ஒலிம்பிக் போட்டியில் பேட் மின்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற புகழ் பெற்ற வீராங்கனை சிந்து, ஆந்திராவில் விளையாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்றை துவங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் . ரியோ மற்றும்
டோக்கியோ என அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு சாதனை படைத்து இந்தியாவுக்கு மிகப்பெரிய புகழைத் தேடி தந்துள்ளார். வெண்கலப் பதக்கத்துடன் இந்தியா திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு ஆந்திர அரசின் அழைப்பை ஏற்று சென்ற பி.வி.சிந்து மற்றும் அவரது குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உற்சாகமாக வரவேற்றார்.
ஆந்திர அரசு சார்பில் அறிவிப்பட்ட பரிசுத் தொகை 30 லட்சத்தை பி.வி.சிந்துவிடம் வழங்கிய முதல்வர், நினைவுப் பரிசையும் வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து, ஆந்திராவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், விசாகப்பட்டினத்தில் விளையாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்றை தொடங்குமாறு பி.வி.சிந்துவிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். பி.வி.சிந்துவை கௌரவப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முதல்வரின் வாழ்த்துகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.வி.சிந்து, டோக்கியோ செல்வதற்கு முன்பாக ஆந்திர முதல்வர் ஜெகனை சந்தித்து ஆசிப் பெற்றேன். அப்போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்துகளை தெரிவித்தார். பதக்கத்துடன் தாயகம் திரும்பிய பிறகு மீண்டும் முதல்வர் ஜெகனை இரண்டாவது முறையாக சந்தித்தேன். டோக்கியோ வெற்றிக்கு உள்ளார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்த முதல்வர் ஜெகன், இதேபோல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் முதல்வர் ஆசிர்வாதம் செய்தார் என்றும் டோக்கியோ வெற்றியின் மூலம் ஆந்திராவுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடி தந்திருப்பதாகவும், இதேபோல எதிர்காலத்திலும் பல சாதனைகளைப் படைத்து தாய் நாட்டிற்கு புகழைத் தேடி தர வேண்டும் என்று முதல்வர் ஜெகன் வாழ்த்தினார். முதல்வருடான சந்திப்பு மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பி.வி.சிந்து தெரிவித்தார்.