Sun. Nov 24th, 2024

தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…..

கடலூர் திமுக எம்எல்ஏ அய்யப்பன், திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமைக் கழகம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்து பெரும்பான்மையான கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கொந்தளித்து வருகின்றனர்.  

அய்யப்பன் எம்எல்ஏ….

அய்யப்பன் எம்எல்ஏ மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் மனம் உடைந்து போய் உள்ள கடலூர் மாநகர திமுக நிர்வாகி ஒருவர் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு நல்லரசுவிடம் மனம் திறந்து பேசினார்.

கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரனை அழைத்து, உன் மனைவி கீதா தான் மேயர் வேட்பாளர். அதனால், ஒட்டுமொத்த திமுக வேட்பாளர்களையும் வெற்றி பெற வைப்பது உனது பொறுப்பு என்றும் தேர்தல் செலவுகளையும் கவனித்துக் கொள் என்று கூறிவிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு சென்று முகாமிட்டுவிட்டார்.

திமுக மாவட்ட பொருளாளர் விஎஸ்எல் குணசேகரன், அவரது மனைவி கீதா…

ஆனால், திமுக தலைமைக் கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் கடலூர் நகர திமுக செயலாளருமான பழக்கடை ராஜா தனது மனைவி சுந்தரியை, வேட்புமனு தாக்கல் செய்ததை பார்த்து கொதித்துப் போனார் குணசேகரன்.

இருப்பினும்,  அமைச்சரே நேரில் வாக்கு கொடுத்துவிட்டாரே என்ற தைரியத்தில், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, அதில் பாதி வட்டிக்கு கடன் வாங்கிதான் தனது மனைவி கீதாவின் வெற்றிக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கும் செலவழித்தார், குணசேகரன்.

நீண்ட வருடங்களாக திமுக மாவட்ட பொருளாளராக பதவி வகித்து வரும் குணசேகரன், அமைச்சரின் ஆதரவாளராக இருந்த போதும், அதர்மத்திற்கு துணை போகாதவர் என்பதால் அவருக்கு துணையாக களததில் தீவிரமாக பணியாற்றினார் கடலூர் தொகுதி திமுக எம்எல்ஏ அய்யப்பன்.

அய்யப்பன் எம்எல்ஏ…

அதுமட்டுமின்றி, கடலூர் தொகுதிக்குள்தான் மாநகராட்சியின் நிர்வாகமும் இருப்பதால், மேயர் பதவி, அடாவடி அரசியல்வாதியின் கைக்கு போகாமல், நற்குணம் கொண்ட குணசேகரனின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் முழுமையாக சென்றடையும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாகவும், சொந்த காசையும் செலவழித்து திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் ஐயப்பன் எம்எல்ஏ.

இப்படிபட்ட நேரத்தில் குணசேகரனின் பொருளாதார பின்னணி என்ன? அவரது சக்திக்கு மீறி பணம் செலவழிக்கிறார் என்பதையெல்லாம் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கவனித்து வரும் தனது மகன் கதிரவன் மூலம் அறிந்து கொண்ட போதும்கூட, கடலூர் மாநகராட்சி தேர்தலுக்கு அமைச்சர் என்ற முறையில் பணமே செலவழிக்கவில்லை எம்ஆர்கே பன்னீர்செல்வம்.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்….

தேர்தல் முடிவுகள் வெளியான போது, மொத்தமுள்ள 45 வார்டுகளில் திமுக கூட்டணி 36 வார்டுகளில் வாகை சூடியது. தனது மனைவி கீதா, கடலூர் மேயராக பதவியேற்றுவிடுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருந்த குணசேகரனுக்கு, அமைச்சர் தரப்பு ஆதரவாளர்களிடம் இருந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று கிடைந்தது. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும், அவரது மகன் கதிரவனும் கூடிப்பேசி, திமுக நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை, மேயர் வேட்பாளராக அறிவிக்க திமுக தலைமைக்கு பரிந்துரை செய்திருக்கிறார் என்ற தகவல்தான் அது. அதை கேட்டு மனம் உடைந்துப் போனார் குணசேகரன். அவரை விட ஆத்திரத்தின் உச்சிக்கே போனவர் அயப்பன் எம்எல்ஏ தான்.

அதற்கு காரணம், கடலூர் மேயர் வேட்பாளராக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பரிந்துரைத்த சுந்தரியின் கணவர் ராஜா, திமுக நகரச் செயலாளராக இருந்து கொண்டே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மட்டுமல்ல, அதற்கு முன்பாகவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மாநகர மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்து வைத்திருப்பவர் என்பதுதான்.

