Sat. Nov 23rd, 2024

சிறப்புச் செய்தியாளர் …

வழக்கமான நாளாக ஞாயிற்றுக்கிழமை இன்று விடியவில்லை. காலை நேரத்திலேயே அமைதியான மனதில் ஆக்ரோஷம் வருமளவுக்கு செய்துவிட்டது இரண்டு தொலைபேசி அழைப்புகள்…ஒருவர், தென்மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. 2011 ஆம்ஆண்டு நிறைவில் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க, தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலக அறைக்கு சென்றிருந்தபோது, அறிமுகமானவர். அந்த நாளில் இருந்து முக்கியமான ஏதாவது விஷயம் என்றால் அழைப்புகள் வரும். இந்த பத்தாண்டுகளில் அதிகபட்சமாக 10 முறை அழைத்திருப்பார். அவருடனான உரையாடலை அப்படியே பதிவு செய்கிறேன்..

எம்.எல்.ஏ., நல்லா இருக்கீங்களா.. தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு.. யார் ஆட்சிக்கு வருவார்கள்.?

நான் உங்களுக்கு தெரியாததையா நான் சொல்வி விடப்போகிறேன். நாள்தோறும் களத்தில் இருப்பவர் நீங்கள். மக்களின் மனநிலை உங்களுக்கு தெரியாதா?

எம்.எல்.ஏ. நேரடியாக கேட்கிறன். யார் ஆட்சிக்கு வருவார்கள்.?

நான். திமுக.தான் ஆட்சிக்கு வரும். நான் பேசும் நண்பர்கள் சொல்கிற விஷயம் இது. பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளும் அதைதான் சொல்கின்றன.

எம்எல்ஏ அதிமுக எவ்வளவு இடங்களில் வெற்றிப் பெறும். அமைச்சர்களில் எத்தனை பேர் மீண்டும் ஜெயிப்பார்கள்.

நான். என்னால் இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை.

எம்எலஏ உங்கள் மாவட்டத்தில் முதல்வர் நேற்று பேசியதைக் கேட்டீர்களா?

நான் முழுமையாக கேட்கவில்லை. கொஞ்சம்தான் கேட்டேன்.

எம்எல்ஏ உண்மையை பேசினாரா? அமைச்சராக இருந்த போது எப்படியிருந்தேனோ அப்படியேதான் முதலமைச்சராக ஆன பிறகும் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறாரே?

நான் வாக்குசேகரிப்பிற்காக பேசியிருக்கிறார். அதை அப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எம்எல்ஏ.. அம்மா முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்த எடப்பாடியார், 3வது இடத்தில் இருந்தார். அப்போது கூட வேறு எந்த ஜூனியர் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர் காலில் விழுந்தது கிடையாது. குறிப்பாக அவரது மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட. உங்களுக்கு தெரியும் அல்லவா..

நான். தெரியும். அதைப் பற்றி இப்போது எதற்கு?

எம்எல்ஏ. முதல் அமைச்சராக அவர் பதவியேற்ற பிறகும் தலைக்கணம் இல்லாத நபரைப் போல தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள முயற்சிப்பது ஏன்? அவரை பகைத்துக் கொண்டால் அமைச்சர் பதவியில் நீடிப்பதே சந்தேகம். மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரமாட்டார் என பெண் அமைச்சர்கள் எடப்பாடியார் காலில் விழுவது எல்லாம் உங்கள் கவனத்திற்கும் வந்திருக்குமே..அவரது வயதையொத்த சீனியர் எம்.எல்.ஏ.க்கள் கூட முதல்வர் காலில் விழ வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படவில்லையா..

நான்.. அது அவரவர் விருப்பம். இதில் முதல்வரை குறை சொல்ல என்ன இருக்கிறது?

எம்எல்ஏ. அம்மாவைவிட (ஜெயலலிதா) தனக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டது என்ற ஆணவத்தில்தான் எங்களை எல்லாம் இன்றைக்கு திண்டாட வைத்துவிட்டார். அவரது தொகுதியில் பாமக ஆதரவு இருந்தால் எளிதாக வெற்றிப் பெற்றுவிடலாம் என்று சுயநல சிந்தனையோடு வன்னியருக்கு தனி உள்ஒதுக்கீடு கொடுத்து, அவர் நிம்மதியாகிவிட்டார். ஆனால், நாங்கள் போட்டியிடும் இடங்களில் எல்லாம் தனி உள்ஒதுக்கீடு விவகாரத்தால் எதிர்ப்புகள் பலமாக இருக்கிறது.

