அரசியல் காரணங்களுக்காகவும் சசிகலாவை சிக்கவைப்பதற்காக மட்டுமே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்க படுகிறது. உடல்நலக் குறைவு காரணமாகத்தான் ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தார் என்பது தான் உண்மை. ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கியது தனிப்பட்ட முறையில் தனக்கு வருத்தம்தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை ராயபேட்டையில் உள்ள அமமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில்
கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் டிடிவி தினகரன். அப்போது அவர் கூறியதாவது:
மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 14 ம் தேதி கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
18 ம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். அந்த சுற்றுப்பயணத்தின் போது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்க உள்ளோம்.
ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் அதில் என்னால் கருத்து கூற இயலாது.
தனிப்பட்ட விதத்தில் ஓ.ராஜா என்னுடைய நண்பர். ஓபிஎஸ் நிதானமானவர். எல்லா முடிவுகளையும் தீர யோசித்து தான் எடுப்பார்.
ஜெ.ஜெயலிலதா உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்தார் என்பது தான் உண்மை.
மத்திய அரசு நடவடிக்கை சரியே
உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு பணியில் மத்திய அரசின் நடவடிக்கை சரியாகவே உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு எந்த வித பாகுபாடும் கட்டவில்லை.
சில கட்சிகள் தான் வாக்குகளுக்காக சாதி பாகுபாட்டை உருவாக்கி தேர்தலை சந்தித்திருக்கிறது. சமூக நீதி பேசும் கட்சிகள் தான் சாதி பாகுபாட்டை உருவாக்குகின்றன.
டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விலை உயர்வு குறித்த கேள்விக்கு,திமுக ஆட்சிக்கு வருவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
முதல்வர் ஆவதற்கு முன்பாக இருந்த ஸ்டாலின் வேறு; தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வேறு. ஆட்சி நடத்துவதில் திமுகவின் அறிவுரை அடுத்தவர்களுக்கு மட்டுமே தனக்கு இல்லை என விமர்சித்தவர் மு.க.ஸ்டாலின்.
ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளிலும் ஸ்டாலின் “அந்தர் பல்டி ஆகாச பல்டி” அடிக்கிறார். 10 வருடங்களாக திமுக காய்ந்த மாடு போல் இருந்தது.
10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் எல்லாம் இப்போது திமுக கொடியை பிடித்து வெள்ளை சட்டை அணிந்து சுற்றி வருகிறார்கள்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.