காந்தியவாதியாக டெல்லிச் சென்ற ப.சிதம்பரம், அங்கும் வெற்றிக்கொடி நாட்டமுடியவில்லை. தமிழகத்திலும் காலூண்ற முடியவில்லை. காம்ரேட் சிந்தனைவாதியாக அடையாளம் காணப்பட்டாலும், திராவிடப் போர்வையை சுமந்துக் கொண்டு டெல்லிச் சென்ற வை.கோபால்சாமி, தனது பெயரை வைகோ என சுருக்கிக் கொண்டதற்கு இணங்க, அவருடைய அரசியல் பயணமும் இவ்வளவு வேகமாக சுருங்கி வருவது, தமிழக அரசியலில் துரதிர்ஷ்டவசமானது.
ப.சிதம்பரத்திற்கு முன்பாகவே (1984) தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராக 1978 ல், ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி சென்றவர் வைகோ. அந்தப் பதவி அவரின், எதோச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டக் குணத்திற்கு, அப்போதைய தி.மு.க. தலைவர் கலைஞர்.மு.கருணாநிதியால் கொடுக்கப்பட்ட பரிசு. 1976-77 ல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசர கால நிலையை எதிர்த்து ஏறக்குறைய ஓராண்டு சிறை வாழ்க்கையை அனுபவித்ததற்கும், அதே ஆண்டில் அபபோதைய பிரதமர் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி 40 நாட்கள் சிறைக்கு சென்ற திரும்பிய வைகோவை, வெற்றித்திருமகனாக டெல்லிக்கு அடையாளம் காட்ட, கலைஞர் மு.கருணாநிதியால் அனுப்பப்பட்ட போர்வாள்தான் வைகோ.
அன்று டெல்லி மண்ணை மிதித்த வைகோ, அடுத்தடுத்து இரண்டு முறையும் மாநிலங்களவை உறுப்பினராக 16 ஆண்டுகள், தமிழினத்திற்காக டெல்லியில் ஓங்கிக் குரல் கொடுத்தவர். அந்த காலகட்டத்தில் தமிழகமே அவரை கொண்டாடியது. அவரின் ஆவேசமான, அழுத்தமான பேச்சாற்றலைக் கண்டு, வட இந்திய தலைவர்கள் வியந்துப்போன நிகழ்வுகள் ஏராளமாக உண்டு. அன்று சுமந்த உண்மையான தி.மு.க. போராளி என்ற கவசத்தை இன்றைக்கும் பழுதுநேர்ந்துவிடாமல் சுமந்து கொண்டிருப்பவர். அவருக்கு முன்பாக பேரறிஞர் அண்ணா, இரா.செழியன் போன்ற தலைவர்களின் வழிநின்று, அவர்களைப் போல, தமிழக நலனுக்காகவும், மாநில சுயாட்சிக் கொள்கைக்காகவும் அறத்தோடு முழங்கினார், வைகோ. அதில் ஒருகாலும் அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை. அவரின் மனத்திடத்தைப் பார்த்து, மாநிலங்களவையே முக்கிய நிகழ்வுகளின் போது மிரண்டே போயிருக்கிறது.
இப்படி, டெல்லியில் கோலோச்ச பயன்பட்ட அவரின் அறிவைவிட, அவரின் துணிச்சல்தான் தமிழகத்தில் அவருக்கு மிகப்பெரிய புகழையும் பெயரையும் பெற்று தந்தது. அது, தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அழைப்பின் பேரில் ரகசியமாக, உயிரை துச்சமென மதித்து யாழ்ப்பாணம் சென்றது. 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்த நிகழ்வு, உலகம் முழுவதும் பரவியிருந்த தமிழர்களிடம், அதுவரை தி.மு.க.வில் ஒரு நிர்வாகி என்றிருந்த தோற்றத்தை கடந்து, தமிழினத்தின் தலைவராக ஒரு அடையாளத்தை தோற்றுவித்தது. தன்னுடைய உடன்பிறப்புக்கு அப்படியொரு அந்தஸ்து கிடைத்ததை, கலைஞர் மு.கருணாநிதியில் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் வேறு இருந்தது. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒதுங்கி நிற்கவே விரும்பினார், கலைஞர் மு. கருணாநிதி.
