Mon. Nov 25th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்காக 3510 புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு வேலூருக்கு சென்று, அங்கு தங்கினார். அவரின் வருகையையொட்டி ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் வாலாஜா டோல் கேட் அருகில் மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் என கண்கவர் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான காந்தி சிறப்பாக செய்திருந்தார்.

நேற்றைய விழாவையொட்டி, முதல்வரை வரவேற்று வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்எல்ஏ, கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சரும், ராணிப்பேட்டை திமுக செயலாளருமான காந்தி ஆகியோர் சார்பில் முரசொலி நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரங்களில் முதல்வர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் புகைப்படம் இடம் பெறவில்லை.

இந்த விளம்பரங்கள்தான், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடையே சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்ட திமுக செயலாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கதிர் ஆனந்த் எம்பி வெளியிட்ட விளம்பரத்திலும், வேலூர் மேற்கு மாவட்ட திமுக, மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக, குடியாத்தம் ஒன்றிய திமுக உள்ளிட்ட சில விளம்பரங்களில் அமைச்சர் துரைமுருகனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

முரசொலியில் வெளியான விளம்பரங்களைத் தவிர்த்து, வேலூரில் உள்ள நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களிலும் அமைச்சர் காந்தி, ஏபி நந்தகுமார் எம்எல்ஏ தரப்பினர் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை தவிர்த்துவிட்டனர்.

அதேசமயம், கதிர் ஆனந்த் எம்பி தரப்பிலும் அவரது ஆதரவாளர்கள் தரப்பிலும் தரப்பட்ட விளம்பரங்களிலும் அமைச்சர் துரைமுருகனின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. தன்னை திட்டமிட்டு புறக்கணித்து அமைச்சர் காந்தி அவமானப்படுத்துவதாக கருதியாக அமைச்சர் துரைமுருகன், நேற்று காலை முதல்வர் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் காந்தியின் பெயரை உச்சரிக்கும்போது ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி என்றுதான் கூறினார். அமைச்சர் காந்தி என்று துரைமுருகன் அழைக்காததால், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக அரசியல் செய்து வரும் திமுக முன்னணி நிர்வாகிகள், துரைமுருகன் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் உள்ள பொதுச் செயலாளர் என்ற பதவி அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையிலும் துரைமுருகனுக்கு மாவட்ட அரசியலை கடந்து பெருந்தன்மையான அரசியல் செய்ய வேண்டும் என்ற புத்தியில்லை. அவரது மகனான கதிர் ஆனந்த்திற்கு கட்டுப்பட்டுதான் சீனியர் தலைவர்கள் செயல்பட வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையுடனேயே இப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று ஆவேசமாக பேசுகிறார்கள்.

ஆனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுகவில், செயலாளர்களாக உள்ள ஏபி நந்தகுமார் எம்எல்ஏ(வேலூர்), அமைச்சர் காந்தி (ராணிப்பேட்டை), தேவராஜ் எம்எல்ஏ( திருப்பத்தூர்) ஆகியோருக்கு கட்டுப்பட்டுதான் கதிர் ஆனந்த் எம்பி கட்சி பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார். அதை மீறியும், கதிர் ஆனந்த் தன்னிச்சையாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறும் மூன்று மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள், முதல்வரை வரவேற்று கொடுத்த விளம்பரத்தில் கதிர் ஆனந்த்தின் புகைப்படத்தையே முரசொலி விளம்பரத்தில் இருந்து தூக்கிவிட்டார்கள். இப்படி தலைமை தன்னை அங்கீகரிக்காத போதும் கூட, அதை ஒரு அவமானமாக கருதால், துடைத்தெறிந்துவிட்டு, வேலூரில் உள்ளடி அரசியலையே தொடர்ந்து செய்து வருகிறார் கதிர் ஆனந்த் என்கிறார்கள்.

