அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய மனநிலைப் பற்றி நேற்றைய ஹாட் (சூடான) செய்தியில் விவரித்திருந்தோம்.அந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதை, சம்பந்தப்பட்டவர்களே நிரூபிக்கும் வகையில்தான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் நேற்றைய பேட்டி அமைந்திருக்கிறது.
“பரதனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது ஓ.பி.எஸ். மனக்சப்பில் இருக்கிறார். அவர், மீண்டும் சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம்” என்று டி.டி.வி.தினகரன், நேற்று (பிப். 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது உதிர்த்த முத்துகள்தான் இவை.
நேற்று காலை 9 மணியளவில் நல்லரசு தமிழ் செய்திகளில் இடம் பெற்ற செய்தியின் தலைப்பு, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வர் ஆக விட மாட்டோம்; சசிகலா-தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சபதம் என்பதே. நமது செய்தி வெளியான எட்டு மணிநேரத்திற்குள்ளாகவே, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது மாதிரி, சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவர் கூட்டணியின் மனநிலை பட்டுவர்த்தமான தெரிந்துவிட்டது. எந்தவிதமான கூச்சமும் இல்லாமல், டி.டி.வி.தினகரனே, அதை போட்டு உடைத்திருக்கிறார்.
அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று சொல்கிற கணக்கில் இதை எடுத்துக் கொண்டு கடந்து போய்விட வேண்டியதுதானா?என்று கேள்வி எழுப்புகிறார்கள் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் கோபமாக. அவர்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறதா? என்பதை அலசுவதுதான் இன்றைய சிறப்புச் செய்தியின் நோக்கம்..
இ.பி.எஸ்., ஆதரவாளர்களின் கோபமான வார்த்தைகளுக்கு காது கொடுப்போம்…
“எடப்பாடி பழனிசாமியை விட, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களாக பல்லாண்டுகளுக்கு முன்பு அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான். தன்னுடைய மறுஉருவம் போல சசிகலாவை வைத்திருந்தவர் அம்மா. ஆனால், அவருக்கு அரசியல் ரீதியாகவோ, ஆட்சி அதிகாரம் ரீதியாகவோ எந்த முக்கியத்துவத்தையும் அம்மா தந்துவிடவில்லை. இருப்பினும், ஜெயலலிதா வேறு, சசிகலா வேறு என்ற நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க. இருந்தததில்லை. கட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் ஜெயலலிதா அம்மையாருக்கு என்ன மரியாதையை கட்சியினர் வழங்கினார்களோ, அதே மரியாதையைதான், சின்னம்மா என்ற அடைமொழியோடு அழைத்து மரியாதை செலுத்தி வந்தார்கள். அந்த மரியாதையெல்லாம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற இந்த நான்காண்டுகளில் இழந்துவிட்டார், சசிகலா. இத்தனைக்கும் இன்றைக்கு உள்ள அ.தி.மு.க.வில் 80 சதவிகிதம் கட்சி நிர்வாகிகள், சசிகலாவினால் கட்சியில் முக்கியப் பதவிகள் பெற்றவர்கள், முதல்வர் இ.பி.எஸ். உள்பட. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
கடந்த 30 ஆண்டுகளில், ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறுஉருவமாக பார்க்கப்பட்ட சசிகலா மீது நம்பிக்கைக் கொண்டு அவருக்கு ஆதரவாக அவரது பின்னால் நிற்பதற்கு இந்த நிமிடத்தில் ஒரு மாவட்டச் செயலாளரோ, எம்.எல்.ஏ.வோ, ஒரு அமைச்சரோ இல்லை. அந்தளவுக்குதான் இன்றைய சூழலில், சசிகலாவின் செல்வாக்கு இருக்கிறது.
அவருக்கு இணையாக, ஏன் அவரை விட கூடுதலாக அம்மா காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றவர், டி.டி.வி.தினகரன். 1999 ஆம் ஆண்டிலேயே பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர். அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக 2004 ல் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பத்தாண்டுகள் தொடர்ச்சியிக எம்.பி., பதவி, அதைவிட மிகப்பெரிய அங்கீகாரமாக, அம்மா காலத்திலேயே அ.தி.மு.க.வின் பொருளாளர் பதவியை அவருக்கு கொடுத்து அழகுப் பார்த்தார். இப்படி அவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த டி.டி.வி.தினகரனைதான், 2011 ஆம் ஆண்டு வாக்கில், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைத்தார் அம்மா.
