Sun. Dec 3rd, 2023

திரையில் காட்சி தந்து கொண்டிருப்பவர் கிரிதரன். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பணியாளர் நலன் துறையில் துணைச் செயலாளராக பணிபுரிந்து வருபவர்..

இப்படியெல்லாம் சொன்னால், யார் இந்த ஆளு.. இவரைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சலிப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படலாம்.

ஆனால், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடியாரிடம் தனி உதவியாளராகவும், 2017 முதல் 2021 வரை எடப்பாடியார் முதல்வராக வலம் வந்த போதும் அவரிடம் தொடர்ந்து  பணியாற்றியவர் கிரிதரன் என்றால் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் தரும் செய்தியாகதான் இருக்கும்.

அதிமுக ஆட்சியை அகற்றிவிட்டு திமுக ஆட்சியை அமைத்து முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் கோலோச்சும் தலைமைச் செயலகத்தில், இன்றைய தேதியிலும்கூட  கிரிதரனை கண்டால், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்கிறார்கள் திமுக ஆதரவு அதிகாரிகள்.

எடப்பாடியார் முதல்வராக நான்கு ஆண்டுகள் நீடித்த காலத்தில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் பெரும் பங்கு வகித்தவர் கிரிதரன் என்று கூறுவோர்., எடப்பாடியார் முதல்வராக இருந்து நான்கு ஆண்டுகளிலேயே ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டவர் கிரிதரன் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்தா என்று நெஞ்சை பிடித்து கொண்டு கேட்டால், திமுக ஆதரவு அதிகாரிகள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளிலும் கூட யாருக்கும் பயப்படாமல் கோடிகளில் லட்சம் வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறார் கிரிதரன் என்று பெரிய குண்டாக தூக்கிப் போடுகிறார்கள்.

முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுபவர் கடலூர் திமுக எம்பி ரமேஷ். இவர், கிரிதரனுக்கு மிக நெருக்கமான உறவினர். இருவருமே செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். முந்தைய அதிமுக ஆட்சியில் லஞ்சமாக பெற்ற பல நூறு கோடி ரூபாய் பணத்தை எல்லாம் ரமேஷின் முந்திரி தொழிற்சாலைகளில் முதலீடு செய்திருக்கிறார் கிரிதரன் என்கிறார்கள். 

மிகவும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கிரிதரன், கொங்கு கவுண்டர் ஆட்சியிலும் கொடி கட்டி பறந்தார்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியிலும் கொடி கட்டி பறக்கிறார் என்பதுதான் திமுக சார்பு அதிகாரிகளுக்கு எல்லாம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடியாரிடம் தனி செயலாளராக கிரிதரன் பணியாற்றிய நான்கு ஆண்டு காலத்தில் , பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மட்டும் சில நூறு கோடி ரூபாய்களை அன்பளிப்பாக கிரிதரனுக்கு கொடுத்து இருக்கிறார்கள் என்கிறார்கள்.

லட்சமாக கிடைத்த பல நூறு கோடி ரூபாய்களை, தனது நெருக்கமான உறவினர்கள் பெயரில் முதலீடுகளாக மாற்றியிருக்கிறார் என்று குற்றம் சுமத்துபவர்கள் வேறு யாருமல்ல.. அரசுப் பணியில் கிரிதரன் சேர்ந்த போது, அதே காலத்தில் அவரோடு பணியில் சேர்ந்த தலைமைச் செயலக அதிகாரிகள்தான்.

எடப்பாடியார் ஆட்சி காலத்தில், சென்னை மாநகரில் பல இடங்களில் உள்ள வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளை  இடித்துவிட்டு, புதிய அடுக்குமாடி கட்டும் பணி தொடங்கியது. பழைய வீடுகளில் குடியிருந்த நூற்றுக்கணக்கானோருக்கு, சென்னையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு செய்வதற்கு தலா 5 லட்சம் ரூபாய் என்று வசூலித்திருக்கிறார் கிரிதரன்.

முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள், வீட்டு மனைகள் பெற்றவர்களின் பட்டியலை ரேண்டமாக ஆய்வு செய்தால் கூட, கிரிதரனுக்கு லஞ்சம் கொடுத்தவர்களை எளிதாக கண்டறிந்து விடலாம்.

அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது மிகவும் எளிதான ஒன்றுதான். அந்த வாக்குமூலங்களை வைத்து கிரிதரன் மீது சொத்து குவிப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விட முடியும். ஆனால், அந்த தைரியம் திமுக ஆட்சிக்கு இல்லை என்று கோபம் காட்டும் அரசு அதிகாரிகள், கிரிதரனால் பயனடைந்தவர்கள், அரசு நிர்வாகம், காவல்துறை என அனைத்து இடங்களிலும் பரவி இருக்கிறார்கள் என்று வேதனையோடு கூறுகிறார்கள்.  

