Sat. Nov 23rd, 2024

ராஜஸ்தானில்… மத்திய பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளர் யார்?

அயோதி கோயில் விவகாரம் தாமரையை மலர வைக்குமா..?

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக வீதி வீதியாக சுற்றிக்  கொண்டிருக்கிறார்கள்.

தெற்கை விட, வட இந்தியாவில் ஹிந்து மத ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களான……. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் வெற்றி முக்கியம் என்பதால், உள்துறை அமைச்சர் அமித்ஷா இறுதிகட்ட பிரச்சாரத்தில் பதற்றமாக காணப்படுவதாக பாஜக மூத்த தலைவர்கள் புலம்புகிறார்கள்.

50 நாட்களுக்கு மேலாக பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நேரத்தில், இதுவரை மோடியின் பெருமைகளை மட்டுமே நெஞ்சை நிமிர்த்தி பேசி வந்த அமித்ஷா, வாக்காளர்களிடம் நாளுக்கு நாள் காங்கிரஸுக்கு செல்வாக்கு கூடி வருவதை பார்த்து பயந்துவிட்டார் என்கிறார்கள்.

மிசோரம் மாநிலத்தில் ஏற்கெனவே சட்டசபைத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில, சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவே நடைபெற்று முடிந்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடித்த கூத்துகளை பார்த்து, பாஜக மூத்த தலைவர்களே அதிர்ச்சிக்குள்ளாக்கியருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரியணை ஏறுவதை தடுக்க, கடைசி கட்ட ஆயுதமாக அயோத்தி கோவில் விவகாரத்தையும் அமித்ஷா பயன்படுத்தி விட்டார்.

மோடியின் செல்வாக்கை விட அயோத்தி கோயில் விவகாரமும், இந்து மத உணர்வுகளுமே தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் என்று அமித்ஷா நம்பிக் கொண்டிருப்பதுதான் நகைப்பிற்குரிய ஒன்று என்று மத்திய பிரதேச பாஜக தலைவர்கள் உரக்க கூறுகிறார்கள்.

மோடியின் செல்வாக்கு மட்டுமே பாரதிய ஜனதாவிற்கு வெற்றியை தேடி தந்து விடாது. இந்து மத உணர்வை தூண்டிவிட்டால்தான் பாரதிய ஜனதாவின் வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று அமித்ஷாவே முடிவெடுத்துவிட்டதால் மோடி அலை மாநில தேர்தல்களிலேயே கேள்விக்குறியாகிவிட்டது.   

அமித்ஷாவிடம் காணப்படும் பதற்றம்தான், அகில இந்திய பாஜக மூத்த தலைவர்களையும் புலம்ப வைத்துவிட்டது.  

தேர்தல் சாணக்கியரான அமித்ஷா, ஐந்து மாநில தேர்தலை பார்த்து பயந்துவிட்டார் என்றும் டெல்லி பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் தான் 5 மாநில தேர்தல் என்ற பேச்சு, நாடு முழுவதும் சூட்டை கிளப்பி கொண்டிருக்கிறது.  

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என நாடு முமுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு இப்போது இருந்தே தயாராகி வருகிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு பிறகும் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்கக் கூடாது. 2024 MP தேர்தலுக்குப் பிறகு மோடியே மீண்டும் பிரதமராக பதவியில் அமர்ந்தால், இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பயப்படுகிறார்கள்.

மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணியை உருவாக்கிய காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகள் கடந்த பல மாதங்களாக மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைளை நாடு முழுவதும் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையை பார்த்து அகில இந்திய பாஜக தலைவர்கள் பயந்து போய்விட்டார்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு அபரிதமாக கிடைத்து வரும் செல்வாக்கை உடைப்பதற்கு மோடியும், அமித்ஷாவும் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இப்படிபட்ட நேரத்தில் 5 மாநில தேர்தலும் மோடி மற்றும் அமித்ஷாவின் தூக்கத்தை, நிம்மதியை கெடுத்துக் கொண்டு இருக்கிறது.