அம்மா மறைவு வரை தலைமறைவுப் போல வாழ்ந்த டி.டி.வி.தினகரன், 2016 டிசம்பரில் மீண்டும் உச்சத்திற்கு வருகிறார். அன்றைய சூழலில், அவரை ஒட்டுமொத்த அ.தி.மு..க.வும் ஏற்றுக் கொண்டது. அதற்கு காரணம், அ.தி.மு.க.வை, சசிகலாவோடு இணைந்து வழிநடத்துவார். வலிமையாக்குவார் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய விவகாரம், அதற்குப் பிறகு முதலமைச்சரான இ.பி.எஸ்.ஸை, போயஸ் கார்டன் வாட்ச்மேன் மாதிரி நடத்திய விவகாரத்திலும் டி.டி.வி.தினகரனின் உண்மையான குணத்தைப் பார்த்து, அவருக்கு பின்னால் நின்ற ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், ஆட்சியாளர்களும், அவரை தூக்கி எறியும் அளவுக்கு துணிந்தார்கள்.
சசிகலா குடும்ப விவகாரத்தில் பிளவுப்பட்ட அ.தி.மு.க., ஜெயலலிதா மரணத்திற்கு அந்தக் குடும்பம்தான் காரணம் என்ற ஒற்றைப் புள்ளியில் மீண்டும் இணைந்தது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸின் கொடி உயர, உயர, எக்ஸ்லேட்டர் மாதிரி டி.டி.வி. தினகரனின் செல்வாக்கு விரைவாக கீழிறங்கியது. அவரை நம்பிச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் பணால் ஆனாது. இப்போது அவரது பின்னால் நிற்கும் கூட்டம் கூட, மீண்டும் அ.தி.மு.க. வில் தங்களுக்கு முக்கியமான பதவிகள் கிடைக்கலாம் என்ற நப்பாசையில்தான் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பெரும்பான்மையானோர், அவர் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.
இவர்களின் கூட்டணியில் மூன்றாவது நபர், தற்போதைய அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம். 2001ல் சட்டமன்ற உறுப்பினராகி சென்னைக்கு வந்தவர், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரின் பரிபூரண ஆசிர்வாதம் மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக நங்கூரம் போட்டு அமர்கிறார். அம்மா உயிரோடு இருக்கும் போது இரண்டு முறை முதல்வர் பதவி, அவரது மறைவுக்குப் பிறகு 3வது முறையாகவும் முதல்வர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் பொருளாளர் பதவி, இப்போது கட்சியின் தலைவரைப் போல ஒருங்கிணைப்பாளர் பதவி.
இவ்வளவு உயரத்திற்கு வந்தவரின் குணம், பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டுமா, வேண்டாமா?.. ஆனால், அரசியல் வாழ்வில் எட்ட வேண்டிய உச்சத்தையெல்லாம் எட்டிய பிறகும், சுயநலமே அவரிடம் பிரதானமாக இருப்பதால்தான், அவர் பின்னால் நின்ற, அவரை அம்மாவைப் போல பொதுச் செயலாளராக பார்க்க ஆசைப்பட்ட கூட்டம் அத்தனையும் விலகி நிற்கிறது. இரண்டே இரண்டு பேர், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் மட்டுமே அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர் மீது அதீத விசுவாசம் காட்டிய அத்தனை அ.தி.மு.க. நிர்வாகிகளும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
பிரதமர் மோடியிடம் ஓ.பன்னீர்செல்வத்தை அறிமுகப்படுத்தி, டெல்லியில் அவருக்கு செல்வாக்கு கிடைக்க உதவியவர் டாக்டர் மைத்ரேயன். அவர், இன்றைக்கு வெளியே சொல்ல முடியாத வருத்தத்தில் துவண்டு வருகிறார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக வாரணாசியில் அவரது குடும்பவே பா.ஜ.க மேலிட தலைவர்கள் காலில் விழுவதற்கு, விமான டிக்கெட், தங்கும் இடம், வாகனப் போக்குவரத்து என அனைத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்தவர் முன்னாள் மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன். அவர்கூட, ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளராக இன்று இல்லை. இப்படி, மிகப்பெரிய பதவிகள் தன்னை தேடி வந்தபோதும்,, அதை அவரும், அவரது குடும்பமும் மட்டுமே அனுபவித்தது. அவரை நம்பி போன ஒரு விசுவாசிகளுக்கு கூட அரசியல் வாழ்வில் ஏற்றம் இல்லை. அதைவிட கொடுமையாக ஏற்கெனவே அ.தி.மு.க.வில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கும் பறிபோனது.