முந்தைய எடப்பாடியார் ஆட்சியில், ஐ.எஸ் என்று கூறப்படும் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றிய உயரதிகாரி, கிரிதரனிடம் இருந்து துண்டு சீட்டு வந்தால் கூட போதும். எஸ்.பி., போலீஸ் டி.சி. என பலருக்கு பணி மாறுதல்களை 24 மணிநேரத்திற்குள் வழங்கியிருக்கிறார் என்று கூறுகிறார்கள் சென்னை மாநகரில் இப்போது பணிபுரிந்து வரும் உதவி ஆணையர்கள் சிலர்.

நுண்ணறிவு பிரிவின் கூடுதல் டிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட, கிரிதரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறுவோரும் இருக்கிறார்கள். திமுக ஆட்சியிலும் கூட கிரிதரனால் பணி மாறுதல் பெற்று தர முடிகிறது என்றால், அவரது செல்வாக்கை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.

ஓய்வுப்பெற்ற காவல்துறை உயரதிகாரி ஒருவரின் மகள், தமிழ்நாடு மாநில தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெறுகிறார். அண்மையில் அவருக்கு சென்னையில் பணி மாறுதல் கிடைத்தது. கிரிதரனின் சிபாரிசு மூலம்தான் இந்த பணி மாறுதல் கிடைத்திருக்கிறது என்பது சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பலருக்கு தெரியும் என்கிறார்கள்.

தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம், முதல்வர் அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையான பத்து மாடி கட்டடம் ஆகியவற்றில் சர்வசாதாரணமாக இன்றைக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார் கிரிதரன்.

கிரிதரனை எதிர்கொள்ளும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்றைய தேதியில் மிகுந்த மரியாதை செலுத்துவதை நேரில் பார்க்கும் போது, இரண்டு செவிகளிலும் புகை வண்டி வண்டியாக வெளியேறுகிறது என்று கொதிக்கிறார்கள் கிரிதரனுடன் நெருங்கி நட்பு கொண்ட அரசு அதிகாரிகள்.   

எடப்பாடியார் ஆட்சியில் செல்வாக்கு மிகுந்த துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளாக பணியாற்றியவர்களில் ஒன்றிரண்டு பேர், இன்றைக்கும் தலைமைச் செயலகத்திலேயே துறை செயலாளர்களாக தொடர்கிறார்களாம். அவர்களுடனான நெருக்கமான நட்பின் காரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் ரகசியமாக பேசப்படும் விஷயங்களை கூட திரட்டுகிற ஆற்றல் மிக்கவும் கிரிதரன் என்று கூறி அச்சமூட்டுகிறார்கள்.

எடப்பாடியாரிடம் தனிச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறார் கிரிதரன்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து சென்னை தியாகராய நகரில் பிரபலமான இடமான அபிபுல்லா சாலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார் கிரிதரன். இவரது வீட்டில் இரண்டு ஆடி கார்., 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கார்கள் நான்கு ஐந்து இருக்கிறது என்று பொங்குகிறார்கள் திமுக ஆதரவு அரசு அதிகாரிகள்.

முந்தைய அதிமுக ஆட்சியில் மட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியிலும் கிரிதரனின் செல்வாக்கு மூலம் பணிமாறுதல் பெற்ற போலீஸ் உயரதிகாரிகள், வருவாய் துறை அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர்கள் என பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில், அரசு அலுவலர்களை கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கை வைத்திருப்பார் விஜயகாந்த். அவரது அணியில் நேர்மையான அதிகாரிகள் இருந்தார்கள். ஊழலுக்கு எதிராக சீறும் அதிகாரிகள் படையை வைத்திருப்பார் விஜயகாந்த்.

ஆனால், கிரிதரன் வைத்திருக்கும் அரசு அதிகாரிகளை கொண்ட நெட்வொர்க், நேர்மையற்றவர்களின் கூட்டமாக இருக்கிறது. திமுக ஆட்சியோ, அதிமுக ஆட்சியோ, கொள்ளையடிப்பதையே வாழ்நாள் லட்சியமாக கொண்டிருப்பவர்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், திமுக ஆதரவு அதிகாரிகள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்ட திமுக ஆதரவு அதிகாரிகள் செல்வாக்கு இல்லாத துறைகளிலும் இப்போதும் குப்பை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பத்தாண்டு காலம் செல்வாக்கு மிகுந்த துறைகளில் கொடி கட்டி பறந்த கிரிதரன் போன்ற அதிமுகவைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், தலைமைச் செயலகம் முதல் கடைக்கோடி மாவட்டங்களிலும் கூட செல்வாக்கு மிகுந்த பதவிகளில்தான் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் காட்டில்தான் பணமழை கொட்டுகிறது.

