Sat. Nov 23rd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை வீடு மற்றும் 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் மீண்டும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், அவர்களது நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடதத்தினர். அப்போது அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை அறிக்கையில் ஆவணங்களை சேர்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 24 லட்சத்திற்கு சொத்து குவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சேலம் உள்பட 6 மாவட்டங்களில் 57 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முதல் குற்றவாளியாக எஸ்.பி. வேலுமணியின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரர் அன்பரன் உள்பட மேலும் 12 பேரின் பெயரும் எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ளது.

05-2022-CBE

ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள், தற்போதைய அதிகாரிகள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மைக்கல் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் பலர் திரண்டு, காவல்துறைக்கு எதிராகவும் திமுக ஆட்சிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.