Sat. Nov 23rd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்ஸை விட அதிக அதிகாரம் படைத்தவர்களாக மூன்று பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று உற்சாகமாக கூறுகிறார்கள் தலைமைச் செயலக அலுவலக உயரதிகாரிகள். மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுமே, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதாகவும் அனுபவம் மிகுந்த ஐஏஎஸ் அதிகாரிகளே மனம் திறந்து கூறுகிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி அரியணையில் அமர்ந்தது.

அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசில், துறைச் செயலாளர்களாக இருந்த ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உள்பட நூற்றுக்கணக்கான ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 30 மாத ஆட்சிக்காலத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் சுவாரஸ்யங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொரு முறையும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் குறித்து உத்தரவுகள் வெளியான போது விமர்சனங்களும் எழுந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், முதல் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தலைமைச் செயலாளராக முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட போது, ஆளும்கட்சியான திமுகவை கடந்து, அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு பெற்றது. அதன் பின்னர், முதல் அமைச்சரின் அலுவலக செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், மருத்துவர் உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

மே 15 ம் தேதி 13 ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பிறப்பித்த உத்தரவின் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு, அதிமுக ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அதிகாரிகளை பழிவாங்குகிறது என்ற முணுமுணுப்புகள் தலைமைச் செயலக வளாகத்தில் எழுந்தது.

அதற்கு முக்கிய காரணம், தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் அலுவலகம் முதல் துறை வாரிய செயலாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டதுதான் காரணமாக கூறப்பட்டது. .

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் அலுவலக செயலாளர்களாக, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த சாய் குமார் ஐஏஎஸ், தலைமைச் செயலகத்தில் இருந்தே துரத்தியடிக்கப்பட்டார். இன்றைய தேதி வரை சாய் குமார் ஐஏஎஸ் முக்கியம் இல்லாத சாதாரண துறையிலே செயலாளர் அந்தஸ்தில் கூட இல்லாமல் பணியாற்றி வருகிறார்.

சாய் குமார் ஐஏஎஸ்ஸைப் போல, தலைமைச் செயலாளர் பதவியில் நியமனம் செய்யப்படுவதற்கு முழு தகுதியும் பெற்றிருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்ஸும், கடந்த 30 மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் இருந்து ஜுனியர் ஐஏஎஸ் தகுதிக்குரிய நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறைகளில் நீண்ட காலம் அனுபவம் பெற்றிருக்கும் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ், தலைமைச் செயலகத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு பணியிடம் மாற்றம் செய்து விடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிஞ்சிய அதிகாரம் படைத்த அதிகாரி ஒருவர் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 சாய் குமார் ஐஏஎஸ், ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்ஸைப் போல, 2021 மே மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெயகாந்தன்,  ஜெயஸ்ரீ முரளிதரன், உள்பட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் திராவிட மாடல் ஆட்சிக்கு விசுவாசமாக இருந்த போதும் கூட வேறு வேறு துறைகளுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

 2021 ல் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஐஏஎஸ் அதிகாரிகளிடையே நடைபெற்ற பணியிட மாற்றம் சலசலப்பை ஏற்படுத்தியதைப் போல, அடுத்தடுத்து வெளியிடப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவுகளும் கூட சர்ச்சைக்குரியதாகவே அமைந்திருந்தது.  

கடந்த 30 மாதத்திற்கு முன்பு துறைச் செயலாளர்களாக தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தவர்களில் இன்றைய தேதியில்  இரண்டே இரண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரிகளைத் தவிர மற்ற அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் வேறு வேறு துறைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் வியப்பிற்குரிய செய்தியாகும்.

ஒரே துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் இரண்டு  பெண் ஐஏஎஸ் அதிகாரிகளும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மிகுந்த நம்பிக்கை பெற்றவர்களாகவும் திகழ்ந்து கொண்டிருப்பதுதான் வியப்பிற்குரிய ஒன்று என்று மனம் திறந்து பேசுகிறார்கள் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

அதில் ஒருவர், வணிக வரித்துறை செயலாளராக பணியாற்றி வரும் திருமதி ஜோதி நிர்மலாசாமி ஐஏஎஸ்தான்.

மற்றொருவர் திருமதி சுப்ரியா சாகு ஐஏஎஸ். வனத்துறைச் செயலாளராக பணியற்றி வரும் இவர் முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்.

