Sat. Nov 23rd, 2024

ஆயுளுக்கும் மக்கள் வரிப்பணத்திலேயே வயிற்றை கழுவிக் கொள்ளும் நிலையில் உள்ள ஆர்.என்.ரவி, தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வாசிப்பது தான் பிரயாசித்தம் தேடிக் கொள்வதற்கு ஒரே வழி ஆகும்.

தோழர் சங்கரய்யாவுக்கு நல்லரசுவின் செவ்வணக்கம்..

20 வயது வாலிபர் கம்யூனிஸ்ட் சிந்தனை இல்லாமல் இருந்தால், அவரது மூளையை சோதித்து பார்க்க வேண்டும்.

50 வயதுக்கு மேல் வாழும் ஒருவர் கம்யூனிஸ்ட்டாகவே இருந்தால் அப்போதும் அவர் மூளையை ஆய்வு செய்து பார்ப்பது அவசியமாகும்..

இப்படி முத்தான வார்த்தைகளை 20 ஆண்டுகளுக்கு முன்பு உதிர்த்தவர் வேறு யாருமல்ல.

தமிழ்நாட்டில் பிறந்த அறிவு ஜீவி, பொருளாதார நிபுணர், பிரபல வழக்கறிஞர், நாடு முழுவதும் பிரபலமானவரான காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் .ப, சிதம்பரம்தான்.

இளமையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாழ்க்கையை ஒப்படைப்பது என்பது எல்லோருக்குமே சாத்தியமான ஒன்றுதான்.  இளம் ரத்தம் எப்போதுமே சூடாக இருக்கும் என்பதால் அநீதிக்கு எதிராக பொங்க வைக்கும், போராட்டத்தை முன்னெடுக்க வைக்கும். ஆனால், தள்ளாடும் வயதிலும் கம்யூனிஸ்ட் சிந்தனையோடு போராட்ட களத்தில் கர்ஜிப்பது என்பது பொதுவுடைமைத் தோழர்கள் அனைவருக்குமே கைகூடுவது என்பது சாத்தியமான ஒன்றல்ல.

தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தவாதிகள் அதிகமாக இருக்கும் நேரத்திலும், தமிழ் தேசியவாதிகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வரும் நேரத்திலும், திராவிடமும் வேண்டாம், தமிழ் தேசியமும் வேண்டாம், இந்து மதத்தை போற்றி பாதுக்கும் தேசியமே முக்கியம் என்றும் தமிழ்நாட்டில் இளைஞர்கள் தடம் மாறிக் கொண்டிருக்கும் போது, பொதுவுடைமைத் சிந்தனைகள்தான், நாட்டின் விடுதலைக்கு மட்டுமல்ல, மனித விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் தலை சிறந்த பாதை என்று நம்பிக்கையோடு கம்யூனிஸ்ட் கட்சியில் பயணிக்கிற இளைஞர்களுக்கு தோழர்கள் சங்கரய்யாவும், நல்லக்கண்ணு அய்யாவும்தான் கதாநாயகர்கள்.

அரசியல் வாழ்க்கை என்பதே அதிகாரத்தை அனுபவிப்பதற்கும் வசதி வாய்ப்பை பன்மடங்கு அதிகரித்துக் கொள்வதற்கும் எளிதாக பாதை அமைத்துக் கொடுக்கிறது என்ற எண்ணம்தான், இன்றைக்கு அரசியலில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் மிதமிஞ்சியாக உணர்வாக உள்ளது.

ஆனால், பள்ளி பருவத்தில் இருந்தே எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்பவர்கள், ஆயுளின் நிறைவில் நிற்கும் நேரத்திலும் கூட மனம் மாறாமல், உறுதியாக களமாடுவது என்பது சஞ்சலமான மனம் படைத்தவர்களுக்கு சாத்தியமில்லாத ஒன்று.

தோழர் சங்கரய்யா போல, தோழர் நல்லக்கண்ணு போல, கோடிகளில் ஒரு சிலருக்குதான் இரும்பை விட, உறுதியான, சக்தி வாய்ந்த மனம் இருக்கும்.

