Fri. Apr 19th, 2024

மணந்தால் மகாதேவி… இல்லையேல் மரண தேவி… என்ற திரைப்பட வசனம்., 50 வயதை கடந்தவர்களுக்கு இன்றைக்கும் கூட பசுமையாக நினைவில் நின்று கொண்டிருக்கும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியிடப்பட்ட மகாதேவி திரைப்படம் 1957 ம் ஆண்டில் அபார வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த பி.எஸ். வீரப்பா பேசிய மணந்தால் மகாதேவி.. இல்லையேல் மரண தேவி என்ற வசனம், காலத்தால் அழிக்க முடியாத வசனமாகிவிட்டது.

65 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட வசனம், இன்றைய தேதியில் தமிழ்நாடு அரசின் உச்சபட்ச பதவியான தலைமைச் செயலாளர் பதவியை பெறுவதற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிக்கும் பொருந்துவதுதான் விசித்தரமான ஒன்றாகும்.

தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பிரபலமானவராக இருக்கும் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல இலக்கியத்துறையிலும் தனித்த முத்திரை பதித்து இருப்பதும், ஐஏஎஸ் அந்தஸ்திலான அரசுப் பணியில் நேர்மையின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமைக்குரியது.

பொது வாழ்விலும், அரசுப் பணியிலும் வெ.இறையன்பு ஐஏஎஸ் போல நேர்மை குணத்துடனும் மக்கள் சேவையாற்றுவதற்கு பகல் பாராமல் உழைப்பதற்கு தயாராக இருப்பதும் இவற்றை கடந்து எளிமையான வாழ்வு வாழ்வதையும், துறவை மிஞ்சிவிடும் மனநிலையும், ஒழுக்கத்தில் உயர்ந்திருக்கும் உறுதியான மனவலிமையும் இளம் தலைமுறையினர் கற்றுக் கொண்டால், வருங்கால தமிழ்நாடு, தன்னிகரில்லா தமிழ்நாடு என்ற பெருமையை எளிதாக எட்டிவிடும்.

எந்தவொரு அடைமொழிக்குள்ளும் சிறைபட்டுவிடாத வெ.இறையன்பு ஐஏஎஸ், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் மிச்சமிருக்கின்றன.

ஓய்வு பெறும் நாளைப் பற்றி இறையன்பு ஐஏஎஸ் சிந்திப்பதற்கு முன்பாகவே, தலைமைச் செயலாளர் பதவியை குறி வைத்து, உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் திரைமறைவு வேலைகள், இளம் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் நகைப்புக்குரிய ஒன்றாக மாறியிருப்பதுதான் மிகுந்த வேதனையாகும்.

தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து வெ.இறையன்பு ஐஏஎஸ் ஓய்வு பெற்றாலும் அல்லது அதற்கு முன்பாக விருப்ப ஓய்வில் செல்வதாக இருந்தாலும், அந்த பதவிக்கு தகுதியானரை நியமிக்கும் முழு பொறுப்பு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே இருக்கிறது.

ஆனால், தகுதியின் அடிப்படையிலும் பணி மூப்பு அடிப்படையிலும் தலைமைச் செயலாளரை தேர்வு செய்கிற உரிமை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் போது, சுதந்திரமாக தேர்வு செய்வதற்கு பதிலாக, நிர்ப்பந்தம் செய்து தலைமைச் செயலாளர் பதவியில் அமர்ந்து விடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதுதான் இன்றைய தேதியில் அதிர்ச்சிக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பணி மூப்பு அடிப்படையில், தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதியுடையவர்களாக ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ், முனைவர் அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ், விக்ரம் கபூர் ஐஏஎஸ் என மூன்று உயர் அதிகாரிகள் உள்ளனர்.

ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்…

மூன்று உயர் அதிகாரிகளும் தற்போதைய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், தமது பணிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாகவே கூறப்படுகிறது.

விக்ரம் கபூர் ஐஏஎஸ்..


பணி மூப்பு அடிப்படையில் தகுதிக்குரிய மூன்று உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் அமைதியாக இருந்து வரும் நேரத்தில், மணந்தால் மகாதேவி… இல்லையேல் மரண தேவி என்ற திரைப்பட வசனத்திற்கு ஏற்ப, பணி மூப்பு பட்டியலில் மிகவும் பின்தங்கியிருக்கும் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ், தலைமைச் செயலாளர் பதவியை பெற்றுவிட திரைமறைவில் மட்டுமல்ல, வெளிப்படையாகவும் செய்து வரும் அறமற்ற செயல்கள், ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் இடையே மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ்..

தலைமைச் செயலாளர் பதவியை குறி வைத்து 2022 ஆம் ஆண்டில் இருந்தே முயற்சித்து வருகிறார் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் என்று கூறும் உயர் அதிகாரிகளும் தலைமைச் செயலகத்திலேயே பணியாற்றி வருகிறார்கள்.

1986 ஆம் ஆண்டு முதல் 1988 ஆண்டிற்குள் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு ஆன உயர் அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் பணியாற்றி வரும் நேரத்தில், 1989 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியான சிவ தாஸ் மீனா, தலைமைச் செயலாளர் பதவியில் எப்படியாவது அமர்ந்துவிட வேண்டும் என்ற துடிப்போடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான மூத்த அமைச்சர்களின் பரிந்துரைக்காக தேடி தேடி சென்று சந்தித்து கொண்டிருக்கிறார் என்று வேதனையோடு கூறுகிறார்கள் சக ஐஏஎஸ் அதிகாரிகள்.

சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்..

தற்போதைய தலைமைச் செயலாளரிடமே சென்று ஓய்வுக்குப் பிறகு தமது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் முதல் அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஜுனியர் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஆதரவையும் வெளிப்படையாகவே திரட்டிக் கொண்டிருக்கிறார் சிவ தாஸ் மீனா ஐஏஏஸ் என்பதும் வேதனை குரலின் ஒருபகுதிதான்.

தலைமைச் செயலாளர் பதவியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று பகல்,இரவு பாராமல் ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கும் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்,
திமுக ஆட்சிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மிகுந்த விசுவாசம் காட்ட கூடியவரா என்றால் இல்லை என்று கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார்கள் சக ஐஏஎஸ் அதிகாரிகள்.

சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்ஸின் உண்மையான முகத்தை சக ஐஏஎஸ் அதிகாரிகள் விவரிக்கும் போது அயர்ச்சிதான் ஏற்படுகிறது.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா, 2011 ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த நேரத்தில் அவரின் நம்பிக்கைக்குரியவராக செயல்பட்டிருக்கிறார் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்.
ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற கையோடு அவரது நெருங்கிய தோழியான வி.கே. சசிகலாவின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகியிருக்கிறார்.

இருவரின் நம்பிக்கையையும் பெற்றவர் என்பதற்கு அடையாளமாகதான், 2013 ஆம் ஆண்டில் தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்.

அதிமுக ஆட்சிக்கு அளவுக்கு மீறிய விசுவாசத்தை காட்டியதால், 2016 ஆம் ஆண்டில் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் செயலாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளார் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்.

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத்திலும் முதல் அமைச்சரின் செயலாளராக பணியாற்றி இருக்கிறார் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்.

முந்தைய அதிமுக ஆட்சியில் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்ஸுக்கு ராஜ குருவாக இருந்தவர் பெயரை கேட்டால், மயக்கம் வராத குறைதான்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையிலான அதிமுக ஆட்சியில், தலைமைச் செயலாளராக இருந்தவர் ராம மோகன ராவ் ஐஏஎஸ்.

இப்படி வெறும் பெயரை மட்டும் குறிப்பிட்டால் இளம் தலைமுறையினருக்கு அவர் செய்த அற்புத செயல்கள் சட்டென நினைவுக்கு வராது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வரலாற்றிலேயே மகத்தான சாதனை படைத்தவர் ராம மோகன ராவ் ஐஏஎஸ்.

தலைமைச் செயலாளராக அவர் பதவி வகித்த காலத்தில், மத்திய அரசின் வருமான வரித்துறை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலக அறையிலும், அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் ஐஏஎஸ் வீட்டிலும் ஒரு நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு வரலாற்றில் என்றைக்குமே அகற்ற முடியாத அளவுக்கு அவமானத்தை தேடி தந்துவிட்டவர் ராம மோகன ராவ் ஐஏஎஸ்.

அறத்திற்கு அப்பாற்பட்டும், கண்ணியமற்ற முறையிலும் ஐஏஎஸ் பதவியை பயன்படுத்திக் கொண்ட ராம மோகன ராவின் நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்வதைவிட மிகுந்த விசுவாசமிக்கவராக வலம் வந்தவர்தான் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ் என்று உறுதிபட கூறுகிறார்கள் தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் பலர்.

முந்தைய அதிமுக ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசிலும் முதல் அமைச்சருக்கு மிஞ்சிய அதிகாரத்தை அனுபவித்தவர், தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் உயர்ந்த பதவியான தலைமைச் செயலாளர் பதவியை அடைவதற்காக, கண்ணியமற்ற முறையில் செயல்படுவதை கண்டு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள்.

குறிப்பாக, தகுதி, திறமை, பணி மூப்பு அடிப்படையில் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய தலைமைச் செயலாளர் பதவியை தட்டி பறிக்கும் வகையிலும், யாசகம் கேட்பதை போல, நடந்து கொள்ளும் சிவ தாஸ் மீனா ஐஏஎஸ்ஸால், ஒட்டுமொத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் அவப்பெயர்தான் ஏற்படுகிறது என்றும், இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் மரியாதை குறையும் செயல் என்றும் மனம் நொந்து கூறுகிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசியல் வாதிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் நேர்மையான நிர்வாகத்தையும், சுயமரியாதையை கண்டும் அச்சப்பட வேண்டிய நேரத்தில், தலைமைச் செயலாளர் பதவியில் அமர்வதற்காக சரணாகதி அடைவது அறமற்ற செயல் என்று நெற்றிக்கண்களை திறக்கிறார்கள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள உயர் ஐஏஎஸ் அதிகாரிகள்.

ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அதிகாரியாக நடந்து கொள்வேன் என்று அடிமை சாசனம் எழுதி தரும் அளவுக்கு தரம் தாழ்வதன் மூலம் இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுவதை, தனி நபரின் பேராசையால் ஏற்பட்டுள்ள ஆபத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று கொதிக்கிறார்கள் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி வெறியால், தலைமைச் செயலாளர் பதவிக்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கை தடுத்து நிறுத்துவாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்..

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்…

.