கடலூரில் திமுக எம்.பி. க்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். திமுக எம்.பி. ரமேஷ் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கோவிந்தராசு மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை வரவேற்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். அதன் விவரம் இதோ…
கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி உடல் முழுக்க காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது!
உள்ளூர் காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால் தான் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடுவதில் தவறில்லை. ஆனால், நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும்
கடலூர் எம்.பி. முந்திரி ஆலை மர்மச்சாவு வழக்கில் துணை கண்காணிப்பாளர் நிலை அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும். உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் இரு அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்!
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.