தென்மாவட்ட எம்.எல்.ஏ.களின் வற்புறுத்தலை பொருட்படுத்தாமல் அமமுக.வை உதாசீனப்படுத்தினார். தேமுதிக.வை ஏன் வெளியேற்றினார். போராட்டம் இன்றி எளிதாக வெற்றி பெறும் அளவுக்குதான் எனது தொகுதியை வைத்திருந்தேன். ஆனால், இன்றைக்கு அமமுக.வும் தேமுதிக.வும் கூட்டணி வைத்ததால், பத்தாயிரம் வாக்குகள் எனக்கு எதிராக போகப் போகிறது. அதை சரிகட்ட, கோடி கோடியாய் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல தென்மாவட்டங்களில் போட்டியிடும் பலர், ஒவ்வொரு நாளும் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுப்பணித்துறையிலும், நெஞ்சாலைத்துறையிலும் வருஷத்துக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நான்காண்டுகளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில் முதல்வர் எவ்வளவு கமிஷன் அடித்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். இந்த இரண்டு துறைகளிலும் எல்லா கான்ட்ராக்ட்டையும் அவரது சொந்தக்காரர்களுக்கே கொடுத்து கமிஷன் தொகையை ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டிக் கொண்டார்.

என் மீது ஊழல் புகார் கூற முடியுமா? என பிரசாரக் கூட்டங்களில் சவால் விடுகிறார். அறப்போர் இயக்கம், ஒவ்வொரு நாளும் ஆளும்கட்சிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அதற்கு பதில் இல்லை. அவரது செல்லப்பிள்ளைகளாக உள்ள இரண்டு அமைச்சர்கள், அவரவர் துறைகளில் அடித்த கொள்ளைகள், tஊழல் ஒழிப்பு துறையில் முடங்கி கிடக்கிறது. கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேச முடியுமா?

அம்மா (ஜெயலலிதா) சாதனைகளை, நான்காண்டு சாதனைகளை சொல்லி பிரசாரம் செய்யலாம். அதைவிட்டு, திமுக.வையும், மு.க.ஸ்டாலினையும் வம்புக்கு இழுக்கிறார். என்னுடைய தொகுதியில் எதிர்முகாம் வேட்பாளர்மீது அதிருப்தி இருக்கிறது. அதனால், எதிரணியைச் சேர்ந்த நிர்வாகிகளை சரிகட்டி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் மு.க.ஸ்டாலினை திட்டிக் கொண்டே இருப்பதால், எனக்கு ஓட்டுபோடும் மனநிலையில் இருக்கிற எதிர்க்கட்சியினர் கூட, முதல்வரின் கோயபல்ஸ் பிரசாரத்தை பார்த்து ஆவேசப்பட்டு, திமுக வேட்பாளருக்கே தீவிரமாக பிரசாரம் செய்ய தொடங்கிவிட்டார்கள். தேர்தல் முடியட்டும். எடப்பாடி பழனிசாமி கதி என்ன ஆகிறது என்று பாருங்கள்..

நான். கோபப்படாதீர்கள். நடந்ததைப் பேசி பலனில்லை. உங்கள் தொகுதியில் நீங்கள் வெற்றிப் பெறுவதற்கு என்ன வழிகள் இருக்கிறதோ அதையெல்லாம் செய்யுங்கள். தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

இவ்வாறு கூறி உரையாடாலை வளர்த்தாமல் வாட்ஸ் அப் கால் இணைப்பை துண்டித்தேன்.

சிறிதுநேரத்தில் எடப்பாடியில் இருந்து அதிமுக அபிமானி நண்பர் அழைத்தார். அவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்த பிரசாரத்தைப் பற்றியே கேட்டார்.

நான் முழுமையாக கேட்கவில்லை.

அபிமானி முதல்வரான பிறகு 65 முறை தொகுதிக்கு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் எடப்பாடியார்

நான் அதற்கு என்ன, அவர் தொகுதிக்கு அவர் வந்ததைப் பற்றி கூறியிருக்கிறார்.

அபிமானி முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து எடப்பாடி தொகுதிக்குள் வன்னியருக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடியார். ஆனால், இன்றைக்கு தான் வெற்றிப் பெறுவதற்காக, அவர்களிடம்தான் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இப்படிபட்டநேரத்தில் வீம்பான பேச்சு எதற்கு ?

எடப்பாடி அதிமுக ஒன்றியத்தை இரண்டாக பிரித்து இரண்டு ஒன்றியச் செயலாளர் பதவிகளில் இரண்டு பேரை நியமனம் செய்தார் எடப்பாடியார். இருவருமே வன்னியர் கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை ஒருங்கிணைந்த ஒன்றிய செயலாளராக இருந்தவர் மாதேஸ்வரன். அவர் வன்னியர். எடப்பாடியார் முதல்வரானவுடன் அவரிடம் இருந்த ஒன்றியச் செயலாளர் பதவியை பறித்துவிட்டார்.

அதைவிட கொடுமையாக, உள்ளாட்சித் தேர்தலையொட்டி கோவிந்தராஜனின் மனைவியை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு நிறுத்துவதாக கூறி, அரசு கலைக்கல்லூரியில் பார்த்து வந்த வேலையில் இருந்தும் அவரது மனைவியை ராஜினாமா செய்ய வைத்தார். ஆனால், அந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல், மாதேஸ் என்ற நாடாருக்கு பதவியை கொடுத்துவிட்டார் எடப்பாடியார்.