.இரண்டு தலைவர்களின் எண்ணங்களுக்கு மாறாக, மோடியின் செல்வாக்கு, பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் சரியவில்லை. உலகளவில் மோடிக்கு கிடைத்து வரும் செல்வாக்கைப் பார்த்து, இந்தியாவிலும் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது.

குறிப்பாக இளம் வாக்காளர்களிடம் மோடியின் செல்வாக்கு, 2014  மற்றும் 2019  ஆகிய தேர்தல்களில் காணப்பட்டதை விட தற்போது அதிகமாகியிருக்கிறது என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஐந்து மாநில பாஜக நிர்வாகிகள்.  

மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து  நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வந்தாலும் கூட, 2024 தேர்தலில் மோடி தலைமையில் பாஜக அரசே மீண்டும் அமையும் என்று  பாஜக மூத்த நிர்வாகிகள் உறுதிபட கூறுகிறார்கள்

நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் இறுமாப்புடன் சுற்றி வருவதை பார்த்து சீற்றமடைந்திருக்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, மத அரசியல்தான் தேர்தல் வெற்றிக்கான ஆயுதம் என நம்பும் மோடி அரசுக்கு சரியான பாடம் புகட்ட, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலையை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து MP தேர்தலுக்கு  முன்பே மத்திய பாஜக அரசை நிலை குலைய செய்ய வேண்டும் என்பதுதான் ராகுல்காந்தியின் திட்டம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகவே கூறி வருகிறார்கள். .

5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை போலதான், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அமையும் என காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் முழங்கி கொண்டிருக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சிகளின் முழக்கங்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி……….

ஊழல் இல்லாத ஆட்சி அமையவும்……

அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும்  வாரிசுகளின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்கவும்

காங்கிரஸை புறக்கணித்துவிட்டு, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தர வேண்டும் என மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் வாக்காளர்களை மூளை சலவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல, மோடி அமைச்சரவையில் உள்ள மத்திய பாஜக அமைச்சர்களும் தேர்தல் பரப்புரையில் ஆவேசம் காட்டி கொண்டிருக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கும் ராஜஸ்தானில்  காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு, பாரதிய ஜனதா ஆட்சியை அமைக்கவும் மோடியும் அமித்ஷாவும் இணைந்து படாதபாடு பட்டுக் கொண்டிருககிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது,

சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என தொடரும் பரம்பரை குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  

நாட்டின் வளர்ச்சி மீது காங்கிரஸுக்கு அக்கறை இல்லை. மதவாத கும்பல்களுக்கு காங்கிரஸ் துணை போகிறது.  அயோத்தியில் ராமர் கோயில் கட்ட  தடையாக இருந்தது என திரும்ப திரும்ப காங்கிரஸை குறி வைத்தே மோடியும், அமித்ஷாவும் முழு நேரமும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்..

காங்கிரஸுக்கு எதிராக இந்து மத வெறியை தூண்டிவிட்டால் போதும் மாநிலங்களிலும் மத்தியிலும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த மோடிக்கும் அமித்ஷாவுக்கும் ராஜஸ்தான், மத்திய பிரசேத மாநில மக்கள் ஏமாற்றத்தையே தருவார்கள் என்று தேர்தல்  ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா என்று  பாஜக தலைவர்கள் கிண்டலாக கேட்கிறார்கள். ஆனால் ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் யார்?

மோடியும், அமித்ஷாவும் ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் சூடான கேள்விக்குதான் மோடியிடமும் அமித்ஷாவிடமும் பதிலே இல்லை என்பதுதான் இரண்டு மாநில வாக்காளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

கோஷ்டி பூசலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியே, தேர்தல்கள் தந்த தோல்வியில் பாடம் கற்றுக் கொண்டு சுதாரித்துக் கொண்டது.

ராஜஸ்தானினில் ஆளுமை மிகுந்த முதல் அமைச்சர் அசோக் கெலாட்டையே முதல் அமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்திவிட்டது.

அதேபோல, மத்திய பிரதேசத்திலும் அனுபவம் மிகுந்த ஆளுமையான கமல்நாத்தை, முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டது காங்கிரஸ் மேலிடம்.

