Thu. Nov 28th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலினின் போர்ப்படையில் அனுமராக இருப்பவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்று கூறுவார்கள் சென்னை மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள். ஆட்சிப் பொறுப்பில் இல்லாத காலத்திலேயே கலைஞர் குடும்பத்திற்கு உண்மையான விசுவாசியாக வலம் வந்த மா.சுப்பிரமணியம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக முதல் அமைச்சர் பதவியேற்று தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அவரது புகழுக்கு துளியளவுக் கூட அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என 24 மணிநேரமும் விழிப்புடன் பணியாற்றி வருகிறார் என்கிறார்கள் சுகாதாரத்துறையின் உயரதிகாரிகள்.

முதல்வருக்கு மிகமிக நெருக்கமான திமுக முன்னணி தலைவர்களான மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறையில் சாதித்துக் கொள்ளும் நோக்கத்தோடு அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை அணுகி அன்புக் கட்டளையிட்டாலும் கூட, அதை நாசூக்காக புறக்கணித்துவிட்டு, முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு வார்த்தைச் சொல்ல சொல்லுங்கள். நான் உடனடியாக நிறைவேற்றி வைக்கிறேன் என்று கனிவாக பேசி கழன்று கொள்கிறார் அமைச்சர் மா.சு என்கிறார்கள் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான விசுவாசிகள்.

இப்படி, தனது துறையில் சிறிய அளவிலான முறைகேடு கூட நடந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கே, சுகாதாரத்துறையில் உள்ள நான்கு கருப்பு ஆடுகள் அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசு அதிகாரிகளான அந்த நான்கு பேருக்கும் எவ்வளவு துணிச்சல் இருக்கும்?…

அந்த கருப்பு ஆடுகள் யார்?

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர்கள் கூடுதல் இயக்குனர் சேகர் (UDC), இணை இயக்குனர் சங்கர்( Epidemic) இணை இயக்குனர் சுரேஷ் (PHC) இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் ஆகியோர்தான், இந்த செய்தியின் கதாநாயகர்கள்.

இந்த நால்வர் கூட்டணி அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லை என்று ஆவேசம் காட்டுகிறார்கள், அந்த துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் பலர்.

மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து கொள்முதலில் இந்த நான்கு பேரும் அடிக்கும் கொள்ளைக்கு முதல் அமைச்சரின் செயலாளர்களின் பெயரை பயன்படுத்தி வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல்.

அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து கொள்முதலில் கடந்த நான்கு மாதத்தில் மட்டும் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள் இவர்கள் என்ற புகார்கள், அதே துறையின் இயக்குனர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் கவனத்திற்குச் சென்றும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள் நேர்மையான மருத்துவத் துறை அதிகாரிகள்.

மாவட்டங்களில் பணியாற்றும் துணை இயக்குனர்களிடம் முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கிறது என்று கூறி, District Health society மூலம் லஞ்சம் கொடுக்க முன்வருகிற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே ஆர்டர் வழங்கி, அவர்கள் மூலம் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் புரிந்திருக்கிறார்கள் என்று அடித்து கூறும் நேர்மையான அதிகாரிகள், கடந்த 4 மாதங்களில், நான்கு கருப்பு ஆடுகளும் எந்தெந்த மாவட்ட துணை இயக்குனர்களிடம் பேசினார்கள், மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து சப்ளை செய்த மருந்து கம்பெனிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தினால், நான்கு கருப்பு ஆடுகளும் சுகாதாரத்துறையில் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

முதல் அமைச்சரின் செயலாளர்கள் மீதே களங்கம் கற்பிக்க துணிந்துவிட்ட இந்த நான்கு அதிகாரிகள் மீதும் சாட்டையை சுழற்றுவாரா, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.