அமைச்சருக்கும், அவரது மகன் கதிரவனுக்கும் கார் கதவை திறந்து விடுவதையும், சுயமரியாதையை இழந்து மற்ற சேவைகளையும் செய்து வருபவர் என்ற ஒரு தகுதிக்காக ராஜாவின் மனைவிக்கு மேயர் பதவியை வெகுமதியாக தூக்கி கொடுக்க துணிந்துவிட்டார் அமைச்சர் என்று தெரிய வந்தவுடன், உட்கட்சி ஜனநாயகத்தை காக்கவும், உண்மையான விசுவாசிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துடன் நேருக்கு நேர் மோத தயாரானார் அயப்பன் எம்எல்ஏ.

அமைச்சரின் புதல்வர் எம்ஆர்கேபி கதிரவன்….

இந்த நேரத்தில்தான் சாதி அரசியலை கையில் எடுத்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். மேயர் பதவியை எதிர்பார்த்த குணசேகரனும் வன்னியர், ராஜாவும் வன்னியர் என்றாலும், முதலியாரான அய்யப்பனுக்கு ஆதரவு தருவீர்களா? என்று வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்களை அமைச்சரும், அவரது மகன் கதிரவனும் நேரடியாகவே மிரட்டுகிறார்கள்  என்பதை கேள்விப்பட்டுதான் அய்யப்பனும், குணசேகரனும் கைகோர்த்து அமைச்சருக்கு சரியான பாடத்தை கற்று தர முடிவு எடுத்தனர்.

கடலூரில் திமுக சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் குணசேகரனுக்கு ஆதரவு கொடுத்தனர். அமைச்சரின் மிரட்டலையும் மீறி அவரை ஆதரிக்க முக்கிய காரணம், தேர்தல் செலவுக்கு குணசேகரன் பணம் கொடுத்தார் என்பது மட்டுமின்றி, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமே குணசேகரின் மனைவி கீதா தான் மேயர் வேட்பாளர் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு, இப்போது பின்வாங்கி விட்டாரே என்ற கோபமும் முக்கிய காரணமாக அமைந்தது.

தேர்தல் முடிவு வெளியாகி தலைமைக் கழகம் மேயர் வேட்பாளரை அறிவிக்கும் வரை திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கடலூர் நகருக்குள்ளாகதான் தங்கியிருந்தனர். மேயர் வேட்பாளர் பட்டியல் திமுக தலைமையால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப்பட்ட மார்ச் 3 ஆம் தேதி பிற்பகலுக்குப் பிறகுதான், குணசேகரனை ஆதரிக்கும் மெஜார்ட்டிக்கு தேவையானவர்களைவிட கூடுதலாக, அதாவது 25  கவுன்சிலர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் அயப்பன் எம்எல்ஏ.

அவர்களில் 12 பேரை மட்டுமே விழுப்புரத்திற்கு அனுப்பி அங்கேயே தங்க வைத்தார். இந்த தகவலை கதிரவன் மூலம் அறிந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அய்யப்பன் மற்றும் குணசேகரனை சமாதானப்படுத்த முயற்சிக்காமல், கடலூர் எஸ்பி சக்தி கணேசனுக்கு கடுமையாக உத்தரவுகளை பிறப்பித்து விழுப்புரத்தில் உள்ள 12 கவுன்சிலர்களும் கடலூருக்கு அழைத்து வர வேண்டும் எனஉத்தரவிட்டிருக்கிறார்.

குணசேகரனுக்கு எதிராக யாருமே கடத்தல் புகார் கொடுக்காத போதும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திமுக நிர்வாகியாகவே மாறி, அமைச்சரின் மகன் கதிரவனை உடன் அழைத்துச் சென்றுள்ளார். அய்யப்பன் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் போலீஸ் எஸ்பி சக்தி கணேசனுடன் கதிரவனையும் பார்த்தவுடன் கடுப்பாகி, இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பு ஆகிவிடும் சூழல் உருவானவுடன், விழுப்புரம் போலீஸ் எஸ்பி ஸ்ரீநாத்தும் அங்கு அழைக்கப்பட்டு, அமைச்சர் மற்றும் கதிரவனின் கட்டளைகளை நிறைவேற்ற, காவல்துறை அதிகாரிகள் என்பதை மறந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக கவுன்சிலர்களை சிறைப் பிடிப்பதை போல பிடித்து கடலூருக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த தகவல் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு உளவுத்துறை மூலம் கொண்டு செல்லப்பட்டவுடன், தனது நம்பிக்கைக்குரிய அன்பகம் கலையை மார்ச் 3 ஆம் தேதி இரவே கடலூருக்கு அனுப்பி உண்மை நிலவரத்தை அறிந்து வர உத்தரவிட்டிருக்கிறார். கடலூர் வந்த அன்பகம் கலையை அமைச்சரே மிரட்டிவிட்டார் என்றுதான் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அன்பகம் கலை…

