Sun. Nov 24th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சரும் அமமுக.வின் துணைப் பொதுச்செயலாளருமான பழனியப்பன், கடந்த 3 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்.

அமமுக.வில் இருந்து அவரை திமுக.வுக்கு இழுத்து வருவதற்கு பெரும் முயற்சியெடுத்தவர் திமுக அமைச்சரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான செந்தில் பாலாஜி என்று கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது தீவிர ஆதரவாளர்கள்.

ஆனால், அமமுக.வில் இருந்து விலகி திமுக.வில் பழனியப்பன் சேர்வதற்கு மூளையாக செயல்பட்டவர், அக்கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் என்று குண்டை தூக்கிப் போடுகிறார்கள், கொங்கு மண்டலத்தில் உள்ள அமமுக முன்னணி நிர்வாகிகள்.

தனக்கு தானே யாராவது சூன்யம் வைத்துக் கொள்வார்களா ? என்று அதிர்ச்சியாக, நமக்கு அறிமுகமான அமமுக நிர்வாகிகளின் மனசாட்சியை தட்டியெழுப்பினோம். நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர் மனம் திறந்து பேசினர். ஒவ்வொரு வார்த்தையும் அக்னி ரகம்.. தனது அரசியல் வாழ்வையே தீ வைத்து கொளுத்தி கொள்ளும் வகையில் செயல்பட்டு வரும் டிடிவி தினகரனின் அதிரடி ஆட்டத்தை விவரித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் அமமுக.வுக்கு படுதோல்வி ஏற்பட்டவுடனேயே, தனது அரசியல் பயணத்திற்கான முடிவு காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டார் டிடிவி தினகரன். தான் சார்ந்த சாதி பின்புலத்தை பெரிதாக நம்பி, தென் மாவட்டங்களில் அதிகமாக கவனம் செலுத்தினார் டிடிவி தினகரன். ஆனால், அவரது சமுதாயத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் மாவட்டங்களில், வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய தொகுதிகளில் கூட அமமுக வேட்பாளர்களுக்கு 10 ஆயிரம் வாக்குகள் கூட கிடைக்கவில்லை. இதனை பார்த்து மனம் நொந்து போய்விட்டார் டிடிவி தினகரன்.

இன்றைக்கு அதிமுக.வுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வி.கே.சசிகலா, அன்றைக்கு இதேபோன்று ஒன்றிரண்டு ஆடியோக்களை வெளியிட்டு, அதிமுக.வின் இரட்டை தலைமையின் நம்பிக்கைத் துரோகத்தை, பொதவாக விமர்சனம் செய்திருந்தால்கூட, அமமுக வேட்பாளர்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கும். அதன் மூலம், அமமுக.விற்கு அரசியல் செல்வாக்கு கூடியிருக்கும். ஆனால், சட்டமன்றத் தேர்தலின் போது அமமுக வேட்பாளர்களுக்கு மறைமுகமாக கூட வி.கே.சசிகலா ஆதரவு தெரிவிக்காததால், அமமுக வேட்பாளர்கள் நொந்துப் போய்விட்டனர்.

மேலும், அமமுக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கும் வி.கே.சசிகலா எந்தவகையிலும் உதவவில்லை. இத்தனைக்கும் கர்நாடக சிறையில் இருந்து விடுதலையாகி பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்புக்கு தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்தவர்கள் அமமுக.வைச் சேர்ந்தவர்கள்தான். அவரவர் தங்கள் சொந்த காசை செலவழித்து கார்களிலும், வேன்களிலும், , பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அணி அணியாக திரண்டு வரவேற்பு கொடுத்தார்கள்.

அந்த வரவேற்பின் மூலம் வெளிப்பட்ட ஆர்ப்பாட்டமான எழுச்சிதான், சசிகலாவை மாபெரும் சக்தியாக அடையாளப்படுத்தி, அன்றைய அதிமுக அரசை, குறிப்பாக அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடுநடுங்க வைத்தது. இப்படி, கடந்த நான்காண்டுகளாக அதிமுக அரசுக்கு எதிராக தான் உருவாக்கி வைத்த எதிர்ப்பு அலையை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்து கொள்ள துடிக்கும் வி.கே.சசிகலா, சட்டமன்றத் தேர்தலின் போது அமமுக வேட்பாளர்களை ஒட்டுமொத்தமாக கைகழுவிவிட்டது, டிடிவி தினகரனின் மனதில் ஆறாத காயமாக இருந்து வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், இரட்டை தலைமைக்குள் முட்டல் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையிலும், வி.கே.சசிகலா அரசியல் ஆதாயம் பெற நாள்தோறும் ஆடியோ ரீலீஸ் செய்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இரட்டை தலைமையிடமிருந்து அதிமுக.வை வி.கே.சசிகலா மீட்டெடுத்திடுவார் என்ற ஒரு விதமான மாயத் தோற்றம் உருவாகியுள்ள நிலையில், அதற்கான வெற்றியை தான் மட்டுமே சுவைக்க வி.கே. சசிகலா தீர்மானித்திருப்பதை கண்டுதான் டிடிவி தினகரன் கொதித்துப் போய்விட்டார்.

