Thu. Apr 25th, 2024

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்திருக்கும் தலைமைச் செயலகம்
பிப்ரவரி முதல்வாரத்தில் இருந்து பரபரப்பின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில்
திராவிட மாடல் ஆட்சியின் அமைச்சர்கள் முனைப்பாக இருப்பதால்,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களும்
களையிழந்து காட்சியளித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் துயரம்..

பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் திராவிட மாடல் ஆட்சியின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
கள ஆய்வுக்காக சேலம் மாவட்டத்தில் முகாமிட்டிருந்தார்.

முதல் அமைச்சருடன் அவரது புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றதால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லாமல் போனது,
மிகுந்த அவலமான ஒன்று என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் அனுபவம் மிகுந்த ஐஏஎஸ் அதிகாரிகள்.

முதல் அமைச்சரின் கள ஆய்வு என்பதால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸும் உடன் சென்றிருந்தார். தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் இரண்டு நாட்களாக இல்லை. தலைமைச் செயலாளரும் இரண்டு நாட்களாக இல்லை.. ஊரக வளர்ச்சி, வருவாய் என பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் உயர் அதிகாரிகளும் சேலத்தில் முகாமிட்டிருந்தார்கள்.

இப்படிபட்ட நேரத்தில், முதல் அமைச்சரின் அலுவலக செயலாளர்களும்
தலைமைச் செயலகத்திற்கு வராமல் போனதால், ஒட்டுமொத்த அரசுப் பணிகளும் முடங்கிப் போய்விட்டது என்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நிதி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் உயர் அலுவலர்கள்.

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை வழிநடத்தி வரும் செல்வாக்கு மிகுந்த மூன்று பிரமுகர்களும் தலைமைச் செயலகத்திற்கு வராததால்,
பல்வேறு துறைகளை தலைமையேற்று நிர்வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர்,
தலைமைச் செயலகத்திற்கே வரவில்லை என்கிறார்கள் கோரிக்கையோடு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய அப்பாவி பொதுமக்கள்.

பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமல்ல,
பிப்ரவரி முதல் நாளில் இருந்தே தலைமைச் செயலகத்திற்கு சென்று வருபவர்கள்,
அமைச்சர்கள் இல்லாத தலைமைச் செயலகத்தை பார்த்து கவலையடைந்திருக்கிறார்கள்.
சட்டமன்ற பொதுத் தேர்தலின் போதுதான் தலைமைச் செயலகம் முழுமையாக வெறிச்சோடி இருக்கும். அதே நிலைதான் இன்றைய தேதிகளில் பார்க்க முடிகிறது என்கிறார்கள் வேதனை கலந்த குரல்களில்… முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சியில் மொத்தம் முப்பத்தி ஐந்து அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.

முதல் அமைச்சர் மற்றும் அவரது புதல்வருமான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தவிர்த்து எஞ்சிய 32 அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்தான் முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்கள். ஆட்டுமந்தைக் கூட்டம் போல, இந்த பட்டியலில் தப்பி, கடமையுணர்வோடு தலைமைச் செயலகத்திற்கு ஒற்றை பிரமுகராக வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதுதான் ஆறுதலான அம்சமாகும்.

ஒரு இடைத்தேர்தலையொட்டி ஒட்டுமொத்த தமிழக அரசும் முடக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம் என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போல,
ஒரு இடைத்தேர்தலை மானப் பிரச்னையாக கருதிக் கொண்டு
திராவிட மாடல் ஆட்சி அமைச்சர்கள்
ஈரோட்டில் ஒரு மாதத்தை செலவழிப்பது நியாயமான ஒன்று தானா என்று
கோபமாக கேள்வி எழுப்புகிறார்கள் திமுக முன்னாள் அமைச்சர்கள்.

ஒவ்வொரு ஆண்டிலும் பிப்ரவரி மாதம் என்பது
தமிழ்நாடு அரசுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும்.ஒருநாள் இல்லை, ஒரு மணி நேரத்தை கூட வீணடிக்காமல்,
கண்ணும் கருத்துமாக பணியாற்றும் மாதமாக பிப்ரவரி இருந்து வருகிறது.

