Sun. Aug 7th, 2022

அதிமுகவில் ஒற்றைத் தலைமை. அதுவும் எடப்பாடி பழனிசாமிதான் என்று முடிவான நாளில் இருந்தே, எதிர்க்கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவது நாகரிகமாக இருக்காது என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல், தொண்டர்களின் செல்வாக்கோ, நிர்வாகிகளின் செல்வாக்கோ இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை தாங்கி நிற்பதற்கும், ஆதரவு காட்டுவதற்கும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் படாதபாடு படுகிறார் என்று அனல் கக்கும் வார்த்தைகளை உதிர்க்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.

நல்லரசுக்கு அறிமுகமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

ஆளும்கட்சி என்ற கோதாவில் ஒருதலைபட்சமாக திமுக மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டினார். ஆவேசமாக அவர் கூறிய வாக்குமூலம் இதோ….

அதிமுகவில் செல்லாக்காசாகிவிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை, ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தூக்கி எறிந்துவிட்டு, எடப்பாடியார் தலைமையில் போர் வீரர்கள் போல, திமுக அரசை எதிர்த்து அடுத்தடுத்த போராட்டங்களை நடத்த துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போதே திமுகவுடன் ஓ.பி.எஸ்.ஸும் அவரது வாரிசுகளும் கள்ள உறவு கொண்டிருப்பதை பற்றி தகவல்கள் கிடைத்த போதும், அப்போதைய தேர்தலில் அதிமுகவுக்கு கௌரவமான வெற்றி கிடைத்ததால், ஓபிஎஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தோம்.

ஆனால், தன் மீதான வழக்குகளை எல்லாம் நீர்த்துப் போக செய்யவும், திமுக ஆட்சியிலும் சுயநலமாக ஆதாயம் அடையவும் தொடர்ந்து திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும், மறைந்த அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதியையும் வெளிப்படையாகவே புகழத் தொடங்கினார் ஓபிஎஸ்.

தொண்டர்கள் எல்லாம் களத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒபிஎஸ்ஸும், அவரது வாரிசுகளும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும், அவரது மகன், மருமகன் உள்ளிட்ட குடும்ப உறவுகளுடன் நல்லுறவை பேணி வந்து அதிமுகவுக்கு துரோகம் இழைத்து வருவதை அறிந்துதான் எடப்பாடியார் பொங்கி எழுந்தார். அவரின் உளப்பூர்வமான உணர்வுகளை அறிந்த பிறகுதான், அதிமுகவுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் ஓபிஎஸ் கூடாரத்தை கட்சியில் இருந்தே தூக்கியெறிய வேண்டும் என எண்ணம், அதிமுகவில் உள்ள அனைவரின் மனதிலும் தீயாக எறிய தொடங்கியது.

தொண்டர்கள், நிர்வாகிகள் என ஒட்டுமொத்த அதிமுகவும் இபிஎஸ் தலைமையை ஏற்க ஒருமனதாக திரண்ட பிறகே, அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி பொதுச் செயலாளராக எடப்பாடியாரை தேர்ந்தெடுத்தோம்.

ஆனால், திமுகவுக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கும் ஓபிஎஸ், ஏற்கெனவே அதிமுகவுக்கும், அம்மாவுக்கும் துரோகம் இழைத்த மன்னார்குடி கும்பலைச் சேர்ந்த டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோருடன் பகிரங்கமாக உறவு வைத்துக் கொண்டு, இரண்டு முறை நடத்த பொதுக்குழுக் கூட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக நீதிமன்றங்களுக்கு சென்றார். எக்காலத்திலும் தர்மமே வெல்லும் என்று சொல்லும் அளவுக்கு அதர்மத்தின் நாயகனாக நிற்கும் ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றங்கள் சாவுமணி அடித்தது. அப்போதும்  ஓபிஎஸ் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

தன் பக்கம் தனது நிழல் கூட இல்லையே என்ற ஆத்திரத்தில், புரட்சித்தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் ஆத்மாவில் ரத்தம் வடியும் அளவுக்கு ஒட்டுமொத்த அதிமுகவினருக்கும் திருக்கோயிலாக விளங்கும் தலைமைக் கழகத்திற்குள் அடியாட்களுடன் புகுந்து, எம்ஜிஆர் மாளிகையை சூறையாடினார். இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபட்டால், அதிமுக தலைமைக் கழகத்தை ஜென்ம எதிரியான திமுக அரசு, மூடி சீல் வைத்து விடும் என்பதை உணர்ந்திருந்த போதும், அதிமுக அலுவலகத்தை இழுத்து மூடும் மாபெரும் துரோகத்தை செய்தார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்ஸின் கட்சி விரோத, துரோக செயல்கள் இனிமேலும் தொடர கூடாது என்றுதான் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக பொதுக்குழு நீக்கியது. அதன் பிறகும் திருந்தால், அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை முடக்குவதற்கும், கட்சியின் பெயரை பயன்படுத்த முடியாத அளவுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று துரோகச் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்.

அவரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கு பின்னாலும் திமுக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்பதை அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சட்டப்பேரவையில் எடப்பாடியார் தலைமையில்தான் ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களும் செயல்பட்டு வருகிறார்கள். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம் என்று சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் கொடுத்தால், அதுதொடர்பாக ஆலோசித்துதான் முடிவு எடுப்பேன் என்று பிடிவாதம் காட்டுகிறார் சபாநாயகர்.

63ஐ விட 3 தான் பெரிது என்று கவுண்டமணி, செந்தில் காமெடி போல சபாநாயகர் செய்து கொண்டிருக்கிறார்.

