இன்றைய நல்லரசு சிறப்பு செய்தி தொகுப்பில் கறை படியாத அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு, அவரது சொந்த மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பரிதாபங்களை தான் கவனத்தில் கொள்ள இருக்கிறோம்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மிகவும் சாந்தமானவர், அமைதியானவர், எளிமையாளவர் என்று பெயர் எடுத்திருப்பவர் வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ். முத்துசாமிதான்.
அமைச்சர் என்ற அதிகாரத்தை கூட முழுமையாக பயன்படுத்த தெரியாதவர்.. பயன்படுத்த விரும்பாதவர்.. இப்படியெல்லாம் நெகிழ்ச்சியோடு கூறிக் கொண்டிருப்பவர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான்.
மார்ச் மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்றால், அதற்கு முக்கிய காரணம் பண மழை பெய்தது மட்டுமல்ல, அமைச்சர் எஸ். முத்துசாமியின் அதட்டல் இல்லாத அரசியல் பாணியும், அமைதியான மக்கள் பணிதான் என்கிறார்கள் ஈரோடு மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள்.
இன்றைய காலத்தில் பார்வைக்கு எளிமையானவராக காட்சியளித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.முத்துசாமி, 40 ஆண்டுகளுக்கு முன்பும் இதே அமைதியுடனும், மிகுந்த நேசத்துடனும் தான் பொது சேவையையும், அரசியல் வாழ்க்கையையும் மேற்கொண்டவர் என்கிறார்கள் மறைந்த அதிமுக முதல்வர் எம்ஜிஆரின் பக்தர்கள்.
நாடு முழுவதும் பரந்து விரிந்து இருக்கும் சாலைகள், இந்தியாவின் உட்கட்டமைப்பையே மாற்றியிருப்பதை கண்டு வெளிநாட்டவர்கள் கூட பிரமித்து நிற்கிறார்கள். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு நகரை, மாவட்டத்தின் பல பகுதிகளை அகண்ட சாலையாக மாற்றி, அப்போதைய ஆட்சியாளர்களையும் தலைநகரில் கோலோச்சிய அரசு உயர் அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்ந்தியர் அமைச்சர் எஸ்.முத்துசாமி என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பொது வாழ்வில் மட்டுமல்ல, தனி மனித வாழ்க்கையிலும் கூட சுயநலமின்றி வாழ்த்தலையே தனது வரலாறாக பதிவு செய்திருக்கும் அமைச்சர் எஸ்.முத்துசாமி, திராவிட மாடல் ஆட்சியில் நிறைய சோதனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று கண்களை கசக்குகிறார்கள் அமைச்சரின் தீவிர விசுவாசிகள் என்பதுதான் சோகமான ஒன்றாகும். அதிமுகவில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு மாற்றாக எஸ்.முத்துசாமியைதான் முதல் அமைச்சர் பதவியில் அமர்த்தியிருப்பார் வி.கே.சசிகலா என்று இன்றைக்கும் கூறும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும்
ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பதவி வகித்து வரும் வி. சசி மோகனின் வயது, அமைச்சர் எஸ்.முத்துசாமியின் நீண்ட அரசியல் வாழ்க்கையை விட மிகவும் குறைவுதான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற பிறகுதான், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்படுகிறார் சுசி கணேசன் ஐபிஎஸ்.
முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பாக கொரானா இரண்டாவது அலை உச்சத்தில் தொடுகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குறுகிய கால பொது முடக்கம் அறிவிக்கப்படுகிறது.
2021 ம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில், அவரது தலைமையில் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்ட நேரத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக எஸ்.முத்துசாமி பதவியேற்றுக் கொண்டார்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சராக பதவியேற்ற எஸ்.முத்துசாமிக்கு, ஈரோடு மாவட்டத்திற்கு திரும்பிய நேரத்தில், அமைச்சர் பதவிக்கு உரிய கண்ணியத்தை குறைக்கும் வகையிலேயே ஜுன், ஜூலை மாதங்கள் அமைத்ததுதான் பரிதாபம் என்கிறார்கள் அமைச்சரின் நெருக்கிய விசுவாசிகள்.