அன்பகம் கலை மீது குற்றம் சுமத்துவது எங்கள் நோக்கம் இல்லை. ஆனால், கொடுத்த வாக்கை மீறிவிட்டார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் என்பதையும் அவரது பேச்சை கேட்டு குணசேகரன் பல கோடி ரூபாய் செலவழித்துவிட்டார் என்றும், திமுக நகரச் செயலாளர் ராஜா, நல்லவர் இல்லை, பெரும்பான்மை கவுன்சிலர்களிடம் அவர் அவப்பெயரை சம்பாதித்து வைத்துள்ளார் என்பதையும், கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளரை தோற்கடிக்க, திமுக வேட்பாளராகவே தனது மைத்துனரை போட்டி வேட்பாளராக போட்டியிட வைத்து கட்சிக்கு தீராத அவப்பெயரை தேடி தந்தவர் ராஜா என்பதையும் விரிவாக எடுத்துரைத்த பிறகும் கூட, உண்மையான நிலவரத்தை திமுக தலைமைக்கு முழுமையாக தெரிவித்தாரா. கலை என்ற சந்தேகம்தான்  எங்களுக்கு இன்றைக்கும இருந்து கொண்டிருக்கிறது.

தலைவரின் உத்தரவின் பேரில் கடலூர் வந்த அன்பகம் கலை, அய்யப்பன் எம்எல்ஏ கட்டுப்பாட்டில் கவுன்சிலர்கள் இருந்தாலும் கூட, அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, நீங்கள் யாரை ஆதரிக்க விரும்புகிறீர்கள் என்று விசாரித்து இருந்தால், குணசேகரின் மனைவி கீதாவை தான் ஆதரிக்கிறோம் என்று வெளிப்படையாகவே கூறியிருப்பார்கள். அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சொல்வதையும், அவரது ஆதரவாளர்கள் கூட்டம் கூறியதையும் மட்டுமே நம்பிவிட்டார் அன்பகம் கலை என்பதுதான் எங்களுக்குள்ள ஒரே வருத்தம்.

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த போது அய்யப்பன், கலைஞர் போட்டோவை அவமதித்துவிட்டார் என்று அமைச்சர் தரப்பு சொல்லியது எல்லாம் ஒரு குற்றச்சாட்டே இல்லை. இன்றைக்கு திமுக அமைச்சரவையில் இருப்பவர்கள் பாதி பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். அதுவும் அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, எங்கள் தலைவர் கலைஞர் உயிரோடு இருந்த போதே, சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் அவரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்யவில்லையா? அதுமட்டுமா ? தலைவர் கலைஞர் குடும்பத்து தளபதியான முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பற்றி எவ்வளவு கேவலமாக பேசினார்?..அதையெல்லாம் இப்போதும் நினைவில் வைத்திருக்கிறாரா, முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் அதிகார மமதைக்கு ஒரு முடிவு கட்டாமல், அவரின் பேச்சை கேட்டு திமுக தலைமை, விசுவாசமிக்க திமுக நிர்வாகிகளுக்கு துரோகம் இழைப்பது எந்த வகையில் நியாயம்? ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு கட்டுப்பட்டு இருந்தது எல்லாம் மலையேறி போய்விட்டது. அவரும், அவரது மகன் கதிரவனும் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் இன்றைய தலைமுறை திமுகவினர் அடிபணிந்து போக மாட்டார்கள் என்பதை இனி வரும் நாட்களில் இருவரும் புரிந்து கொள்வார்கள்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதற்குள், கடலூர் மாநகராட்சி தேர்தலை சுமூகமாக நடத்தாமல்,  அனைத்து தரப்பு மக்களும் திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் அளவிற்கு மேயர் தேர்தலை, பெரிய மோதலாக்கி, ஆளும்கட்சியான திமுகவுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார் அமைச்சர். உண்மையிலேயே கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் மீதுதான் திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தற்போதைக்கு அதர்மம் வெற்றிப் பெற்றிருக்கிறது. தர்மம் ஒருபோதும் தோற்காது. தலைமைக் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் கூட கடலூர் மாநகர திமுக நிர்வாகிகள் பெரும்பான்மையானோர் அய்யப்பன் எம்எல்ஏ பக்கம்தான் என்றைக்குமே நிற்பார்கள் என்று ஒரே மூச்சாக, உறுதியான குரலில் கூறினார் திமுக முக்கிய நிர்வாகி..