1991 ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிகழ்வு, தி.மு.க. மீண்டும் அரியணை ஏறும் வாய்ப்பை தகர்த்தது. அதற்கு வைகோவும் ஒரு காரணம் என்று உட்கட்சிக்குள் கொளுத்திப் போட்ட வெடியால், விடுதலைப் புலிகள் மூலம் தன்னை கொல்ல வைகோ சதி செய்கிறார் என கலைஞர் மு. கருணாநிதி புலம்ப, தனக்கெதிராக தி.மு.க.வில் பின்னப்படும் சதிவலைகளை உணர்ந்து, பொங்கினார். அவரது தலைமையை ஏற்க பெருங்கூட்டம் தயாரானது. எந்தவிதமான சமரசத்திற்கும் வைகோ இடம் கொடுக்கவில்லை. அதனால், அவரும், அவருக்கு ஆதரவாக நின்றவர்களும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
1994 ஆம் ஆண்டு மே 6-ம் நாள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அன்றைக்கு அவரது தலைமையை ஏற்று தி.மு.க.வில் அதிகாரமிக்க பதவியாக இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைத் துறந்து மதுராந்தகம் ஆறுமுகம் உள்பட 8 தலைவர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து முன்னணி தலைவர்கள் ஆயிரக்கணக்கானோர், வைகோ பின்னால் அணிவகுத்தனர். நீதிகேட்டு, நெடும் பயணம் மேற்கொண்டார் வைகோ. அன்றைக்கு அவரோடு கைக்கோர்த்த லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளத்தைப் பார்த்து, கலைஞர் மு.கருணாநிதியே அரண்டுப்போனார். அண்ணா அறிவாலயத்தையே கைப்பற்றிவிடுவார் என்று புலம்பவும் செய்தார்.
தி.மு.க.வுக்கு என்று சொல்வதைவிட, கலைஞர் மு.கருணாநிதிக்கு மாற்றாக முன்நிறுத்தப்பட்டார் வைகோ. எண்ணற்ற படைத்தளபதிகள் துணையோடு, தமிழக அரசியலையே புரட்டிப் போடும் மாபெரும் சக்தியாக, வைகோ விஸ்வரூபமாக அன்றைக்கு காட்சிப்படுத்தப்பட்டார். அது உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் கூட அப்போது தி.மு.க.வில் மட்டுமல்ல, மாற்று முகாமில் இருந்த முன்னணி தலைவர்கள் பலருக்கு எழுந்தது. அப்போதே ஊழல் குற்றச்சாட்டு மற்றும் குடும்ப அரசியலில் சிக்சி தவித்த கலைஞரிடம் இருந்து தி.மு.க.வை வைகோ மீட்பார் வைகோ என்ற மிகுந்த நம்பிக்கையில், புதிய இளைஞர்களும் அரசியலை நோக்கி வந்தனர்.
அவரின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாக அமைந்தது, 1996ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல். அந்த தேர்தலில் அமோகமாக வெற்றியை அறுவடை செய்திருக்க வேண்டிய வைகோவுக்கு துரதிர்ஷ்டவசமாக தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சி தோன்றி, அந்தக் கட்சி பலவீனமான தி.மு.க.வோடு கைக்கோர்த்து, தி.மு.க. மீண்டும் துளிர உயிர் தண்ணீர் ஊற்றியது. அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த அதிருப்தி அலை, வைகோவையும் முழுமையாக சுருட்டி எறிந்தது. அன்றைக்கு அவரின் பொதுவுடைமை சிந்தனைக்கு துணையாக நின்ற சி.பி.எம்., கூட சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே, விளாத்திக்குளம் தொகுதி மக்கள் வைகோவை புறக்கணித்தனர்.