இதைவிட கொடுமையாக விகே சசிகலாவுக்கு எதிரான அரசியல் வியூகத்தை டிடிவி தினகரன் வகுக்க தூண்டிய விவாகரத்தை கேட்டபோதுதான் அமமுக முன்னணி நிர்வாகிகள் அனைவரும் ஆடிப்போய்விட்டோம் என்றார் கொங்கு மண்டல அமமுக முக்கிய நிர்வாகி ஒருவர்.

சில விநாடிகள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு அவரே தொடர்ந்து பேசினார்.

அதிமுக.வில் ஆடியோ மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் வி.கே. சசிகலா, கொரோனோ ஊரடங்கு முடிந்தவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருக்கிறார். அவரின் சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் குழுவில் டிடிவி தினகரனுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டார் வி.கே.சசிகலா. தான் மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணம் தொடர்பாக டிடிவி தினகரனிடம் ஒரு வார்த்தை கூட வி.கே.சசிகலா கலந்து ஆலோசனை செய்யவில்லை என்பதுதான் எங்களை எல்லாம் ஆத்திரப்படுத்தியிருக்கிறது.

கடந்த நான்காண்டுகளாக அதிமுக அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அணியை உருவாக்கியவர் டிடிவி தினகரன்.அதற்காக அவர் சிறைக்கு எல்லாம் சென்றிருக்கிறார். அவரின் தியாகத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், மறைந்த எம்.நடராஜனின் சகோதரர்களின் பின்னணியோடு அதிமுக.வில் புரட்சி ஏற்படுத்த சுற்றுப்பயணத்திற்கு ஆயத்தமாகி வருகிறார் வி.கே. சசிகலா. அவரின் (டிடிவி தினகரன்) ஆதரவு இல்லாமல், அமமுக.வினரின் எழுச்சி மிகு வரவேற்பு இல்லாமல் வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணம் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் டிடிவி தினகரன்.

வி.கே.சசிகலாவின் புறக்கணிப்பால் மிகுந்த மனவேதனையில் இருந்து வரும் டிடிவி தினகரன், வி.கே.சசிகலாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையில்தான், கொங்கு மண்டல அமமுக நிர்வாகிகளிடமும், அதிமுக நிர்வாகிகளிடம் மரியாதைக்குரியவராக உலா வந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனை திமுக. பக்கம் தள்ளிவிட்டிருக்கிறார் டிடிவி தினகரன். அவரின் முன்னாள் நம்பிக்கைக்குரிய தளபதியும் தற்போதைய மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி, டிடிவி தினகரன் போட்ட ஸ்கெட்சை வெற்றிகரமாக நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

அதிமுக.வின் இரட்டைத் தலைமையை எதிர்த்து சுற்றுப்பயணம் துவங்குவதற்கு முன்பாக டிடிவி தினகரனுடன் சமரசம் செய்து கொண்டு, அவருக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்றால், கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டுமல்ல தென் மாவட்டங்களில் இருந்தும் அமமுக முன்னணி நிர்வாகிகள் திமுக.வில் ஐக்கியமாகி வி..கே.சசிகலாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள்.

பி.பழனியப்பன் திமுக.வில் இணைந்தது ட்ரையலர்தான். மெயின் பிக்சஸரே இனிமேல்தான் இருக்கிறது. டிடிவி தினகரனின் அதிரடி ஆட்டங்களை இனிமேல்தான் விவே சசிகலா பார்க்கப் போகிறார் என்று கூறிவிட்டு வாட்ஸ் அப் கால் இணைப்பைத் துண்டித்தார் கொங்கு மண்டல முக்கிய நிர்வாகி.

என்னங்க நடக்குது மன்னார்குடி குடும்பத்தில்.. தலை சுற்றுது.