தோழர் சங்கரய்யாவின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தியாகத்தை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

9 வயது பள்ளி மாணவராக இருந்த போது பகத்சிங்கிற்கு தூக்குத்தண்டனை விதித்ததை எதிர்த்து தூத்துக்குடியில்   நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார் சங்கரய்யா. அன்றைய தேதியில் இருந்து அநீதிக்கு எதிராக சங்கநாதம் எழுப்புவது தோழருக்கு பிடித்தமான முழக்கமாகிவிட்டது.

தாத்தாவை போல பகுத்தறிவு சிந்தனையை பாலபாடமாக கொண்ட சங்கரய்யா, சிந்தனை சிற்பி சிங்காரவேலர், தந்தை பெரியார், உலகம் போற்றிய தலைவராக இருந்த போதும் எளிமையான வாழ்க்கை, நேர்மை தவறாக அரசியல் பாதையிலும் பயணித்த மகாத்மா காந்தியடிகள் வழியில் அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் என்.சங்கரய்யா.

13 வயது மாணவராக இருந்த போதே சங்கரய்யா, தமிழில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் அபார திறமை பெற்றிருந்தார். கல்வி என்பது வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழி என்பதை விட அறிவு கண் திறப்பதற்கான சாவி என்பதை பள்ளி பருவத்திலேயே உணர்ந்து கொண்டிருந்தவர்தான் சங்கரய்யா.

கல்லூரி படிப்பை விட இந்திய திருநாட்டின் விடுதலை முதன்மையானது என போராட்டக் களத்திற்கு பயணமானவர் தோழர் சங்கரய்யா. 8 ஆண்டு சிறை வாழ்க்கையும், மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் சங்கரய்யாவின் விடுதலை வேள்வியை, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.

தன்மான உணர்வையும், அடிமை மனநிலையில் இருந்து விடுதலை பெறவும் தோழர் சங்கரய்யாவின் சிங்க குரல், ஆகச் சிறந்த திறவு கோலாக அமைந்தது. சிங்கத்தின் கர்ஜனையைப் போல சங்கராய்யாவின் மேடை பேச்சு அமைந்திருக்கும். தோழரின் முழக்கம் எட்டுத்திக்கும் ஒலித்த போது, முதாலளித்துவ ஆதிக்கம் தவிடு பொடியானது.

1922 ஆம் ஆண்டில் கோவில்பட்டி நரசிம்மலு-ராமானுஜம்  தம்பதியிருக்கு மகனாக பிறந்த சங்கரய்யா, கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே சிறைச்சாலை வாசியானார்.

பொதுவுடைமை சிந்தனையை ஆழமாக உள்வாங்கிக் கொண்ட சங்கரய்யா, இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, சாதியின் பெயரால் தமிழகத்தில் தாண்டவமாடிய தீண்டாமை கொடுமையையும் கடுமையாக எதிர்த்தவர் சங்கரய்யா.

1942 ஆம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்டோர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழையும் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் நின்றவர் சங்கரய்யா.

1943 முதல் 1947 வரை மதுரை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை மூலை முடுக்கெல்லாம் வளர்த்தெடுத்தவர் சங்கரய்யா. விவசாய கூலிகள் கொத்தடிமையாக வாழக்கூடாது என்று 75 ஆண்டுகளுக்கு முன்பு சங்கநாதம் செய்தவர் சங்கரய்யா.

தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சென்று விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மாநிலம்  தழுவிய சங்கத்தை அமைத்து விவசாய தொழிலாளர்களுக்கான உரிமைகளை பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பெற்று தந்தவர். 

வாய் மொழி வரலாறு என்ற தலைப்பில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த தியாக தலைவர்களின் வரலாறுகள் பதிவாகியிருக்கிறது. அதன் பக்கங்களில் சங்கரய்யாவின் தியாக வாழ்க்கையும் பாடமாகியிருக்கிறது.

1946 ஆம் ஆண்டில் உணவு தானியங்களை பதுக்கி வைத்திருந்த கள்ளச்சந்தைகாரிர்களிடம் இருந்து அதிரடியாக மீட்டு விளிம்பு நிலைக்கு வழங்கியவர் சங்கரய்யா.

இளம்வயதிலேயே சங்கரய்யாவின் துணிச்சலை பார்த்து, தமிழகமே வியந்து போனது.