வணிக வரித்துறை மற்றும் வனத்துறையில் பணியாற்றி வரும் இரண்டு பெண் ஐஏஎஸ் அதிகாரிகளும், அவரவர் துறையைச் சார்ந்த அமைச்சர்களை விட மிகுந்த செல்வாக்கு படைத்தவர்கள் என்று பெருமிதமாக கூறுகிறார்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரிகள்.

கடந்த 30 மாதத்தில் தொடர்ந்து ஒரே துறையில் பணியாற்றி வருபவர்கள் சுப்ரியா சாகும், ஜோதி நிர்மலா ஆகிய இருவர் மட்டும் என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பதுடன், தலைமைச் செயலகத்தில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்கள் என்பதுடன், தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்ஸை விட பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவரின் வார்த்தைகளுக்கு முதல்வரிடம் மிகுந்த  ஆதரவு கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

மூன்றாவது பெண் ஐஏஎஸ் அதிகாரி பெயரை கேட்டால், தலைமைச் செயலக அதிகாரிகள் மட்டுமல்ல, காவல்துறை உயரதிகாரிகளும் கூட அதிர்ச்சியடைகிறார்கள் என்பதுதான் வியப்பிற்குரிய ஒன்றாகும்.

அவர் வேறு யாருமல்ல… திருமதி அமுதா ஐஏஎஸ். இன்றைய தேதியில் உள்துறை செயலாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

2021 மே மாதம்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற போது, திருமதி அமுதா ஐஏஎஸ், டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பதவியில் பணியாற்றி வந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசு பணியில் இருந்து மீண்டும் தமிழ்நாடுஅரசு பணிக்கு திரும்பியர், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு, உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

உள்துறை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பத்திற்கு ஏற்ப தமது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் என்கிறார்கள் உள்துறை அலுவலக பணியாளர்கள்.

சுப்பிரியா சாகு, ஜோதி நிர்மலா ஆகியோருக்கு இல்லாத மற்றொரு சிறப்பு அல்லது முக்கியத்துவம் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு கூடுதலாக இருக்கிறது என்றால், அது முதல்வரின் மனைவி மற்றும் குடும்ப உறவுகளிடம் நன் மதிப்பை பெற்று இருப்பதுதான்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் அடக்கத்தின் போது, குறுகிய நேரத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு அமுதா ஐஏஎஸ் பணியாற்றியதால், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், அவர்களது புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா, முதல்வரின் மருமகன் சபரீசன், அவரது மனைவியும் மு.க.ஸ்டாலின், துர்கா ஆகியோரின் புதல்வியுமான செந்தாமரை, கலைஞர் மு.கருணாநிதியின் புதல்வி கனிமொழி எம்பி என ஒட்டுமொத்த கலைஞர் குடும்பத்து வாரிசுகளும், உறவுகளும் அமுதா ஐஏஎஸ் மீது கனிவு கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

அரசு துறையில் மட்டுமின்றி முதல்வரின் உறவுகளுடனும் செல்வாக்கு பெற்றிருக்கும் அமுதா ஐஏஎஸ் மற்றும் சுப்பிரியா ஷாகு ஐஏஎஸ், ஜோதி நிர்மலா ஐஏஎஸ் ஆகியோரின் செயல்பாடுகளை அடிக்கடி முதல்வர் பாராட்டி கொண்டே இருக்கிறார். முதல்வரின் வாழ்த்துகள் மூனறு பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் உற்சாக டானிக் என்பதால், மிகுந்த செல்வாக்கோடு தலைமை செயலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சக பெண் ஐஏஎஸ் அதிகாரிகள்.

காலம் கடந்த பிறகும் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அளவுக்கு சிறந்த நிர்வாகி என்று பெயர் கல்வெட்டாக பதிய வேண்டும் என்றால், ஒட்டுமொத்த ஆட்சியாளர்களும் திறமையுடன் பணியாற்ற வேண்டும்.

அதற்கு மாறாக ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கிடைத்து, மற்ற அதிகாரிகள் சோர்வடையும் வகையில் பாரபட்சம் காட்டப்பட்டால், அதையும் காலம் பதிவு செய்வதை தடுக்கவே முடியாது.

அந்தவகையில், தலைமைச் செயலகத்தில் 3 பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தால்,  கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐஏஸ் அதிகாரிகள் உள்பட மற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், அடிக்கடி நடைபெறும் பணி மாறுதல்களால், சோர்வடைந்து,அவரவர் துறைகளில் ஆர்வமுடன் பணியாற்றுவதில்லை என்ற முணுமுணுப்புகளும் தலைமைச் செயலகத்தில் அடிக்கடி கேட்க முடிகிறது.