ஒரு ஆண்டிற்கான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்,
பொதுமக்களின் மேம்பாட்டிற்காகவும்
தாக்கல் செய்யப்படும்
பட்ஜெட் எனும் நிதி நிலை அறிக்கையை,
மார்ச் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவது மரபாக இருந்து வருகிறது.

பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள்,
விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான புதிய அறிவிப்புகள்,
பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள்,
மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை
ஒளிமயமாக்குவதற்கான கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள், சுகாதார துறையில் மேம்பாடுகள், தொழிலாளர்கள், தொழில் துறையினர் உற்சாகம் அடையும் வகையில்
நிதி ஒதுக்கீடுகள் என 50 க்கும் மேற்பட்ட துறைகளில் 100 கணக்கில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.

2022 முதல் 2023 வரையிலான ஓராண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்,
அதற்கு செலவிடப்பட்ட நிதி மற்றும் புள்ளி விபரங்களும் கூட பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும்.

இப்படி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் ஓராண்டிற்கான தலையெழுத்தை நிர்ணயிக்க கூடிய பட்ஜெட்டிற்காக, அமைச்சர்களும், ஐஏஎஸ் உயர் அதிகாரிகளும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் வரை
பகல், இரவு பாராமல் உழைப்பார்கள். பட்ஜெட் தயாரிப்பில் நிதியமைச்சரின் பங்களிப்பு, மிகுந்த சவலாகவே இருந்து வருகிறது.

துறை ரீதியாக அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு துறை அமைச்சர்களுடனும் அந்த துறையின் ஐஏஎஸ் அதிகாரியுடனும் ஆலோசனை நடத்துவது நிதியமைச்சரின் தலையாய கடமையாக இருந்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு மூன்று, நான்கு துறை அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனையை குறுகிய நேரத்தில் நடத்தி தீர்மானத்திற்கு வருவார் நிதியமைச்சர்.

பிப்ரவரி மாதம் முழுவதும் மாரத்தான் ஓட்டம் போல ஓடிக் கொண்டிருக்கும் நிதியமைச்சர், விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில்துறை உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் அனுபவம் மிகுந்த வல்லுநர்களையும் அழைத்து
அவர்களது கோரிக்கைகளையும் கேட்பதும் உண்டு.

இப்படி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலுக்காக
உயிரை கொடுத்து நிதியமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பிப்ரவரி மாதத்தில் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட காலம், நேரம் பார்க்காமல் உழைப்பார்கள்.

ஆனால், இன்றைய தேதியில்,
ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும்,
ஈரோடு கிழக்கில் முகாமிட்டிருப்பதால்,
பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐஏஎஸ் உயரதிகாரிகள்
கடுமையான மன அழுத்தத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

8 கோடி மக்களின் எதிர்காலத்திற்காக
திட்டமிட்டு உழைக்க வேண்டிய பிப்ரவரி மாதத்தை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஒட்டுமொத்த திமுக அமைச்சரவையும்
வீணடித்துக் கொண்டிருக்கிறதே என்று குமறுகிறார்கள் தொழில்துறை வல்லுநர்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் அங்கம் வகிக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நீங்கலாக 32 அமைச்சர்களும்
தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலத்தை பற்றி யும் சிறிதும் கவலைப்படாமல்,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்
தீவிர கவனம் செலுத்துவது நியாயமா என்று
கேள்வி எழுப்புகிறார்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் சமூக ஆர்வலர்கள்.

பிப்ரவரி மாதம் முழுவதும் இடைத்தேர்தலில் கவனத்தை செலுத்திவிட்டு,
மாத இறுதியில் தலைமைச் செயலகத்திற்கு திரும்பி
அவசர அவசரமாக தயாரிக்கப்படும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்,
பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுகவை அரியணையில் அமர்த்தி அழகுப் பார்த்துக் கொண்டிருக்கும்
பொதுமக்களுக்கு எந்தவகையில் பயனுள்ளதாக இருக்கப்போகிறது என்று
நினைத்துப்பார்த்தால் தூக்கமே வருவதில்லை என்று மிகுந்த கவலையோடு கூறுகிறார்கள் திமுக முன்னாள் அமைச்சர்கள்.