சட்டப்பேரவையிலும், தமிழகத்திலும் எடப்பாடியாரின் அரசியலைக் கண்டு திமுகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பயப்படுகிறார்கள். நேருக்கு நேர் நின்று எடப்பாடியாருடன் அரசியல் செய்யாமல், ஓபிஎஸ்ஸின் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு முதல்வர்மு.க.ஸ்டாலின், எடப்பாடியாருக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்.

சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குங்கள் என்று எடப்பாடியார் கடிதம் கொடுத்தால், கொரோனா சிகிச்சையில் இருந்த ஓபிஎஸ்ஸுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை சீண்டும் வகையில் ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்றே ஓபிஎஸ்ஸின் பெயரை குறிப்பிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சேட்டையெல்லாம் சாதாரண தொண்டராக இருக்கும்போதே தூள் கிளப்பியவர் எடப்பாடியார் என்பதை போக போக உணர்ந்து கொள்வார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதிமுக அலுவலகம் எடப்பாடியாரின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டது. வங்கி கணக்குகள் அனைத்தும் எடப்பாடியாரின் கண் அசைவில்தான் இயங்குகின்றன. தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களில் எடப்பாடியார் தொடர்ச்சியாக வாகை சூடி வருவதைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்கும் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் காட்டுவதைப் போல, திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணம்தான் பிரதமர் மோடியுடனான இபிஎஸ்ஸின் மரியாதை நிமித்தமான சந்திப்பை இருட்டடிப்பு செய்ய முயன்று மூக்குடைந்து போய் நிற்கிறது திமுக அரசு.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க 28 ஆம் தேதி மாலை சென்னை வந்தார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் பிரதமரை வரவேற்றார் எடப்பாடியார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை எடப்பாடியார்தான் என்பதை அங்கீகரிக்கும் விதமாக பிரதமரும் எடப்பாடியாரின் இருகரங்களையும் அன்புடன் இறுக பிடித்து நலம் விசாரித்தார். இந்த காட்சியை அரசு தரப்பு புகைப்படக்கலைஞர் படம் பிடித்தார்.

பிரதமருடனான எடப்பாடியாரின் சந்திப்பு நடந்த புகைப்படத்தை அன்றைய தேதியே ( 28 ஆம் தேதி மாலையில் – வியாழக்கிழமை) பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தமிழக அரசு வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், திமுக அரசோடு கள்ள உறவு வைத்திருக்கும் ஓபிஎஸ்ஸுக்கு பிரதமரை சந்திக்க அன்றைய தினம் அனுமதி மறுக்கப்பட்டதால், மூக்குடைந்து போன திமுக அரசு, அவரை மகிழ்விக்கும் வகையில், பிரதமருடனான எடப்பாடியாரின் சந்திப்பு புகைப்படத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தது.

பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடும் என்ற நினைப்பில் திமுக அரசு சர்வதிகாரமாக நடந்து கொண்டது. இந்த நடவடிக்கையைக் கண்டு கொதித்துப் போன அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்தித்துறை உயரதிகாரிகளை கடுமையாக எச்சரிக்க, மறுநாள்தான் ( வெள்ளிக்கிழமை – ஜூலை 29) எடப்பாடியாரின் சந்திப்பு புகைப்படத்தை வெளியிட்டது.

பிரதமருடன் கை குலுக்கும் எடப்பாடியாரின் கம்பீரத்தை பார்த்தால், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கம்பீரம் தான் கண் முன் நிற்கிறது. ஆளுமைமிக்க தலைவருக்கு உரிய குணத்தோடு நிமிர்ந்து நின்று பிரதமருடன் உரையாடுகிறார் எடப்பாடியார். இருவருக்கும் இடையே உள்ள பரஸ்பர மரியாதையை, இருவருக்கு இடையேயான நெருக்கமே உணர்த்திக் கொண்டிருக்கிறது. புன்னகையுடன் பிரதமர் பேச, இருவரின் உடல்மொழியும் நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. ஆனால், ஓபிஎஸ் சந்தித்த போது, கூழைக் கும்பிடும் போடும் குணத்தோடு அணுகியதால் தள்ளி நின்றவாறே சந்திக்கிறார் பிரதமர்.

இபிஎஸ்ஸிடம் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துகிறார் என்பதை திமுகவினரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலுவின் முகமே காட்டி கொடுக்கிறது.

ஓபிஎஸ்ஸின் பின்னால் யாருமே இல்லை என்பதை அறியாதவரா பிரதமர். அதனால்தான் வேண்டா வெறுப்பாக ஓபிஎஸ்ஸை சந்தித்த சம்மதித்திருக்கிறார் என்றே பாஜக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

எடப்பாடியாரின் கம்பீரத்தை பார்த்து திமுக அரசு பயப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே போதும். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்கிவிட்டு மீண்டும் அதிமுகவை அரியணையில் அமர வைக்கும் வல்லமை எடப்பாடியாரிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

வரும் நாட்களில் எட்டப்பன்களையும் அவர்களுக்கு துணையாக நின்று அதிமுகவுக்கு துரோகம் இழைக்கும் கூட்டத்தையும்  விரட்டி விரட்டி வெளுக்கப் போகிறார்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா மீது வெறித்தனமான பக்தி கொண்டுள்ள அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் என்று ஒரே மூச்சில் பேசி முடித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர்.

செய்தியாளர்களிடம் கேள்விகளை கேளுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்ட ஓபிஎஸ்…. பரிதாபம்தான்….

One thought on “இபிஎஸ்ஸைக் கண்டு மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார்;    அனல் கக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்….”

Leave a Reply

Your email address will not be published.