத்தத்தின் ரத்தங்கள் கொதிப்பு…

கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு எடுக்கப்படும் பாராட்டு விழாக்கள் சர்ச்சை இன்றி நிறைவு பெற்றதாக வரலாறு இல்லை.

முதல் அமைச்சர் பதவியில் இருந்த போதும், எதிர்க்கட்சித் தலைவராக பவனி வந்த போதும, கலைஞர் மு.கருணாநிதிக்கு நடைபெறும் பாராட்டு விழாக்கள், விமர்சனங்கள் இல்லாமல் ஒருபோதும் நிறைவு பெற்றது இல்லை. கலைஞரை பாராட்டு பேசுபவர்களுக்கு இணையாகவே வசைப்பாடுபவர்களின் எண்ணிக்கையும் இருந்து வந்திருகிறது.

தமது ஆயுள் முழுவதும் இரண்டையும் எதிர்கொண்டவர்தான் என்கிற போது, அவரின் மறைவுக்குப் பிறகு திரைப்படத்துறையினர் பிரம்மாண்டமாக நடத்த முனைந்திருக்கும் பாராட்டு விழா குறித்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

 கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஓராண்டு முழுவதும் கொண்டாடும் திட்டத்தின் மாநிலம் முழுவதும் வெகு விமர்சையான விழாக்களை எடுத்து வருகிறது.

பள்ளி மாணவ பருவத்தில் இருந்து தமது ஆயுள் இறுதி வரை திராவிட சித்தாந்தத்தை உணர்ச்சி மிகுந்த உயிரோட்டமாக வைத்திருந்தவர் கலைஞர் மு.கருணாநிதி. அரசியல்தான் கலைஞருக்கு உயிர் மூச்சு என்றாலும் கூட இலக்கியமும், திரைத்துறையும் அவரை தொய்வில்லாமல் உயிர்ப்புடன் வைத்திருந்தது என்பதுதான் உண்மையான ஒன்றாகும்.

அரசியலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைப் போல, இலக்கியம், கலை பண்பாடு, திரையுலகம் ஆகிய  துறைகளில் அரும்பங்கு ஆற்றியிருப்பவர் கலைஞர் மு.கருணாநிதி.

1924 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ம் தேதி பிறந்தார் கலைஞர்.மு.கருணாநிதி. 2023 ஆம் ஆண்டு அவரின் நூறாவது ஆண்ட பிறந்தநாள் விழாவாகும்.

கலைஞரின் புதல்வராக மட்டுமின்றி , அரசியல் வாரிசாகவும் தன்னை நிலை நிறுத்தியிருக்கும் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக ஓராண்டிற்கு கொண்டாடுவதற்கு அரசு இயந்திரங்களை பயன்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை என்கிறார்கள் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்றப்பட்டு நிற்கும் அனுபவம் மிகுந்த அரசியல் தலைவர்கள்.

தமிழ்நாடு அரசை விட பன்மடங்கு வீரியத்துடன் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது.

மாவட்டந்தோறும் திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப, கலைஞர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஜுன் 3 ஆம் தேதியில் இருந்து நாள்தோறும் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால், திமுகவினரால் கொண்டாடப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு விழா, பொது தளத்தில் அதிகமாக சர்ச்சையை ஏற்படுத்தவில்லை.

ஆனால் , தமிழ் திரைப்படத்துறையினர் அறிவித்துள்ள கலைஞர் நூற்றாண்டு பாராட்டு விழாதான், தற்போது சூடான விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் திரையுலகினர் அடக்கியே வாசிப்பார்கள், திமுக தலைமையை குளிர்விப்பதில் மிகுதியாக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று விமர்சனங்கள் வரிசை கட்டி எழுவதை தமிழ்நாடு பார்த்து கொண்டு தான் இருக்கிறது.

கலைஞரின் பிறந்த மாதமான ஜுன் மாதத்திலேயே சென்னையில் கூடிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற போதுதான், கலைஞரின் நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் உள்ளிட்டோருக்கு திரையுலக பிரமுகர்கள் நேரிலேயே சந்தித்து விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்து அவர்களின் ஒப்புதலையும் பெற்றுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவில் அல்டிமேட் நடிகர் அஜித் கலந்து கொள்கிறார் என்கிற தகவல் வெளியானபோதே, அவரின் கடந்த கால உணர்வுகளை எல்லாம் பொதுதளங்களில் பகிர்ந்து, அஜித் கூட ஆட்சியாளர்களுக்கு பயந்து விட்டாரா என்று கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு முதல்  11 ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியை தமிழ் திரைப்படவுலகினர் நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். திரையுலகத்தின் மீது எப்போதுமே பரிவு காட்டிய கலைஞர் மு.கருணாநிதி, திரையுலகினர் பயன்பெறும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றினார். அவற்றில் முத்தாய்ப்பான கோரிக்கை என்றால், சென்னை அருகே உள்ள பையனூரில் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்ததுதான்.

திரையுலகைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு சொந்தமாக வீடு கிடைப்பதற்கு உத்தரவிட்ட கலைஞர் மு.கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ் திரையுலகம் சார்பில் பிரமாண்டமான பாராட்டு விழா கொண்டாடப்பட்டது.

400 தயாரிப்பாளர்கள் கூடி எடுத்த முடிவின் படி, கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் திரையுலக நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்பட அனைத்து நடிகர்களும் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், நட்சத்திர நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல நடிகைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின் கதாநாயகரான கலைஞர் மேடையில் அமர்ந்திருந்த நேரத்தில் வாழ்த்தி பேச வந்த நடிகர் அஜித், இதுபோன்ற விழாக்களுக்கு வர வேண்டும் என்று திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டுகிறார்கள் என்று ஆவேசம் காட்டியது, கலைஞர் உள்பட அனைவரையும் அதிர வைத்தது.

நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டலை முதல்வர் கலைஞர் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று பொங்கினார் அஜித்.

அஜித்தின் சூடான பேச்சு, பாராட்டு விழா கூட்டரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நேரத்தில், பேச்சின் நிறைவாக, தமிழ் திரையுலகத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி செய்துள்ள உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் எண்ணத்துடன்தான் விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறி விட்டு எந்த சலனமும் இல்லாமல் சென்றார் அஜித்.

நடிகர் அஜித்தை போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் விழாவிற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று அப்போதைய நடிகர் சங்க தலைவர் நடிகர் சரத்குமார் வற்புறுத்தியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

அதன் காரணமாகதான், அஜித்தின்

சூடான மேடை பேச்சை ஆமோதிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கலைஞர் மு.கருணாநிதிக்கு அருகில் அமர்ந்திருந்த போதும் எழுந்து நின்று கை தட்டினார்.

கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலத்திலேயே ஆட்சியாளர்களுக்கு அணுசரணையாக இருக்க வேண்டாம் என்று பொங்கிய நடிகர் அஜித், இன்றைய தேதியில் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் போதும், அதுவும் ஆளுமை மிகுந்த தலைவரான  கலைஞர் மறைந்தவிட்ட பிறகும் கூட, ஆட்சியாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து போனதின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர்கள்.

அஜித்தின் சம்மதம் குறித்து அவருக்கு நெருக்கமான திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறும் தகவல்கள், வியப்பில் ஆழ்த்துகிறது.

50 வயதை கடந்துவிட்ட அஜித்திடம், இன்றைய தேதியில் மிகுதியான பக்குவம் தெரிகிறது.

ஆட்சியாளர்களின் ஆதரவு இருந்தால் தான் திரையுலகம் வெற்றிகரமாக செயல்பட முடியும். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று தர முடியும் என்பதை உனர்வுப்பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். அதன் காரணமாகவே, கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

அதைவிட முக்கியமாக கலைஞர் உயிரோடு இருந்த போது, அவரது மனதை நோகடிக்கும் வகையில் பேசியதற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில், கலைஞரின் நூற்றறாண்டு விழாவில் கலந்து கொண்டு சமன் செய்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார் என்கிறார்கள் அஜித்தை எப்போதுமே கொண்டாடி வரும் திரைப்பட தயாரிப்பாளர்கள்.

இப்படிபட்ட பின்னணியில், 

திரைப்பட நடிகர்களை தவிர்த்து, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எந்த ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றாலும் ஆட்சி தலைமையின் அன்பை பெறுவதற்காக மிகவும் பணிவுடன் நடந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பெரியளவில் எழுவது ஒவ்வொரு ஆட்சியின் போதும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களே இரு அணியாக பிரிந்து நின்று, எதிரணியினரை வம்புக்கு இழுப்பது என்பது வாடிக்கையாக தான் இருந்து வருகிறது.

அந்த வகையில்தான், தற்போது கலைஞர் மு.கருணாநிதிக்கு திரையுலகினர் எடுக்கும் நூற்றாண்டு பாராட்டு விழாவும் பெருமளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அனல் பறக்கும் வசனங்களை எழுதி பராசக்தி மூலம் தமிழ் திரையுலகையே புரட்டி போட்ட கலைஞர் மு.கருணாநிதி, கதாசிரியராக, வசனகர்த்தவா, பாடலாசிரியராக,  தயாரிப்பாளராக என பல அவதாரங்கள் எடுத்து தமிழ் திரையுலகிற்கு ஆற்றியுள்ள பங்களிப்பை நினைவு கூர்ந்தும், அதனை பாராட்டு வகையிலும், நூற்றாண்டு விழாவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சைகளை விட, விழா நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தேதி தான், கலைஞரையும் புரட்சித்தலைவரையும் மோத வைத்துவிட்டது என்கிறார்கள் பழங்கால திரையுலக பிரமுகர்கள்.