இப்படி, மக்களால், விவவாசிகளால், அ.தி.மு.க.வினரால் புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தமூன்று பேரும் யாரை பொது எதிரியாக பார்க்கிறார்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையா? இல்லவே இல்லை”என்று கூறிய இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமைதியானர்.
தொடர்ந்து அதே ஆவேசத்துடன் பேசினார்.
“தொலைக்காட்சி ஊடகங்களில் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா ஆதரவு நிலையோடு பேசுவதாக விமர்ச்சிக்கப்படும் மூத்த ஊடகவியாளர் எஸ்.பி. லட்சுமணனே, ஒரு பேட்டியின் போது சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகும் தருணத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு வரியை நினைவுக் கூர்ந்தார். எம்.ஜி.ஆரால், ஜெயலலிதாவால் தீயசக்தி என வர்ணிக்கப்பட்ட தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் அந்த வரிகள். ஆனால், அந்த சிந்தனைக்கு மாறாக சசிகலா, டி.டி.வி.தினகரன் இருப்பதைக் கூட ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால், இன்றைக்கு ஆளும்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வில் அவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்ற ஆத்திரமும், ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கும். அது, பொதுப்பார்வையில் நியாயம் கூட.
ஆனால், ஜெயலலிதா இருந்த போதும், அவரது மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்குமிக்கவராகவும், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும் கூறப்படும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை முதுகில் குத்தலாமா? சசிகலாவுக்கு கொலைகாரி என்ற பட்டம் சுமத்தியது ஓ.பி.எஸ்.ஸா, இ.பி.எஸ்.ஸா..? ஓ.பி.எஸ். உடும்புபிடியாக பிடித்த ஒரு விஷயத்திற்காகதானே இன்று எடப்பாடி, எல்லா அவப்பெயரும் சுமக்கிறார். சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க.இருக்கக் கூடாது என்று முதலில் சொன்னது இ.பி.எஸ்.ஸா, ஓ.பி.எஸ்.ஸா. ?சசிகலாவாலும், டி.டி.வி.தினகரனாலும் பலமுறை அவமானப்படுத்தப்பட்ட பிறகும், அவரது காலில் விழுந்து சரணாகதி அடைய துடிக்கிறாரே ஓ.பி.எஸ்., அதற்கு அடிப்படை காரணம், முதல்வர் பதவி மீதான வெறிதானே. ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்டவர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் எங்களின் அனுபவ உண்மை.
2017 ல் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டபோது, அவரும் அவரது குடும்பத்தினரும் முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் கே.ஏ.செங்கோட்டையன். அன்று நிலவிய சூழலில், முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார் அவர். அவரைப் போல முன்னணி நிர்வாகிகளின் பெயர்களும்கூட பரிசீலிக்கப்பட்டன. ஆனால், ஒருவரைக் கூட சசிகலா தேர்வு செய்ய முன்வரவில்லை. இன்றைக்கு குதிக்கிறாரே டி.டி.வி.தினகரன், அன்றைக்கே அவரை முதல்வராக முன்னிறுத்தி இருக்க வேண்டியதுதானே.உண்மை என்னவென்றால், அன்றைக்கு அவர் கூட முதல்வர் பதவியை ஏற்க தயக்கம் காட்டினார் என்பதுதான். இப்படிபட்ட இக்கட்டான நேரத்தில்தான் தானாக முன்வந்து முதல் அமைச்சர் பதவியை ஏற்றார் எடப்பாடி பழனிசாமி.
அன்றைக்கு சசிகலாவுக்கு அவரின் விசுவாசம் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. இன்றைக்கும் அதே விசுவாசத்தோடுதான் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் எங்களின் அனுபவம். சசிகலா என்ற தனிநபருக்குப் பதிலாக, அம்மா என்ற ஆகச் சிறந்த ஆளுமைக்கும், அவரால் கட்டி காப்பாற்றிய அ.தி.மு.க.வுக்கும் விசுவாசமாக இருக்கிறார் என்பதுதான் நூறு சதகிவிதம் உண்மை.
கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் இ.பி.எஸ். கொண்டாடப்படுகிறார் என, ஊடகங்கள் ஒரு தவறான பிம்பத்தை கட்டமைக்கின்றன. சசிகலா சிறையில் இருந்து, சாரி, மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு பெங்களுரில் ஓய்வு எடுத்த காலத்தில், தென் மாவட்டங்களில் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும், கிராமப் பெண்களிடமும் எடுக்கப்பட்ட வீடியோவை, மூத்த ஊடக நண்பர் ஒருவர் மூலம் எனக்கு கிடைத்தது. இ.பி.எஸ். புராணத்தை நான் பாடுவதைவிட, அந்த வீடியோவில் பதிவான குரல்களை நீங்களே கேட்டு புரிந்துகொள்ளுங்கள். எடப்பாடியார், கடந்த நான்கு ஆண்டுகளில் தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் அ.தி.மு.க. எனும் ஆலமரம் மேலும் மேலும் ஆழமாக வேர் ஊண்றவே பாடுபட்டிருக்கிறார், பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.
முதல்வரின் கடும் உழைப்பைப் பற்றி நிறைய சொல்லலாம். அதை கேட்க உங்களுக்கு நேரம் இருக்காது. இப்போது தேர்தல் நேரம் ஒன்றை மட்டுமே சொல்லி எனது ஆதங்கத்தை முடிக்கிறேன்.
நாள்தோறும் காலையில் முழித்த நேரம் முதல் நள்ளிரவில் தூக்கச் செல்லும் நேரம் வரையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கட்சிக்காரர்கள் சந்திக்க முடியும். பிரசாரத்திற்கு செல்லும் போது பேசுகிற இடங்கள் பத்தோ, இருபதோ என குறிக்கப்பட்டிருந்தாலும், அங்கெல்லாம் பேசி முடித்துவிட்டு நள்ளிரவில் திரும்பும்போது கூட, சாலைகளில் 50 பேர் நின்றிருந்தால், அங்கு காரை நிறுத்தச் சொல்லி, அவர்களிடம் பேசிவிட்டு செல்வதுதான் முதல்வரின் குணம். இந்தக் குணமும், உழைப்பும் மற்ற மூன்று பேர்களிடம் இருக்கிறதா என மனசாட்சியுள்ள அ.தி.மு.க.வினரும், சசிகலா உள்ளிட்ட கும்பலை ஆதரிக்கும் மூத்த ஊடகவியாளர்களும் சொல்லட்டும்.
மதிய நேரங்களில், 2 மணி முதல் மாலை 6 மணிநேரம் வரை தூங்கிவிடுவார்கள் ஓ.பன்னீர்செல்வம். லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்தால் கூட அந்த நேரத்தில் பிரசாரம் செய்ய வரமாட்டார் அவர். அதே, 20 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தால்கூட ஒருநாளைக்கு பத்து இடங்களில் கூட பிரசாரம் செய்ய மாட்டார், ஓ.பி.எஸ். இதைவிட கொடுமை, அம்மா இருந்த காலத்தில் அவருக்கு இணையாக இருந்த மூத்த நிர்வாகிகள்கூட, அம்மாவின் மறைவுக்குப் பிறகு நினைத்த நேரத்தில், ஓ.பி.எஸ்.ஸை அவரது இல்லத்தில் 30 மணிநேரத்திற்கு குறைவாக காத்திருக்காமல் சந்தித்த தருணங்கள் ஒன்றைக் கூட கூற முடியாது. இப்படி நிறைய குறைகளை ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக பட்டியலிட முடியும். அதெல்லாம் இ.பி.எஸ்.ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் நான் சொல்வதாக இருக்கும்.
கடைசியாக உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்தான். ஊடகவியலாளர் என்ற புத்தியை, எனது கருத்தில் எங்கும் நுழைத்துவிடக் கூடாது. உங்கள் மீதான நம்பிக்கையில்தான் அந்த வீடியோவை தருகிறேன். உண்மையை ஊருக்குச் சொல்வதற்கு முன்பு, எந்த பிரதிபலனும் பாராமல், அ.தி.மு.க. என்ற கட்சியைக் காப்பாற்ற உயிரைக் கொடுக்கக் கூட சித்தமாக இருக்கிற தொண்டர்களுக்கு மேல்மட்டத்தில் என்ன நிலவுகிறது என்பது புரியட்டும். அதற்குதான், நல்லரசு தமிழ் செய்திகளை நாடி வந்தேன் என்று கூறினார் இ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
அவரது நம்பிக்கையை குலைக்க விரும்பவில்லை. மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.