Sun. Nov 24th, 2024

கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 7819 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 2564 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 3464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி இன்று மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 54 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 87 ஆயிரத்து 663 ஆக உள்ளது.

சென்னையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 118 ஆக உள்ள நிலையில், கடந்த மார்ச் முதல் இன்றைய தினம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வருவது குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கொரோனோ தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முனைப்பான நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்ப்பது, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் வீடுகளிலேயே தங்கி பணியை மேற்கொள்வது, தவிர்க்க முடியாத நேரத்தில் பொது இடங்களுக்கு வருபவர்கள் முகச் கசவத்தை அணிந்திருப்பதுடன், தனி மனித இடைவெளியையும் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அனைத்துதரப்பினரும் தடுப்பூசிகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.