Fri. Mar 29th, 2024

முதலியார் சமுதாயத்திற்கு எதிராக நிற்கும் மூன்று அதிமுக தலைவர்கள்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை எளிதாக்கிய ஈபிஎஸ்….

தமிழக அரசியலில் நாளுக்கு நாள் பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் புதல்வர் திருமகன் ஈவேரா மறைந்ததையடுத்து, பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

கூட்டணி  தர்மத்தின்படி, காங்கிரஸ் வெற்றிக்கு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு திமுக மூத்த அமைச்சர்கள், வாக்கு சேகரிப்பில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்தோ, ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பில் இருந்தோ தேர்தல் செலவுகளுக்கு பல கோடி ரூபாய்களை வாரி வழங்கவில்லை.

அதைபற்றி எல்லாம் துளியும் கவலைப்படாமல், திமுக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, எ.வ.வேலு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கரண்ஸியை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது.

நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரையில் உள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்ட திமுக கவுன்சிலர்கள் என ஒட்டுமொத்த திமுகவும் பிப்ரவரி முதல் தேதியில் இருந்தே ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டுள்ளார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில், பெரும்பான்மை நிர்வாகிகளை கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், அதிமுக தொண்டர்கள் உற்சாகமிழந்து விட்டனர்.

தமிழக பாஜக ஆதரவு யாருக்கு என்பதில் தொடர்ந்து குழப்பம் இருந்து வருவதால், அதிமுக வேட்பாளர் சார்பில் வேட்பாளர் அறிவிப்பது தாமதமாகி வந்தது என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணமாக கூறப்படும் தகவல்தான், எடப்பாடி பழனிசாமியின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளில், ஒன்று செங்குந்த முதலியார்கள். மற்றொரு சாதி, கொங்கு கவுண்டர்கள்.

கோயம்புத்தூர் தொடங்கி சேலம் வரை கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்களில் பெரும்பான்மையானவர்கள் எடப்பாடியார் சாதியைச் சேர்ந்த கொங்கு கவுண்டர்கள்தான்.

மேலும், கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செல்வாக்கோடு இருப்பதை போல, ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் செல்வாக்கோடு இருக்கிறார்கள்.

சேலத்தில் வசித்து வரும் எடப்பாடி பழனிசாமியோடு சேர்த்தால், கொங்கு மண்டலமே கொங்கு அதிமுக தலைவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கொங்கு கவுண்டர் சாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தாமல், செங்குந்த முதலியார் சாதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியை வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி.

ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனாலும்கூட, ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையான உள்ள செங்குந்த முதலியார் வாக்குகள் ஒட்டுமொத்த அதிமுகவுக்கு தான் கிடைக்கும்.

அதனால், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஆளும்கட்சி எத்தனை கோடி ரூபாய்களை கொட்டினாலும் கூட, ஈவிகேஎஸ் தேற மாட்டார் என்பது எடப்பாடியாரின் தேர்தல் கணக்கு.

ஒட்டுமொத்த அதிமுகவும் கொங்கு தலைவர்களிடம் சிக்கிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக தென்னவனை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

மறைந்த செல்வி ஜெயலலிதா போல தன்னிச்சையாகவும் துணிச்சலாகவும் முடிவெடுக்கும் அளவுக்கு எடப்பாடியார் அதிகாரமிக்க தலைவராக உருவெடுக்கவில்லை என்று கவலையோடு கூறுகிறார்கள் ஈரோடு கிழக்கு அதிமுக நிர்வாகிகள்.

கொங்கு கவுண்டர் சாதியைச் சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகிய மூவரும் ஒரே குரலில் கொங்கு கவுண்டர் சாதியை சேர்ந்தவரை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியாரை கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.

கொங்கு கவுண்டர் சாதியை தவிர வேறு சாதியினரை வேட்பாளராக நிறுத்தினால், தேர்தல் வேலைகளில் ஆர்வமே காட்ட மாட்டோம் என்று எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன் ஆகிய மூவரும் எடப்பாடியாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் விருப்பத்திற்கு மாறாக, கவுண்டர் சாதியில் மற்றொரு பிரிவான வேட்டுவக் கவுண்டர் சாதியை சேர்ந்த தென்னரசுவை, வேண்டா வெறுப்பாக அறிவித்துவிட்டார்.

அதிமுக தொண்டர்களிடம் நல்லவர் என்ற பெயரை தென்னவன் எடுத்திருந்தாலும், கடந்த பல ஆண்டுகளாக ஆர்வமாக கட்சிப் பணியாற்றாதவர் தென்னரசு.

ஈரோட்டில் கூலி தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் இருந்தாலும், அவர்களை உள்ளடக்கிய தொழிலாளர் சங்கத்திற்கு தலைவராக தென்னரசு இருந்து வந்தாலும் கூட, இன்றைய தேதியில் கூலி தொழிலாளர்களின் வாக்குகள் கூட தென்னரசுக்கு ஆதரவாக பதிவாகாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

கொங்கு கவுண்டர் சாதியை தவிர்த்து வேறு எந்தவொரு சாதியைச் சேர்ந்த நிர்வாகியாக இருந்தாலும், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, விசைத்தறி தொழில் தான் பிரதானமாக இருந்து வருகிறது.

ஜவுளி தொழிலில் பெரும்பான்மையாக ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் செங்குந்த முதலியார்கள்.

அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் அகில இந்திய தலைமையான மத்திய பாஜக அரசு, நாளுக்கு நாள் ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் கடுமை காட்டி வருவதால், ஜவுளி தொழில் முற்றிலுமாக முடங்கிவிட்டது.

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என்று ஆவேசம் காட்டும் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் கவுண்டரையே வேட்பாளராக அதிமுக அறிவித்து இருப்பதால் விரக்தியடைந்துவிட்டார்கள் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் கொங்கு கவுண்டர் சாதியினருக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கிடைக்கும்.

சிறுபான்மையினரான உள்ள சாதியினருக்கு அரசியல் அங்கீகாரமே கிடைக்காது என்று பரவலாக முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனத்திற்கு ஈரோடு கிழக்கு தொகுதியும் சாட்சியாக நிற்கிறது.

பெரும்பான்மையினராக உள்ள செங்குந்த முதலியாருக்கு அதிமுகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற கோபம், ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையான உள்ள முதலியார் சமுதாயத்தினரிடம் வேகமாக பரவ தொடங்கிவிட்டது.

எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவுக்கு செங்குந்த சமுதாய மக்கள் பெரும்பான்மையான வாக்களித்தால்தான், கொங்கு மண்டலத்தில் அதிமுக தொடர்ந்து செல்வாக்கோடு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியும்.

ஆனால், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன் ஆகிய மூன்று முன்னாள் அமைச்சர்களின் மிரட்டல்களுக்கு எடப்பாடியார் பணிந்து போய்விட்டார். எடப்பாடியாரின் சொல்லுக்கு மரியாதை இல்லை என்பதை எல்லாம் செங்குந்த முதலியாரிடம் திமுக கூட்டணி தலைவர்கள் பிரசாரமாகவே முன் வைத்து வருகின்றனர்.

வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டு விட்டதால், எடப்பாடியார் முன்மொழிந்த தென்னரசுவின் வெற்றிக் கனவு இன்றைய தேதியிலேயே புஷ்வாணமாகிவிட்டது.

திமுக கூட்டணியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றியை எளிதாக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் ஈரோடு கிழக்கு அதிமுக நிர்வாகிகள்…