எடப்பாடியாரிடம் தனிச் செயலாளராக பத்தாண்டுகள் இருந்த கிரிதரன், திமுக ஆட்சியிலும் தலைமைச் செயலகத்தில் செல்வாக்கு மிகுந்தவராக தான் இருந்து வருகிறார். அவரை கண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பயப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கலைத்துவிடும். மீண்டும் எடப்பாடியார்தான் முதல்வராக பதவியேற்பார். அப்போது, உதவி கேட்டோ, முக்கியமான பதவி கேட்டோ தன்னிடம் தானே வர வேண்டும். அப்படிபட்ட பயம் இருப்பதால்தான், உயர் அதிகாரிகள் மரியாதை காட்டுகிறார்கள் என்று குஷி மூடில் ஒருநாள் திமுக ஆதரவு அதிகாரிகளிடம் வார்த்தையை விட்டிருக்கிறார் கிரிதரன்.

முன்னாள் முதல்வர் எடப்பாடியாரின் நான்கு ஆண்டு கால ஆட்சியின் பயனாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி மாவட்டங்களில் பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் என பல நூறு அதிகாரிகளுடன் கிரிதரனுக்கு நல்ல அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளையே பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு ஆணவம் கொண்ட கிரிதரன், இன்றைக்கு திமுக ஆட்சியிலும், உயர் அதிகாரிகளிடம், அரசு தொடர்பான ரகசிய தகவல்களை திரட்டி, தனது முன்னாள் எஜமானரான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் கிரிதரன் என்று கூறுகிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பார்த்தோ, திமுக அமைச்சர்களைப் பார்த்தோ, கிரிதரனுக்கு கொஞ்சம் கூட பயம் கிடையாது. இன்றைக்கு திமுக அமைச்சர்களாக இருக்கிற இரண்டாம் கட்ட தலைவர்கள், எடப்பாடியாரிடம் கோடிக்கணக்கில் ஆதாயம் அடைந்த அனைத்து ரகசியங்களையும் அறிந்து வைத்திருப்பவர் கிரிதரன்.

திமுக ஆட்சியால் கிரிதரனுக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால், அதை திமுக மூத்த அமைச்சர்களால் கூட தாங்கி கொள்ள முடியாது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார்.. அரசு விதிகளை மீறி பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை வாரி வழங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் அடைந்திருக்கிறார் எடப்பாடியார் என்று அறப்போர் இயக்கம், ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.

அதன் மீது திமுக ஆட்சி ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இப்படிபட்ட நேரத்தில் எடப்பாடியாரின் தனி செயலாளர் கிரிதரனுக்கு எதிராக புகார் கொடுத்தால், அதை முதல் அமைச்சரின் கவனத்திற்கு கூட கொண்டு செல்லாமல் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைத்த கதையாக, அப்படியே குப்பையில் தூக்கி போட்டுவிடுகிறார்கள் முதல் அமைச்சரின் அலுவலக அதிகாரிகள்.

எடப்பாடியாரிடம் தனி செயலாளராக பதவி வகித்த கிரிதரன், தலைமைச் செயலகத்தில் திமுக ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியுமா.. அல்லது அவரது மருமகன் சபரீசனுக்காவது தெரியுமா..

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கிரிதரனின் சொந்த பங்களா, உறவினர்கள் வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ள  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடலாம். அதன் பேரில், கிரிதரனை சஸ்பெண்ட் செய்து தலைமைச் செயலகம் பக்கமே வராமல் கூட செய்யலாம்.

திமுக ஆட்சியிலும் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கிற கிரிதரன் போன்ற அதிமுக ஆதரவு அரசு அதிகாரிகளை அடையாளம் கண்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டால்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, எஞ்சிய மூன்றாண்டு காலத்தையும் முழுமையாக நிறைவு செய்யும்.

திமுக அரசுக்கு கூடவே இருந்து குழி பறிக்கிற குள்ள நரி கூட்டத்தை அடையாளம் காட்டுகிறோம். துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்க கூண்டு கிளியாக இருக்கிறாரே.. என்ற வருத்தம் தான் நாளுக்கு நாள் அதிகமாகி மனஉளைச்சலில் துடிக்க வைத்துவிடுகிறது என்று கண்ணீர் வடிக்கிறார்கள் திமுக ஆதரவு அதிகாரிகள்.

எடப்பாடியாரின் சிலிப்பர் செல்லாக தலைமைச் செயலகத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் கிரிதரனின் வாலை ஒட்ட நறுக்குவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்…