கலைஞர் மு.கருணாநிதியை விட திரையுலகமே வாழ்க்கையாக வாழ்ந்தவரும் திரைப்பட தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, அனைத்து துறை கலைஞர்களையும் நிம்மதியான வாழ்க்கைக்கு வித்திட்டவருமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, 2021 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அப்போது முதல் அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. ஆனால், அப்போது அந்த விழாக்களில் திரையுலகத்தைச் சேர்ந்த எந்தவொரு பிரபலமும் கலந்து கொள்ளவில்லை.

அதைவிட முக்கியமாக திரையுலகம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு கொண்டாடவில்லை. கதாநாயகராக எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களை தயாரித்து பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கும் கூட சென்னையில் இருக்கின்றன. ஆனால், அவர்கள் கூட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

திரையுலகிற்கு கலைஞர் மு.கருணாநிதி எந்தளவுக்கு பங்களிப்பு செய்திருக்கிறாரோ அதற்கு இணையாகவே இன்னும் சொல்லப் போனால் கூடுதலாகவே பங்களிப்பு ஆற்றியவர்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று ஆதங்கத்தோடு கூறுகிறார்கள் அவரது விசுவாசிகள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீது திரையுலக பிரமுகர்களுக்கு அச்சம் இல்லை. அதனால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திரையுலகம் சார்பில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், இப்போதைய திராவிட மாடல் ஆட்சியை கண்டு  திரையுலக பிரபலங்கள் பயப்படுகிறார்கள். இல்லையென்றால் ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வை தங்கள் மீது விழ வேண்டும் என்பதற்காக திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர், திராவிட மாடல் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே கலைஞர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர்களே முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கலைஞர் நூற்றாண்டு பாராட்டு விழாவே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், விழாவிற்காக குறிக்கப்பட்டிருக்கும் நாளும் கூட, கடந்த இரண்டு நாட்களாக சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டிசம்பர் 24 ஆம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாள். அன்றைய தேதியில் அதிமுகவினர் மட்டுமல்ல, விளிம்பு நிலை மக்களும் கூட எம்ஜிஆரின் திருவுருப்படங்களுக்கு மாலையணிவித்து, துக்கத்தை கடைப்பிடிப்பார்கள். அன்றைய தினம் கலைஞருக்கு பாராட்டு விழா நடத்துவது பொருத்தமாக இருக்குமா.. எம்ஜிஆரும் கலைஞரும் ஆயுள் முடியும் வரை பகையை மறந்து நட்பை புதுப்பித்துக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே திமுகவும் அதிமுகவும் எதிரும் புதிருமாகவே இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இப்படிபட்ட பின்னணியில், அதிமுகவினர் துக்க நாளாக கடைப்பிடிக்கும் நாளில்,  ஆட்சியாளர்களை மகிழ்விப்பதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது தமிழ் திரையுலகினருக்கு உண்மையில் சந்தோஷத்தை தரக் கூடிய ஒன்றுதானா என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள் திரையுலகைச் சேர்ந்த விமர்சகர்கள்.

எம்ஜிஆர் நினைவு நாள் மட்டுமல்ல, அவருக்கு எல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த மறைந்த தந்தை பெரியாரின் நினைவுநாளும் டிசம்பர் 24 ஆம் தேதி தான்.

அதனால், அன்றைய நாளில் கலைஞருக்கு பாராட்டு விழா நடத்துவது ஒன்றும் பெரிய குற்றமாகிவிடாது என்று திமுக ஆதரவு மனநிலையில் உள்ள திரையுலக பிரபலங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பிதழே இன்னும் அச்சடிக்கப்படவில்லை. அதற்கு முன்பாகவே, எதிர்முகாமைச் சேர்ந்தவர்கள் சர்ச்சைகளை சூடாகவே கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

விழாவில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், அதில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள்,  நூற்றாண்டு விழாவில் தமிழ் திரையுலகத்தினர் மட்டும் பங்கேற்பார்களா, அல்லது தென்இந்தியாவைச் சேர்ந்த திரைபிரபலங்கள், இந்திய அளவில் பிரபலமான திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா.. மாநில உரிமை சார்ந்து மொழி, இன உணர்வு பிரச்னைகள் எல்லாம் தலை தூக்குமா என்பதை எல்லாம் நினைத்தால் இப்போதே தலை சுற்றுகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் திரையுலகத்தைச் சேர்ந்த நடுநிலையாளர்கள்.

எம்.ஜி.ஆர் நினைவுநாளில் கலைஞருக்கு எடுக்கப்படும் நூற்றாண்டு பாராட்டு விழா, அவரின் மீது அபரிதமான பக்தி கொண்டிருக்கும் திரையிலக பிரமுகர்கள், விசுவாசிகள், sளவிளிம்பு நிலை மக்கள் என அனைவரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக மூலம் பிழைப்பை நடத்தி கொண்டிருக்கும் அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று ஆவேசமாக பொங்குகிறார்கள் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்கள்.

டிசம்பர் 24 ஆம் தேதி வரை திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களுக்கு எதிராக சர்ச்சைகள் அதிகமாக எழுவதை தவிர்க்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.