அமைச்சர் துரைமுருகனின் அரசியல் வரலாற்றில் இதுவரை சொந்த காசை செலவழித்து திமுக தலைவருக்கோ, தளபதிக்கோ விளம்பரமே கொடுத்தது இல்லை என்றும், இப்போதுதான் முதல்முறையாக தந்தையும், தனையனும் சேர்ந்து கொண்டு, தங்கள் பணத்தை செலவழித்து முரசொலியில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் என்று கிண்டலடிக்கும் வேலூர் திமுக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தந்தைக்கும், தனையனுக்கும் எதிராக வலுக்கும் எதிர்ப்பை, முதல்வரும், தலைருவமான மு.க.ஸ்டாலின் உணர்ந்து கொண்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், தங்கள் பணத்தை செலவழிக்க துவங்கியிருக்கிறார்கள் என்பதும் எதிரணியினரின் குற்றச்சாட்டு.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திமுக விஜபிகள் என்றால், திமுக முன்னாள் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியால் அடையாளம் காட்டப்பட்டவரும் சீனியருமான அமைச்சர் காந்தி, ஏபி நந்தகுமார் எம்எல்ஏ, தேவராஜ் எம்எல்ஏ ஆகிய மூன்று பிரமுகர்களுமே அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் அன் கோவிற்கு எதிராக உறுதியுடன் நிற்கிறார்கள்.

அதிலும் அமைச்சர் காந்தி, தனது மாவட்டமான ராணிப்பேட்டையில் அமைச்சர் துரைமுருகனின் தலையீடோ அல்லது கதிர் ஆனந்தின் உள்குத்து அரசியலையோ சிறிதும் அனுமதிப்பதே இல்லை. உள்ளாட்சித் தேர்தலின் போது, ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட எந்த ஊராட்சி ஒன்றியத்திலும் துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோரின் ஆதரவாளர்களை தலைதூக்கவே விடவில்லை அமைச்சர் காந்தி. இதனால்தான் அவர் மீது தந்தையும், தனையனும் அளவுக்கு அதிகமாக ஆத்திரத்தில் உள்ளார்கள் என்கிறார்கள் அமைச்சர் காந்தியின் விசுவாசிகள்.

மூன்று செயலாளர்களும் ஓர் அணியில் உறுதியாக நிற்க, தந்தை, தனையன் அணியில், ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் மட்டுமே பின்னணியில் நிற்கிறார்கள். நாளுக்கு நாள் வேலூர் மாவட்டத்தில் தனது அரசியல் செல்வாக்கு சரிந்து வருவதை கண்டு ஆத்திரத்தின் உச்சத்திற்கே செல்லும் அமைச்சர் துரைமுருகன், மூவர் அணியை மீறி தனது மகனை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக திமுகவில் நிலைநிறுத்த படாத பாடு படுகிறார். தள்ளாடும் வயதில் அவர் ஆடும் அரசியல் ஆட்டத்தை கண்டு எள்ளி நகையாடும் எதிர் அணியினர், அவரது மகனோடு மட்டுமல்ல, துரைமுருகனையும் எதிர்த்து நேரடியாக அரசியல் செய்ய துணிந்து விட்டார்கள் என்கிறார்கள் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த திமுக முன்னணி நிர்வாகிகள்.

திமுக பொதுச் செயலாளர் என்ற பதவியின் கண்ணியத்திற்கு ஏற்ப, அமைச்சர் துரைமுருகன் செயல்பட்டால், அவரது சொந்த மாவட்டத்தில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராது என்றும் அதையும் மீறி உள்ளூர் அரசியலில் இறங்கி விளையாடினார் என்றால் அதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கும் விதமாகவே பேசுகிறார்கள் மும்மூர்த்திகளின் தளபதிகள்…

அமைச்சர் துரைமுருகனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் காந்தி, தனது அரசியல் குருவான ஆற்காடு வீராசாமியின் புகைப்படத்தையும் விளம்பரத்தில் சேர்க்காமல் தவிர்த்ததை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் பேசும்போது, காந்தி இதுரை கொடுத்த விளம்பரங்களில் ஒருமுறை கூட ஆற்காடு வீராசாமியின் புகைப்படத்தை அமைச்சர் காந்தி தவிர்த்ததில்லை. தனது விளம்பரத்தில் துரைமுருகனின் புகைப்படமோ, பெயரோ எந்த வகையிலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதில் உறுதி காட்டியதால், முதல்முறையாக அமைச்சரான நிலையிலும் அவர் கொடுத்திருக்கும் விளம்பரத்தில் தனது அரசியல் குருவான ஆற்காடு வீராசாமியின் புகைப்படத்தையும் தவிர்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் அமைச்சர் காந்தி என்கிறார்கள்….

ஒரு விளம்பரத்தில் இவ்வளவு அரசியலா…….