Sat. Nov 23rd, 2024

நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி யிருந்தது. சோனியா காந்திக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்பதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கெடு தேதியான இன்று காலை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். முன்னதாக அவர்கள் வருகையையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டெல்லி போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இதேபோல், ராகுல்காந்தி உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸார், மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொய்கள் புனைந்து, காழ்ப்புணர்ச்சியால் பதியப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது அடிப்படை ஆதாரமற்றது என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார்..

ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.