திமுக அமைச்சராக எஸ்.முத்துசாமி தமது பணிகளை தொடங்கிய காலத்தில்தான், 2021 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஆக பதவியேற்றுக் கொண்டார் சசி மோகன் ஐபிஎஸ்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் எஸ்.முத்துசாமி, அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாடி கொண்டிருந்தனர் திமுக நிர்வாகிள். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த போதும், ஈரோட்டில் உள்ள அமைச்சர் இல்லத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான திமுகவினர் வந்து கொண்டே இருந்தனர். அதேநேரத்தில் மாவட்ட எல்லைகளில் அன்றாட தேவைகளுக்காக இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களை, ஹெல்மெட் அணிந்து வரவில்லை என்ற காரணத்திற்காக நூற்றுக்கணக்கானோரை பிடித்து அபாரதம் விதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் ஈரோடு மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள்.
உள்ளுரிலேயே காய்கறி, மளிகை சாமான்கள் வாங்க வருவோரிடம் கூட ஹெல்மெட் போட சொல்லி கட்டாயப்படுத்துவீர்களா… அபராதம் விதிப்பீர்களா என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதுபற்றிய தகவல் அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கிடைத்த போது, டி.எஸ்.பி. அந்தஸ்திலான அதிகாரியை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் அமைச்சரின் உதவியாளர்கள்.
எஸ்.பி. சசிமோகன் ஐபிஎஸ்ஸின் கறாரான உத்தரவு.. அவரின் கட்டளைக்குதான் கட்டுப்படுவோமே தவிர, அமைச்சரின் அறிவுரையை எல்லாம் கேட்க மாட்டோம் என போலீஸ் தரப்பில் எடுத்தெறிந்து பேசியதை ஆறாத காயத்துடன் இன்றைக்கு நினைவு கூறுகிறார் அமைச்சர் எஸ்.முத்துசாமியின் தீவிர ஆதரவாளர்கள்.
2021 ஆம் ஆண்டில் அமைச்சர் எஸ்.முத்துசாமியின் அறிவுரைக்கு ஏற்பட்ட அவமரியாதை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நீடித்துக் கொண்டிருப்பதுதான் மிகவும் துயரமான ஒன்று என்கிறார்கள் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் செல்போனிலோ, நேரடியாகவோ ஈரோடு எஸ்.பி. சசி மோகனிடம் ஒரு வார்த்தை கூட திமுக நிர்வாகிகளுக்காக அமைச்சர் எஸ்.முத்துசாமி பரிந்து பேசியது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள். கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன்.. இரண்டு அமைச்சர்களும் செல்போனில் அழைத்து எதை சொன்னாலும் மிகுந்த மரியாதை தலை வணங்கி நிறைவேற்றி வைத்தார்கள் முந்தைய அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்.பி. மற்றும் போலீஸ் அதிகாரிகள்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஈரோடு மாவட்ட அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.முத்துசாமிக்கு, போலீஸ் தரப்பில் இருந்து சிறிய அளவிலான ஒத்துழைப்பு கூட கிடைப்பதில்லை என்பதை வெளிப்படையாக சொன்னால் அசிங்கம் என்ற நினைப்பிலேயே கடந்து சென்று கொண்டிருக்கிறார் அமைச்சர் எஸ்.முத்துசாமி என்கிறார்கள் ஈரோடு மாவட்ட வர்த்தக பிரமுகர்கள்.
அரசியல் ரீதியிலாக அழுத்தங்களை அரசு அதிகாரிகளிடம் காட்டுகிற பழக்கம், எஸ்.முத்துசாமியின் ஆரம்ப காலத்தில் இருந்தே கிடையாது. மரியாதை கொடுப்பவர்களுக்கு மரியாதை கொடுப்பார் எஸ்.முத்துசாமி.