இதனால், எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள அதிமுக.வில் உள்ள வன்னியர்கள் எல்லோரும் அவருக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர். வன்னியர்களுக்கு எந்த முக்கியத்துவத்தையும் தொகுதிக்குள் தராத எடப்பாடி, எல்லோருடனும் மாமன், மச்சான் மாதிரிதான் பழகி வருகிறேன் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.

நான் முதலமைச்சருக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொள்வதில் கூட அதிமுகவில் உள்ள வன்னியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்தானே.

அபிமானி 65 முறை எடப்பாடி தொகுதிக்கு வந்திருக்கிறேன் என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார் எடப்பாடியார். இத்தனை முறை வந்து என்ன சாதித்து இருக்கிறார். அதிமுக அவைத்தலைவராக உள்ள என்.ஆர்.சேகர், கை கால் வராமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். ஒருமுறை கூட அவரது வீட்டுக்குச் சென்று எடப்பாடியார் நலம் விசாரித்தது கிடையாது. இத்தனைக்கும் அவர் வீடு இருக்கும் வழியாகதான் சென்று வருகிறார். எடப்பாடியில் இதுவரை ஒருமுறை கூட தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது கிடையாது. ஐஏஎஸ் ஐபிஎஸ் பயிற்சி முகாம் கிடையாது. நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கிடையாது. 6 ஆண்டு அமைச்சர், 4 ஆண்டு முதலமைச்சர். எடப்பாடி தொகுதியில் எத்தனை பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது. பட்டியல் தருவாரா முதல்வர்?

சிறிய அல்லது பெரிய அளவில் தொழிற்சாலைகள் எடப்பாடி தொகுதியில் எங்கும் தொடங்கவில்லை. எடப்பாடியாருக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். தொகுதி முழுவதும் ரோடு போட்டார். எடப்பாடியை சுற்றி சாலையை விரிவாக்கியபோது, வெளியூரில் இருந்து வந்தெல்லாம் சாலை விரிவுப்படுத்தப்பட்ட இடங்களில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி குவித்தார்கள்.

எடப்பாடியார் சமுதாயத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி, எடப்பாடியில் நிலம் வாங்கியிருக்கிறார். பினாமி பெயரில் நூற்றுக்கணக்கானோர் நிலம் வாங்கியிருக்கிறார்கள். கடந்த நான்காண்டுகளில் எடப்பாடி தொகுதிக்குள் மட்டும் பதிவான நிலப்பத்திரங்களை எடுத்து ஆராய்ந்தால், பினாமி யார், உண்மையான நில உரிமையாளர் யார் என்று தெரிந்துவிடும்.

எடப்பாடி ஊருக்கு பக்கத்திலேயே மரவள்ளிக் கிழங்கு ஆலை ஒன்று இருக்கிறது. அதனுடன் எடப்பாடியார் பெயரை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அந்த ஆலை கைமாறிய நாளில் இருந்து மரவள்ளிக் கிழங்கு ஆதார விலையை உயர்த்தாமல் அரசு இருந்து வருகிறது. அதனால்தான் விவசாயிகளுக்கு எடப்பாடியார் மேல் சந்தேகம் எழுந்துள்ளது.

எடப்பாடியாரின் மனைவி சகோதரர்தான் வெங்டேசன். இங்கு நிழல் முதல்வர். எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கான்ட்ராக்டடுகள் இருந்தாலும், சேலம் மாவட்ட அளவிலான கான்ட்ராக்ட்டுகள், கட்சிப் பணி, அரசுப் பணி என எந்த வேலையாக இருந்தாலும் வெங்டேசன் சொல்வதுதான் வேத வாக்கு. எடப்பாடியாரின் சகோதரர் கோவிந்தன் என்கிற கோவிந்தராஜ், எடப்பாடி தொகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். எடப்பாடி தொகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் அவரின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை.

அரசுப் பணி, அரசு கான்ட்ராக்ட் என எந்தவொரு காசு பார்க்கும் வேலையாக இருந்தாலும் முதல்வருக்கு அவரது சாதியினர் வேண்டும். ஆனால், எடப்பாடி தொகுதியில் அவருக்கு ஓட்டுப்போட வன்னியர் மட்டும் வேண்டும். ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த தொகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல், மனசாட்சியை விற்று ஊர், ஊராக பொய் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆயிரம் இரண்டாயிரம் என பணத்தை வீசியெறிந்தால் வெற்றிப் பெற்றுவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார். இந்த முறை தொகுதி மக்கள் முதல்வருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

நான் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..எடப்பாடி தொகுதி முதல்வருக்கு ராசியான தொகுதி என்கிறார். மே 2 ஆம் தேதி முடிவு தெரிந்துவிடப் போகிறது. என்று கூறி கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.