அரியர்ஸ் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் 8 வாரங்களுக்குள் தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொரோனோ தொற்று பரவலையடுத்து கடந்தாண்டு (2020) கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய பருவத் தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த முறையே கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வை தவிர இதர பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி கடந்தாண்டு ஆகஸ்ட்டில் வெளியிட்ட அறிவிப்பு, கல்லூரி மாணவர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அதற்கு முந்தைய தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களும் (அரியர்ஸ்) நிலுவையில் இருந்த அந்தந்த பாடங்களுக்கான தேர்வு எழுதாமலேயே வெற்றிப் பெற்றதாகவும், அந்த அறிவிப்பில் குறிபிடப்பட்டிருந்தது.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அப்போதே கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், காலஅவகாசமும் வழங்கி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவும் தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தன. இருப்பினும், உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருப்பதாக கூறி, கல்லூரி பேராசிரியர்களின் வேண்டுகோள் உள்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கையையும் புறக்கணித்தார்.
அரியர்ஸ் ரத்து என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யாமல், தமிழக அரசு பிடிவாதமாக இருப்பதற்கு முக்கிய காரணமே, அரசியல் ஆதாயம்தான் என்றும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அதிமுக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினார்.
இதே காலகட்டத்தில், அரியர் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் பழனிசாமியை வாழ்த்தி, மாநிலமெங்கும் கல்லூரி மாணவர்கள் பதாகைகளை வைத்தனர். இந்த விவகாரம் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறது என்று தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு மேற்கொண்டவர்களும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனிடையே, அரியர்ஸ் தேர்வு ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வந்தபோதும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எந்த அறிவுரையும் வழங்கவில்லை.
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஏப்ரல் 7 ஆம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிமன்றம், அரியர்ஸ் தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. .
அதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கல்லூரி மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியள்ளது. கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனோவின் தாக்கம் குறைந்த நேரத்தில், இதுபோன்ற பதிலை தமிழக அரசு தெரிவித்திருந்தால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி இருப்பார்கள்.
ஏறக்குறையாக ஓராண்டுக்குப் பிறகு இப்போது அரியர்ஸ் தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அரியர்ஸ் பாடங்களில் வெற்றி என்ற மனநிலையில், அடுத்த தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களிடம் நிலுவையில் உள்ள அரியர்ஸ் தேர்வுகளிலும் வெற்றிப் பெற்றால்தான் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படும் என்ற அரசின் முடிவு, பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரியர்ஸ் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழக அரசு நாடகம் ஆடிவிட்டதாகவும், மாணவர்களை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டதாகவும் கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.