ஏழை மக்களின் பசியாற்றிய சங்கரய்யாவுக்கு சிறை தண்டனைதான் பரிசாக கிடைத்தது. இருப்பினும், அடக்குமுறைக்கு எதிரான அறச்சீற்றம், சங்கரய்யாவின் மனதில் அக்னி குஞ்சி போல தகதகவென அனலை வீசிக் கொண்டே இருந்தது.

1942 ஆம் ஆண்டில், தமது 20 வயது வயதில் இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதே ஆண்டில் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை ஆங்கிலேயே அரசு கைது செய்து சிறையில் அடைத்த போது, நெல்லையில் மாணவர்களை, பொதுமக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தவர் சங்கரய்யா.

1995 முதல் 2002 ஆண்டு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக சேவையாற்றியவர் சங்கரய்யா. 7 ஆண்டு காலமும் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்தார்கள்.

ஆட்சியாளர்கள் யார் என்றே பார்க்கமாட்டார். மக்கள் விரோத செயல்களை ஆட்சியாளர்கள் முன்னெடுத்தால், ஒருநிமிடம் கூட தாமதிக்கால் கடுமையாக எதிர்த்தவர் சங்கரய்யா.

சங்கரய்யாவை போல ஒரு ஆளுமைமிகுந்த எதிர்க்கட்சித் தலைவரை வாழ்நாளில் பார்த்ததே கிடையாது என்று அன்றைய ஆளும்கட்சித் தலைவர்களே வெளிப்படையாகவே பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் கூட்டணிக்காக சமரசம் செய்து கொள்ளும் சிந்தனை போக்கே சங்கரய்யாவிடம் காணப்பட்டது இல்லை. ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவர்கள் கூட, வசதி வாய்ப்புகளில் உச்சத்தில் இருக்கிறார்கள்.

தேர்தல்களில் தோல்விகளை சந்தித்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி, தன் குடும்பமே பிரதானம் என வாழ்ந்து மறைந்தவர்களின் முகவரிகளை கூட இன்றைக்கு உச்சரிக்க ஆளில்லை.

ஆனால், பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் தீண்டாமைக்கு எதிராக போராட்டம்.. சாதி மறுப்பு…மத மறுப்பு போன்றவற்றை பிரசாரத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், சாதி வேறுபாடுகளையும் மத உணர்வுகளை நீக்குவதற்கும் தன்னையும் தமது குடும்ப வாரிசுகளையும் உதாரணமாக்கி கொண்டது என்பது அவரின் 100 ஆண்டு கால தியாக வாழ்க்கைக்கு முன்பு வேறு எந்தவொரு அரசியல் தலைவரையும் அடையாளம் காட்டிவிட முடியாது.

வாலிபத்தில் மட்டுமல்ல தள்ளாத வயதிலும் கூட எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தவர் தோழர் சங்கரய்யா.

பொதுவாழ்க்கை வேறு.. தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று வாழ்க்கையை அமைத்து கொள்ளாமல், ஒட்டுமொத்த வாழ்க்கையையும் திறந்த புத்தகமாக்கி, மனித பிறவி என்பதே சம மனிதர்களுக்கும், நலிவுற்ற மனிதர்களுக்கும் உதவி புரிவதற்கு.. அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கும் தான்.. ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் அமைப்பதற்கும் கிடைத்த அரிய வாய்ப்பு என்பதை தன் இறுதி மூச்சு வரை உணர்த்திக் கொண்டிருந்தவர் தோழர் சங்கரய்யா.

தோழரின் நூறாவது பிறந்தநாள் விழாவில் பங்கெடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், சங்கரய்யாவின் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கையை நினைவு கூர்ந்து பாராட்டியது எல்லாம், இளம் தலைமுறையினருக்கு வாழ்க்கை பாடமாகும்.

தோழர் என்ற அழைப்பிற்கு சங்கரய்யா அளித்த விளக்கம் மகத்தானது.

சுதந்திர போராளி என்.சங்கரய்யாவின் மரணம், பொதுவுடைமைவாதிகளை மட்டுமின்றி மனித மாண்புகளையும் காந்திய சிந்தனைகளையும் போற்றி பாதுகாத்து வரும் கோடிக்கணக்கான மக்களுக்கு உண்மையிலேதெயே துயரமான செய்திதான்.