காங்கிரஸை போல, மத்திய பிரதேசத்தில் ஆளும்கட்சி முதல்வரான சிவராஜ் சிங் சவுகான் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்கு மோடியும், அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்.

மாநிலம் மற்றும் மத்தியிலும் இரட்டை என்ஜின் போல பாஜக அரசு இருந்த போதும், மத்திய பிரதேச மக்களிடம் பாஜக அரசுக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தி அலை, மோடி, அமித்ஷாவை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

சவுகான் மீது நம்பிக்கையை இழந்துவிட்ட பாஜக மேலிடம், மத்திய அமைச்சர்களையும், எம்பிக்களையும் பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறது.

ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்த பிரபல தலைவர்களையும் கூட முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பாஜக மேலிடம் தயக்கம் காட்டி வருகிறது.  

முதல்வர் வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டு விட்ட மோடி, அமித்ஷா கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கேட்கும் கேள்வியை பார்த்து இப்போது வாக்காளர்களும் முணுமுணுக்க தொடங்கிவிட்டார்கள்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும்  பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக காற்று வீசவில்லை.

மத்திய பாஜக அரசு மீதான அதிருப்தி பன்மடங்கு அதிகரித்து இருப்பதை உணர்ந்து கொண்டுவிட்டார் அமித்ஷா என்று கூறுகிறார்கள் மாநில பாஜக தலைவர்கள்.  கடந்த சில நாட்களாக அமித்ஷாவின் பதற்றத்தை அவரின் தேர்தல் பிரசாரம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் மத்திய பிரதேச  மாநில மூத்த ஊடகவியலாளர்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ராகுல்காந்திக்கு எதிராக தனிமனித தாக்குதலை மேற்கொண்டு வந்த அமித்ஷா, காங்கிரஸை விட பாரதிய ஜனதாவின் செல்வாக்கு படு வீக்காக இருக்கிறது  என்பதை உணர்ந்து கொண்டு, அயோத்தி கோயில் விவகாரத்தை கையில் எடுத்துவிட்டார்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில்  பாஜவை ஆட்சியில் அமர வைத்துவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி ஆட்சியை நாட்டு மக்கள் குழப்பம் இல்லாமல் ஆதரித்து விடுவார்கள் என்று அமித்ஷா பெரிதும் நம்புகிறார்.

மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு மக்கள் தரும் ஆதரவே 2024 ல் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சியில் அமைப்பதற்கு ஊக்கமாக இருக்கும்  என்று அமித்ஷா அலறிக் கொண்டிருப்பதை பார்த்துதான் டெல்லி பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சியைடைந்து இருக்கிறார்கள்.  

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் கொண்டிருப்பதை போலவே, மத்திய பிரதேசத்திலும் பதவி ஆசையில் உள்ளூர் பாஜக தலைவர்கள், மோடி, அமித்ஷா ஆகியோரின் கட்டளைகளுக்கு அடிபணியவில்லை.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திவிட்டு பாஜக ஆட்சியை நிறுவ துடித்துக் கொண்டிருக்கும்  அமித்ஷா, மோடி கூட்டணிக்கு  ராகுல்காந்தியின் தேர்தல் ஆயுதமான சாதி வாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது.  

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் உண்மையான அக்கறை இல்லாத போதும் தேர்தல் வெற்றிக்காக, சாதி வாரி கணக்கெடுப்பு வாக்குறுதிக்கும் மோடியும், அமித்ஷாவும் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் முக்கிய இடத்தை தந்து விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மோடியும் அமித்ஷாவும் காப்பியடிப்பதை பார்த்து, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இரண்டு தலைவர்களும் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்கள் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துகள் கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களை உசுப்பேற்றி வந்தாலும் கூட, ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் வெற்றியை தடுத்துவிட்டு இரண்டு மாநிலங்களிலும் பாஜகவை அரியணையில் அமர வைப்பது என்பது குதிரைகொம்பு என்பதை மோடியும் அமித்ஷாவும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாரதிய ஜனதாவை அரியணையில் ஏற்றுவதற்கு அயோத்தி கோயில் விவகாரம்தான் சரியான ஆயுதம் என மோடியும், அமித்ஷாவும் தீர்மானித்துவிட்டார்கள்