அந்த தோல்விக்குப் பிறகு, அவருக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் தி.மு.க.நிர்வாகிகள், தாய்க் கழகத்தை நோக்கி படையெடுத்தார்கள். அதன் தாக்கம், வைகோவை, முதல் அரசியல் பிழையை செய்ய தூண்டியது. அதுதான், 1998 ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வோடு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வைகோ போட்டியிட்ட நிகழ்வு. அன்றைய சூழலில், ஊழலுக்கு எதிரானவர் என்ற இமேஜைவிட, தி.மு.க. வீழ்த்தப்படுவதுதான் தனது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்ற அரசியல் யுக்தியை கையில் எடுத்தார் வைகோ. ஜெயின் கமிஷன் அறிக்கை பற்ற வைத்த தீயில் அப்போதைய ஐ.கே. குஜ்ரால் அரசு கவிழ, வேறு வழியின்றி ஊழல், சாதி, மதம் ஆகியவற்றோடு எல்லாம் சமரசம் செய்து கொண்டார் வைகோ..
அன்றைய தேர்தலில் சிவகாசி எம்.பி. ஆகி, டெல்லிக்கு மீண்டும் சென்றார் வைகோ. முதல்முறையாக மக்களவையில் கால் பதித்த அவர், தனது வழக்கமான அனல் கக்கும் பேச்சால், வடமாநில தலைவர்களின் கவனத்தை பெற்றார். சிங்கத்திற்கு இணையாக அவரை ஒப்பிட்டு பேசும் அளவுக்கும் அவரது பேச்சும், நடையும், செயல்பாடுகளும் அமைந்திருந்தன.
ஆனால், 13 மாதங்களிலேயே அவரின் அரசியல் நிலைபாடு மாறியது. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, 1999 ஆம் ஆண்டில் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. வாஜ்பாய் மீதான அபரிதமான காதலால், தன் மீது கொலைப்பழி சுமத்திய தி.மு.க. அங்கம் வகித்த பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் வைகோவும் இணைந்தார். அவரின் அரசியல் நிலைபாடு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தி.மு.க.வில் இருந்து வெளியேறிய 5 ஆண்டுகளுக்குள்ளாகவே, கான்கிரீட் போல கொள்கை உறுதிப்பாட்டில் நிலையில்லாதவர் என்ற விமர்சனத்தை வைகோ எதிர்கொண்டார்.
சோரம் போவது என்பது துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்து தலை முழுகுவது போல சாதாரணமாகிவிட்டது.
அதன் பிறகு பெடாவில் கைது, மீண்டும் கலைஞரோடு தேர்தல் கூட்டணி, மீண்டும் விலகல், மீண்டும் அ.தி.மு.க.வோடு கூட்டணி என தேர்தல் அரசியலில் அவர் சந்தித்த அத்தனை சரிவுக்கும் அவரே காரணமாகிப் போனார்.
2004 நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், 2006, 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்கள் ஆகட்டும், அத்தனை தேர்தல்களின்போதும் அவர் எடுத்த அத்தனை முடிவுகளும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன.
தமிழை தாய்மொழியாக கொண்டவராக இல்லாத போதும், தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அவர் கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக, உலகத் தமிழர்களின் மனதில், குறிப்பாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றார்.
தனது தூய்மையான அரசியல் பணியால், நேர்மையான செயல்பாட்டால் உலகளவில் கிடைத்த நற்பெயரை, ஒற்றை ஆளாக களத்தில் குதித்த நடிகர் சீமானால், சின்னபின்னமாக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் புலிகள் ஆதரவாளர்கள் வாரி வழங்கும் நன்கொடைக்காகதான், புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் வைகோ உறுதியாக இருந்தார் என்று சீமான் முன் வைத்த கடுமையான விமர்சனம், வைகோவின் அரசியல் வாழ்விற்கு சமாதி கட்டுவதைப் போல அமைந்தது.