இளமைக்காலம் முதல் இறுதி நேரம் வரை பணம்,பதவி, அதிகாரம் என காற்றில் பறக்க விடும் மாய வாழ்க்கை தேடி வந்த போதும் கூட,  அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, எளிய மக்களின் ஏற்றமே மனிதப் பிறவிக்கு மகத்துவம் சேர்க்கும் என்ற ஒற்றை புள்ளியில் ஆயுளை கரைத்துக் கொண்டவர் தோழர் சங்கரய்யா. 

மாணவப் பருவத்தில் இருந்து இறுதி காலம் வரை உண்மையான பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து, இளம் சமுகத்திற்கு அறிவார்ந்த வாழ்க்கையை, அர்த்தமுள்ள பயணத்தை கற்பித்தவர் தோழர் சங்கரய்யா என்றால்  மிகையான பாராட்டு என்று ஒதுக்கிவிட முடியாது.

சங்கரய்யா வாழ்ந்த காலத்தில்தான் ஆர்.என்.ரவி என்பவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு அவமானத்திற்குரிய ஒன்று.

சங்கரய்யாவின் பொது வாழ்க்கையை விட குறைவான காலம் ஆட்சிப் பணியில் காலத்தை கடத்தி கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி, மக்களின் வரிப்பணத்தில் தனது வயிற்றை மட்டுமல்ல, தனது வாரிசுகளுக்கும் சுகபோக வாழ்க்கையை உருவாக்கி தந்திருக்கிறார் என்ற செய்தியெல்லாம்  வெளியாகி, தகுதியற்ற மனிதர்களிடம் எல்லாம் அதிகாரம் சென்றால், எந்தளவுக்கு கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள் என்பதை தமிழ்நாடு உணர்ந்தே இருக்கிறது.

சங்கரய்யாவின் தியாக வாழ்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க விரும்பியது.

வாழ்நாள் முழுவதும் சுயநலமாகவே சிந்தித்து பழக்கப்பட்டவர்.. உயர்சாதிக்குரிய ஆணவம் தலை முதல் பாதம் வரை நிறைந்திருக்க கூடியவரான ஆர்.என்.ரவிக்கு, தோழர் என்.சங்கரய்யாவின் தியாக வாழ்க்கையை உள்வாங்கி கொள்ளும் அறிவே இல்லை. சாவர்க்கர் வழியில் வந்த ஆர்.என்.ரவிக்கு, உண்மையான போராளியான தோழர் என்.சங்கரய்யாவின் மாண்புகள் புரியாமல் இருந்திருப்பது அதிர்ச்சிக்குரிய ஒன்று அல்ல.

சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பின்பும் அநீதிகளுக்கு எதிராகவே குரல் கொடுத்து, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தியாகத்தின் மூலம் கரைத்துக் கொண்டவருக்கு டாக்டர் பட்டம் வழங்க அனுமதி தரவில்லை என்பதை அறிந்து தமிழ்நாட்டில் வாழும் தன்மான உணர்வுமிகுந்தவர்கள் அனைவருமே ஆளுநர் என்ற பதவிக்கே அவமானத்தை தேடி தந்துக் கொண்டிருப்பவர் ஆர்.என்.ரவி என்று கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வந்தார்கள்.

டாக்டர் பட்டம், சங்கரய்யாவின் தியாக வாழ்க்கைக்கு ஒருபோதும் ஈடாகாது.

தோழர் என்ற ஒற்றை சொல் அழைப்பையே உலகின் மிகப்பெரிய அங்கீகாரமாகவே நினைத்திருந்தவர் சங்கரய்யா.

ஆர்.என்.ரவி போன்ற அற்பர்களுக்கு ஆளுநர் என்ற அடையாளம் இருந்தால் தான், அவரின் முகத்தையே ஒருசிலர் ஏறெடுத்து பார்ப்பார்கள். ஆளுநர் என்ற அதிகாரம் இல்லை என்றால், ஆர்.என்.ரவியை அவரது நிழல் கூட மதிக்காது..

தோழர் என்ற சொல்  தமிழ் மண்ணில், தமிழர்கள் மனதில் உச்சரிக்கும் போதெல்லாம் சங்கரய்யா..சங்கரய்யா.. என்றே எதிரொலித்துக் கொண்டிருக்கும்..

சங்கரய்யா என்பவர் தனிமனிதர் அல்ல. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் முழக்கம் அது.