அதிகார போதையில் ஆட்டம் போடும் அரசு அதிகாரிகளை பழி வாங்க வேண்டும் என்ற சிந்தனையே எஸ்.முத்துசாமியிடம் பார்த்தது இல்லை என்று கூறும் அதிமுக நிர்வாகிகள், எவ்வளவு முக்கியமான நேரமாக இருந்தாலும் கூட அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளிடம் ஒருபோதும் பேசவே மாட்டடர் என்று மனசாட்சியின் குரலாக கூறுகிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் கூட போலீஸ் எஸ்.பி. சசி மோகன் ஐபிஎஸ் ஆர்வமுடன் கலந்து கொண்டதில்லை. ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாளில் , ஈரோடு மாவட்டத்தின் ஏதாவது ஒரு மூளையில் சோதனைக்கு சென்றுவிடுவார் எஸ்.பி. சசி மோகன்.
ஈரோடு போலீஸ் எஸ்.பி. சசி மோகனின் நடவடிக்கைகளால் ஆளும்கட்சியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் கூட, முதல்வரிடமோ, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திபாபு ஐபிஎஸ்ஸிடமோ, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸிடடோ, மூத்த அமைச்சர் துரைமுருகனிடமோ புகார் தெரிவிக்க மறுத்தவர்தான் அமைச்சர் எஸ்.முத்துசாமி என்கிறார்கள் அவருக்கு மிகமிக நெருக்கமான ஆதரவாளர்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை ஈரோடு மாவட்டத்தில் இருந்து போலீஸ் எஸ்.பி. சசி மோகனை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அவரது பணி மாறுதலை தடுத்துவிட்டவர் கோவை மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் ஐபிஎஸ்தான் என்று விரக்தியோடு கூறுகிறார்கள்.
ஐஜி சுதாகர் ஐபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் அமர்ந்து டின்னர் சாப்பிடும் அளவுக்கு நெருங்கிய நட்பு கொண்டவர் என்று கூறப்படுவதால், ஈரோடு எஸ்.பி. சசி மோகனுக்கு எதிரான புகார்களை முதல்வரிடம் சொல்வதற்கு கூட ஈரோடு மாவட்ட திமுக செயலாளர்கள் பயப்படுகிறார்கள் என்று கூறுவோரும் இருக்கிறார்கள்.
இடைத்தேர்தலின் போது சிறிய அளவிலான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதற்கு முக்கிய காரணமே, ஈரோடு மாவட்ட காவல்துறையின் மெத்தனப் போக்குதான் என்று கொதிக்கும் திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர் செந்தில் பாலாஜி கூட்டத்தில் நடந்த கல்வீச்சு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்த போதும் ஈரோடு மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக் நடவடிக்கை எடுக்காமல், வன்முறை நிகழ்வை கை கட்டி வேடிக்கை பார்த்ததால், ஆளும்கட்சியான திமுகவுக்குதான் அவப்பெயர் ஏற்பட்டது என்றும் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள்.
அமைச்சர் எஸ்.முத்துசாமியின் இயல்பே, யாரை பற்றியும் ஒரு போதும் யாரிடமும் புகார் வாசிக்க மாட்டார். தனக்கு விருப்பம் இல்லாத எந்தவொரு செயலையும் எவ்வளவு இழப்பை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கூட, சமரசம் செய்து கொள்ளும் மனப்பான்மை கொண்டவர் இல்லை எஸ்.முத்துசாமி என்பது ஈரோடுமக்களுக்கு நன்கு தெரியும். ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை 33 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையாக செய்து விட்டதால், யாரிடமும் மண்டியிட்டு நிற்கும் நிலையில் அமைச்சர் எஸ்.முத்துசாமி இல்லை என்பதுதான் உண்மை.