ஆனால், திராவிட கட்சிகளில் தூய்மையானவராக, நேர்மையானவராக, கடும் உழைப்பாளியாக, மிகுந்த ஜனநாயகவாதியாக ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் வைகோதான் என்று வெளிப்படையாக பாராட்டினார், மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ.
தன்நலம் கருதாத ஒரு தலைவனின் வாழ்க்கைக்கு ஒப்பானது, அவரின் சிறை வாழ்க்கை. ஆனால், வாழ்க்கையையே தியாகம் செய்தபோதும், விழலுக்கு இறைந்த நீராக போனது, பரிதாபமே..அவரது அரசியல் பாதையை பின்பற்ற இளம்தலைமுறை தயாராக இல்லை.
தலைவன் இல்லாத தமிழினத்திற்கு வைகோ சரியான தேர்வுதான். ஆனால், அவரின் அரசியல் நிலைபாட்டாலும், விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டாலும், தந்தை பெரியாரைப் போல, பேரறிஞர் அண்ணாவைப் போல, வைகோவை கொண்டாட முடியாமல் தவிக்கிறது திராவிட இயக்கம். அதே சமயம், தமிழ் தேசியவாதிகளும், அவரின் திராவிட நிலைப்பாட்டால், அவரை தமிழ் தேசியம் என்ற இல்லத்திற்குள் நுழைய விடாமல், முட்டுக்கட்டை போட்டு தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரட்டைக்குதிரை சவாரி பயணம் ஒருபோதும், நிர்ணயிக்கப்பட்ட எல்லையை சென்றடையாது என்பது போல, கயிற்றால் பிணைக்கப்பட்ட தவளைக்கும் எலிக்கும் இடையேயான போராட்டம் போல, வைகோவின் 50 ஆண்டு கால அரசியல் பயணம், எந்த திசையில் இலக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமலே கரைந்து போவது பரிதாபமாகவே பார்க்கப்படுகிறது.
ப.சிதம்பரத்தோடு ஒப்பிடும்போது வைகோ உயரமாக தெரிகிறார். ஆனால், எளிமையின் உதாரணமாக அவரை முன்நிறுத்துவதற்கு கூச்சமாகதான் இருக்கிறது. மொழி,இன பற்றை அடிப்படையாக கொள்ளாமல், பொதுவுடைமை தத்துவத்தில் ஒன்றிவிட்ட தோழர் நல்லக்கண்ணுவின் தூய, அற வாழ்வோடு அவரை ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை.
வைகோவைவிட வயதில் முதிர்த்த தோழர், ரயில் பயணங்களில் இரண்டாம் வகுப்பைத் தேர்வு செய்கிறார். ஆனால், தேர்தல் பரப்புரைக்காக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட சொகுசு வாகனத்தில் பயணிக்கிறார் வைகோ.
பொதுவுடைமை கொள்கையில் ஈடுபாடு இல்லாத, அதே சமயம் தமிழ் தேசியத்தில் ஆழ்ந்த பற்றுள்ள இளம் தலைமுறையை வழிநடத்த சரியான பாதையை வகுத்து, வைகோ புறப்பட்டிருந்தால், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் இனம், வைகோவை தூக்கி கொண்டாடியிருக்கும்.
அரசியலில், குறிப்பாக தேர்தல் காலங்களில் அவர் எடுத்த அத்தனை தவறான நிலைப்பாடுகளாலும், யானை தேய்ந்து கட்டெறும்பாக மாறியதைப் போல, இன்றைக்கு வைகோ பரிதாபத்திற்குரிய நபராக காட்சியளிக்கிறார். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவார், அடுத்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவார் வைகோ என்று மீம்ஸ்கள் கலாய்க்கின்றன.
கடந்த 20 ஆண்டு கால அரசியல் பயணத்தில், பல்லக்கில் பவணி வர வேண்டியவர், பல்லக்கு சுமப்பவராக மாறிப் போனார். பாவம் வைகோ…