Sun. Nov 24th, 2024

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விலை போன அதிமுக கவுன்சிலர்களை அடையாளம் கண்டறிந்து இரட்டை தலைவர்கள், அதிரடியாக அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே உடனுக்குடன் நீக்கினர்.

ஓபிஎஸ் செல்வாக்கை செல்லா காசாக்கிய இபிஎஸ்….

முதல் அம்பு, தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த அதிமுகவினர்தான் மீதுதான் பாய்ந்தது. அந்த நகராட்சியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள், திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்ற தகவல் வெளியானவுடன், கட்சி மாறி வாக்களித்தவர்களிம் ஒரு விளக்கம் கூட கேட்காமல் அவசர அவசரமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கினார் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரத்தை பொறுமையாக கையாளலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோதும் கூட, அதனை பொருட்படுத்தாமல், ஒற்றை காலில் நின்று சின்னமனூர் அதிமுக கவுன்சிலர்களை நீக்கும் அறிவிப்பில் அவசர அவசரமாக கையெழுத்திட்டார் எடப்பாடி பழனிசாமி.

2 வது அம்பு சின்னமனூரைப் போலவே, ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, பழனிசெட்டிப்பட்டி,தாமரைக்குளம்,கெங்குவார்பட்டி,தேவதானப்பட்டி, தென்கரை, மார்க்கையன்பேட்டை, ஆண்டிப்பட்டி, குச்சனூர், உத்தமபாளையம், கம்பம் என தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய 15 ஊர்களுக்கு மேலான ஊர்களைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்களை கூண்டோடு என்று சொல்லும் வகையில், மொத்தமாக 33 பேர் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டனர்.

3 வது அம்பு வி.கே.சசிகலாவை சந்தித்தார் என்ற காரணத்திற்காக ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இப்படி தேனி மாவட்ட அதிமுகவினர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சூட்டோடு சூடாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால், இபிஎஸ்ஸுக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் நிலைமையோ வேறாக இருக்கிறது என்கிறார்கள் அவரது எதிர்தரப்பினர்.

இபிஎஸ் செல்வாக்கை குறைக்க தயங்கும் ஓபிஎஸ்…

சின்னமனூர் நகராட்சித் தேர்தல் உள்பட தேனி மாவட்டத்தின் பல ஊர்களில் அதிமுக கவுன்சிலர்கள், கட்சி மாறி திமுகவுக்கு வாக்களித்தைப் போலவே ஒரு நிகழ்வு, கடலூர் மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

பண்ருட்டியில் அதிமுக துரோகம்…

பண்ருட்டி நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேட்பாளர் சிவாவை எதிர்த்து போட்டியிட்ட பண்ருட்டி நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் வெற்றி பெறுவதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் வேண்டுகோளை ஏற்று அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும் கட்சி மாறி வாக்களித்துவிட்டனர் என திமுக நிர்வாகிகளே வெளிப்படையாக பேசிக் கொள்கிறார்கள்.

அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் இவர்கள்தான்…

1) சுவாதி 6-வது வார்டு
2)பிரியா 10-வது வார்டு
3)சரண்யா13-வது வார்டு
4)வெங்கிடேசன்20-வது வார்டு
5)சரளாமோகன் 22-வது வார்டு
6)மோகன்24-வது வார்டு
7)முருகன் 30-வது வார்டு

ஒழுங்கு நடவடிக்கை பாயாதது ஏன்?

கட்சி மாறி அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும் திமுகவுக்கு வாக்களித்து 5 நாட்கள் ஆன நிலையிலும், அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரையும் இன்று வரை அதிமுகவின் தலைமையை ஏற்றுள்ள இரட்டை தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவது ஏன் என்று பன்ருட்டி அதிமுக நிர்வாகிகள் மட்டுமல்ல, தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் நெற்றிக்கண்களை காட்டுகிறார்கள்.

கட்சி மாறி வாக்களித்த தேனி மாவட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு சுண்ணாம்பு? கடலூர் மாவட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு வெண்ணையா? என்று தேனி மாவட்ட நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரியாக மாறி, ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை குறைத்து, தானே ஒற்றை தலைவராக மாறி அதிமுகவை கபளீகரம் செய்ய பார்க்கிறார். அதை மௌனமாகவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தனது அடிதளத்தையே அசைத்துப் பார்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பதிலடி கொடுக்கும் சக்தி கூட இல்லாமல், ஓபிஎஸ் இப்படி குறுகிப் போய் இருப்பது ஏன் ?என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தேனி மாவட்ட அதிமுக விசுவாசிகள்.