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு மிகுந்த சோகத்துடன் அவரே தொடர்ந்து பேசினார்.

அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் பேச்சை நம்பி ஏமாற்றத்திற்குள்ளான திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன், அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தற்கொலைக்கு முயன்றார். நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, தப்பித்தவறி குணசேகரன் உயிரிழந்து இருந்தால், இன்றைக்கு அமைச்சரின் அதர்மத்திற்கு துணைப்போயிருக்கும் திமுக தலைமை, குணசேகரனின் உயிரை மீட்டுத் தந்திருக்குமா?

மேயர் தேர்தலில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நிறுத்திய வேட்பாளர் சுந்தரி 19 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றிப் பெற்றார்.

ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட குணசேகரனின் மனைவி கீதா 13 வாக்குகளைப் பெற்றதும், அவருக்கு ஆதரவாக வாக்களிக்க முயன்ற 12 திமுக கவுன்சிலர்களை, வாக்களிக்கவே விடாமல் காவல்துறையினர் மாநகராட்சி வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்திய அராஜகமும் திமுக தலைமைக்கு எப்படி தெரியாமல் போனது?

12 திமுக கவுன்சிலர்களும் ஜனநாயக கடமையை ஆற்ற அனுமதிக்கப்பட்டிருந்தால், கீதா தான் மேயர் ஆக வெற்றிப் பெற்றிருப்பார் என்பதும் திமுக தலைமைக்கு தெரியுமா?

இதை விட கொடுமையாக கடலூர் மாநகராட்சி 8 வது வார்டு பெண் கவுன்சிலரின் மகனான திமுக ஐடி விங்க் நிர்வாகியை அடித்து உதைத்து, ராஜாவின் மனைவி சுந்தரிக்கு ஆதரவாக அவரது தாய் வாக்களிக்க வேண்டும் என கொடுமைப்படுத்திய சட்டவிரோத செயலாவது திமுக தலைமைக்கு தெரியுமா?

திமுக நகரச் செயலாளர் பதவி வகித்து வரும் பழக்கடை ராஜா, தனது வீடு உள்ள 27 வது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது தெரியுமா?’

கடலூர் நகர திமுக செயலாளர் பழக்கடை ராஜா….

சொந்த வார்டு மக்களால் தோற்கடிக்கப்படும் அளவுக்குதான் ராஜாவிற்கு நல்ல பெயர் கடலூரில் இருக்கிறது என்பதாவது தெரியுமா?

திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி விட்டார் அய்யப்பன் எம்எல்ஏ என்கிறதே தலைமை, 23 வது வார்டு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதே வார்டில் தனது மைத்துனருக்கு திமுக சின்னத்திலேயே போட்டியிட அனுமதித்த ராஜா, கட்சி படிவமும் கொடுத்தார்.

மதிமுகவை எதிர்த்து உதயசூரியன் சின்னம் வாக்குச்சீட்டில் இருந்ததால், அந்த வார்டில் அதிமுக வெற்றிப் பெற்றது எல்லாம் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்திய செயலாக திமுக தலைமைக்கு தெரியாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

இப்படி கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிய திமுக மூத்த நிர்வாகியின் குரலில் சினம் தான் அதிகமாக கொப்பளித்தது.

உடன்பிறப்பே…

உணர்ச்சியை தட்டியெழுப்பிய காந்த குரல், உயிரோட்டத்தை இழந்து கொண்டிருக்கிறதா?

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குணசேகரன்…
2 thoughts on “கொடுத்த வாக்குறுதியை மீறிய எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு வெகுமதி… அநீதியை எதிர்த்து போராடிய அய்யப்பன் எம்எல்ஏ நீக்கம்..  உட்கட்சி ஜனநாயகத்தின் லட்சணத்தை பாரீர்- பொங்கும் கடலூர் திமுக நிர்வாகிகள்…”
  1. This message send to cheif minister M.K.STALIN sir and there you good reply to Agriculture minister M.R.K.paneer selvam sir and then M.K STALIN SIR to give pushement to MRK paneer selvan sir my thoughts this is current decision and to give iyyappan sir take duty to it . ALL BEST AND BEDT OF LUCK

Comments are closed.