அவரது வயதுடைய ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், திமுக ஆட்சியில் மிகுந்த செல்வாக்குடன் நடமாடி கொண்டிருக்கும் போதும், துறவு போல ஒரு வாழ்க்கைக்கு தயாராகிவிட்ட அமைச்சர் எஸ்.முத்துசாமி, அதிகாரத்தை தேடி ஒருபோதும் அலையமாட்டார். இன்றைய தேதியில் அமைச்சர் பதவி என்பதே எஸ்.முத்துசாமிக்கு சிறிய அங்கிகாரம்தான். அவரின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில், ஈரோடு மாவட்ட மக்கள் அவருக்கு தருகிய மரியாதையும் முக்கியத்துவமும்தான், பொதுமக்களுக்கு தளர்ந்தது போகாமல் சேவையாற்றுவதற்கு உந்து சக்தியாக அமைந்திருக்கிறது.
அமைச்சர் எஸ்.முத்துசாமியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்வதையே விரும்புகிறார் என்றாலும் கூட, ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள்,பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆளும்கட்சியாக திமுக வந்த பிறகும் கூட போலீஸ் அதிகாரிகள் மரியாதை தர மறுப்பதையும், அரசு அலுவலங்களில் பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீதும் கூட ஆளும்கட்சி பிரமுகர்களின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்படுவதையும் கண்டு பொங்கி கொண்டிருக்கிறார்கள்.
100 சதவீதம் மக்கள் நலனையே முதன்மையாக கொண்டு பாடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.முத்துசாமியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாமல், அவர் வசம் இருந்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும பிரிவை பிடுங்கியது கொண்டது மிகுந்த மனவேதனையை ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் ஏற்படுத்திவிட்டது என்று வேதனையோடு கூறுகிறார்கள்.
ஆளும்கட்சியான திமுவுக்கு பொதுமக்களிடம் செல்வாக்கு அதிகரிக்க வேண்டும் என்றால், மாவட்டங்களில் ஆட்சியராகவும், போலீஸ் எஸ்.பி.ஆகவும் பணியாற்றுவோர், அந்தந்த மாவட்ட அமைச்சர்களுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். அதைவிடுத்து அதிகார திமிரிலும், அரசியல்வாதிகளை விட ஆட்சியாளர்கள்தான் உயர்த்தவர்கள் என்ற மமதையிலும் நடந்து கொண்டால், பாதிப்பு ஏற்படுவது ஆளும்கட்சி தலைமைக்குதான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த பொறுமையோடு கூறுகிறார்கள் ஈரோடுமாவட்ட திமுக நிர்வாகிகள்.
திமுகவோ, அதிமுகவோ, ஆளும்கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இருக்கும் காலங்களில் ஈரோடு மாவட்டத்திற்கு எப்போதுமே தனித்த சிறப்பு உண்டு. அதுஎன்னவென்றால், ஒட்டுமொத்த ஈரோடு மாவட்ட மக்களாலும் எல்லா காலங்களிலும் போற்றப்பட்டு கொண்டிருப்பவர் எஸ்.முத்துசாமிதான். அந்தளவுக்கு பொதுமக்களிடம் மிகுந்த மரியாதைக்குரியவராக வாழ்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.முத்துசாமியை, அலுவல் ரீதியாக கூட போலீஸ் எஸ்.பி. சசி மோகன், அரசு விருந்தினர் மாளிகையிலோ, அமைச்சர் இல்லத்திலோ மரியாதை நிமித்தமாக ஒருமுறை கூட சந்தித்தது இல்லை என்பது ஆளும்கட்சியின் நிர்வாகிகளுக்கு எந்தளவுக்கு மனவேதனையை தந்து கொண்டிருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் என ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஈரோடுமாவட்ட திமுக மூத்த முன்னோடிகள்.
அரசியல் வாழ்வில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அமைச்சர் எஸ்.முத்துசாமியின் ஆழ்மனதில் படிந்து இருக்கும் சோகத்தை நீக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முன் வர வேண்டும்.