பிளவுபட்ட பன்ருட்டி திமுக

பன்ருட்டி நகராட்சித் தலைரவாக திமுக தலைமையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவர் சிவா என்ற பிரமுகர்.

இவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக களம் கண்டவர், பன்ருட்டி திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன்.

பண்ருட்டி நகராட்சி மன்ற கவுன்சிலர் தேர்தலில் வெற்றிபெற்ற 33 கவுன்சிலர்களில் திமுக கூட்டணி 24 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

திமுகவிற்குள்ளேயே போட்டி ஏற்பட்ட போது, அதிமுக சார்பில் நகராட்சி தலைவர் தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருக்கலாம் அல்லது தேர்தலையே நிறுத்தியிருக்கலாம் என்று சிவாவின் ஆதரவு திமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

போட்டி வேட்பாளராக களம் இறங்கி வாகை சூடிய ராஜேந்திரன்

அதிமுக காரணமாக, திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரான சிவா தோல்வியடைய, வாகை சூடினார் திமுக போட்டி வேட்பாளர் ராஜேந்திரன்.

நேரடியாக களம் இறங்கும் முடிவை எடுத்து அதிமுகவின் மானத்தை காப்பற்றுவதற்கு பதிலாக, திமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் யார் தலைவராக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தங்களுக்குள்ளாகவே கூடி பேசி, இரு அணிகளாக பிரிந்து திமுக வேட்பாளர்கள் இருவருக்குமே பாரபட்சம் இல்லாமல் வாக்களித்துள்ளனர்.

அதிமுக கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவின் காரணமாக, திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரான சிவா தோல்வியடைய வைத்து, நகராட்சித் தலைவர் தேர்தலில் வாகை சூடினார் திமுக போட்டி வேட்பாளர் ராஜேந்திரன்.

திமுக தலைமையின் உத்தரவை அப்படியே ஏற்று சிவாவுக்கு வாக்களித்த விசுவாசமிக்க திமுக கவுன்சிலர்களை, தற்போது எதிரிகளாக பார்க்கத் துவங்கியிருக்கிறது திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரனின் ஆதரவு அணி.

பன்ருட்டியை உள்ளடக்கிய கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வி.கணேசனின் ஆதரவு பெற்றவர்தான் சிவா என்கிறார்கள். அதனை நிரூபிக்கும் வகையில், அமைச்சரின் ஆளுமைக்குள்ள மாவட்டத்தில் திமுக சார்பில் வெற்றி பெற்ற விருத்தாசலம் நகராட்சி மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், அமைச்சர் சி.வி.கணேசனை சந்தித்து ஆசி பெற்றதை போன்ற புகைப்படத்தைதான் பதிவேற்றியிருக்கிறார். பன்ருட்டி நகராட்சி திமுக தலைவர் ஆசி பெற்றதைப் போன்ற புகைப்படம் அமைச்சரின் டிவிட்டர் பக்கத்தில் பார்க்க முடியவில்லை.

அமைச்சர் சி.வி.கணேசனிடம் ஆசி பெற்ற விருத்தாசலம் நகராட்சி திமுக தலைவர் சங்கவி முருகதாஸ் ….

கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலைப்போலவே, பண்ருட்டி நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலிலும் குளறுபடிகள் நடந்துவிட்டதால், இரண்டு ஊர்களிலும் ஆளும்கட்சியான திமுகவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவு சரியாக இன்னும் பல நாட்களை கடக்க வேண்டும் என்கிறார்கள் கடலூர் மாவட்ட திமுகவின் மூத்த நீர்வாகிகள்.

கடலூர் மாநகராட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற மேயரின் கணவரும், கடலூர் நகர திமுக செயலாளருமான ராஜா, திமுக தலைமைக்கு நன்றி தெரிவித்து இன்றைய தினம் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், வழக்கத்திற்கு மாறாக, கவனிக்கதக்க வகையில் இடம் பிடித்துள்ள திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையின் பெயரைப் பார்த்து திமுகவினர் விசில் அடிக்கிறார்கள்.