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியில் அமர வைத்தால், பொதுமக்கள் அனைவரையும்  அயோத்தி கோயிலுக்கு அழைத்தும் செல்லும் செலவுகளை பாரதிய ஜனதா கட்சியே ஏற்றுக் கொள்ளும் என்று மோடியும், அமித்ஷாவும் வாக்குறுதி அளிப்பது, அப்பட்டமான மதப் பிரசாரம் என்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புக்கு எதிராக, மத உணர்வுகளை தூண்டிவிடும் வகையில், கடந்த பல தேர்தல்களில் பாஜக கையாண்டு வரும் தேர்தல் யுக்தியை, மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும்  பயன்படுத்த தொடங்கிவிட்டார் உள்துறை அமித்ஷா என்று அதிர்ச்சியோடு கூறுகிறார்கள் ஜனநாயகவாதிகள்.

,ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபலமான மத்திய பாஜக அமைச்சர்கள், பாஜக எம்பிக்ள் ஆகியோரை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட அனுப்பி வைத்தவரும் அமித்ஷாதான் என்கிறார்கள்.

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தி அலை, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் செல்வாக்கு நாடு முழுவதும் அதிகரித்து வருவதைப் போல, மூன்று மாநிலங்களிலும்  மக்களின் ஆதரவு அதிகமாகி கொண்டே வருகிறது.

கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஒரு கோடி பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட ஸ்மார்ட் போன் போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள், பொதுமக்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால், ராகுல்காந்தி அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்கள் முழுமையாக நம்ப தொடங்கிவிட்டார்.

ராஜஸ்தான் வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றம், காங்கிரஸ் தலைவர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

முதல் அமைச்சர் பதவியில் கெலாட் நீடிப்பதை விரும்பாத சச்சின் பைலட் கூட, பதவி சண்டையை மறந்துவிட்டு, காங்கிரஸின் வெற்றிக்காக கடுமையாக உழைப்பதும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் மிகுந்த உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியை அறுவடையை செய்துவிடலாம் என்ற நப்பாசையில் ராஜஸ்தான் மாநிலத்தை சுற்றி சுற்றி வரும் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் டிசம்பர் 3 ஆம் தேதி மிகப்பெரிய ஏமாற்றத்தையே ராஜஸ்தான் வாக்காளர்கள் தருவார்கள் என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.  மத்திய பிரதேசத்தில் 2018 தேர்தலிலேயே பாரதிய ஜனதாவை கைவிட்டவர்கள்தான் அந்த மாநில வாக்காளர்கள்.

முதல் அமைச்சர் வேட்பாளர் யார் என்று பாரதிய ஜனதா அறிவிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளராக கமல்நாத்தை அடையாளப்படுத்தப்படுதவால், காங்கிரஸ் பக்கம் உத்தரப்பிரதேசம் சாய்ந்து கொண்டிருக்கிறது.

எம்எல்ஏக்களை திருடி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது என்று ராகுல்காந்தி போகிற இடங்களில் எல்லாம் பேசி வருவது, மோடியையும் அமித்ஷாவையும் வயிறு எரிய வைத்துவிட்டது.

சீனப் பொருட்கள்தான் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பார்க்க முடிகிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சி சுத்தமாக முடங்கிவிட்டது என்றும் ராகுல்காந்தி குற்றம்காட்டுவதை மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பிரதமர் பதவிக்கு உரிய கண்ணியத்தை மறந்துவிட்டு, முட்டாள்களின் தலைவன் ராகுல்காந்தி என்று தனிமனித தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் மோடி.

ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டி காங்கிரஸை பெரும்பான்மையான மக்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டதைப் பார்த்து மோடியும் அமித்ஷாவும் ஆடிப்போயிருக்கிறார்கள்.

நிறைவாக, டிசம்பர் 3 ஆம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது

மோடியின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறதா..

சரிந்து இருக்கிறதா…

இந்து மத உணர்வாளர்களே காட்டி கொடுத்துவிடுவார்கள்..