அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ, ஆயுள் தண்டனை?
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசையும், ஆட்சிப் பொறுப்புக்கு தலைமையேற்று இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கிள்ளுக்கீரைப் போல நினைத்துக் கொண்டிருத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும், கொட நாடு கொலை வழக்கை தூசு தட்டியிருப்பதன் மூலம் உயிர்ப்பயத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் வழக்கு விசாரணையின் போக்கை உண்ணிப்பாக கவனித்து வரும் அதிமுக வழக்கறிஞர்கள்.
கடந்த பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில் போட்ட ஆட்டத்தை திமுக ஆட்சியால் அடக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தை வைத்து உறியடி காட்டினால், மத்திய பாஜக அரசின் மூலம் திமுக அரசுக்கு செக் வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், இ.பி.எஸ் உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் உதார்விட்டுக் கொண்டிருந்தனர். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான புகார்களை எல்லாம் தூசு தட்டியெடுத்து தயாராக வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வுக்கு சப்த நாடியும் அடங்கும் அளவுக்கு, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடவடிக்கைக்கு அனுமதியளித்தார்.
தனக்கு எதிரான லஞ்ச ஒழிப்புப் போலீசாரின் அதிரடியால் துவண்டுப் போன எம்.ஆர்.விஜயபாஸ்கர், சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டார். ஆனால், எஸ்.பி.வேலுமணியோ, கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக முன்னணி தலைவர்களை உருட்டி, மிரட்டி அடுக்கி வைத்ததைப் போல, கூட்டத்தை சேர்த்து திமுக அரசையும் மிரட்டி விடலாம் என டிராமா காட்டிக் கொண்டிருக்கிறார். எந்தளவுக்கு எஸ்.பி.வேலுமணி வித்தை காட்டுவோரா, அந்தளவுக்கு அவரை ஆட விட்டுவேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எப்போது, எந்த இடத்தில் அடித்தால், ஒட்டுமொத்த அதிமுக.வும் பஞ்சர் ஆகுமோ, அந்த ஆக்ஷன் பிளானோடு தயாராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கொட நாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கை கையில் எடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு உயிர் பயத்தையே காட்டிவிட்டார். வெளிப்பார்வைக்கு சயனின் வாக்குமூலம் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் சிக்க வைக்க எடுத்த ஆயுதம் இல்லை. இன்னொரு முக்கிய சாட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மிக,மிக ஸ்ட்ராங்காக உள்ளது. அந்த சாட்சியையும் திமுக அரசு வளைத்துவிட்டது என்பதை அறிந்துதான் ஆடிப்போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்றைய தினம் சட்டப்பேரவையில் தன்னை குறி வைத்துதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்புகளை வீசுவார் என்பதை நேற்றே உணர்ந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு விடிய விடிய தூங்காமல் அதிமுக வழக்கறிஞர்கள், டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை என்றால் கூட தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், தனக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டால், தனது ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனமாகிவிடும் என பயந்து போய், தனது சமுதாயத்தைச் சேர்ந்த பிரபல மனிதரிடம் புலம்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார் அவருக்கு மிக, மிக நெருக்கமான அதிமுக முன்னணி தலைவர் ஒருவர். தான் முதலமைச்சர் ஆக பதவி வகித்த காலத்திற்குள்ளாகவே கொட நாடு கொலை வழக்கு விசாரணையை முடித்து நீர்த்துப் போக செய்துவிடலாம் என இ.பி.எஸ்., காய் நகர்த்திய போதும், நீதித்துறை நடைமுறைககள் அந்தளவுக்கு வேகம் காட்டாததால், இ.பி.எஸ். நினைத்தது நடக்கவில்லை.
தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் பயந்து நடுங்கியதைப் போலவே, தற்போது திமுக ஆட்சி கொட நாடு கொலை வழக்கை கையில் எடுத்திருப்பதைக் கண்டுதான் ஆடிப்போயிருக்கிறார் இ.பி.எஸ். இன்றைய தினம் சட்டப்பேரவையில் கொட நாடு என்ற வார்த்தை உச்சரிக்கப்பட்டபோதே தன்னை அறியாமல் பதற்றமாகி, திமுக அரசுக்கு எதிராக பொங்க தொடங்கிவிட்டார். இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்குதான் குறி வைக்கப்படுகிறது என்று தெரிந்திருந்த போதும், மற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அவரவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்குமோ என்ற பயத்தில்தான் இ.பி.எஸ்.ஸுடன் கரம் கோர்த்து, திமுக அரசுக்கு எதிராக அவையில் அமளி, வெளிநடப்பு, தர்ணா என போராட்டத்தை கையில் எடுத்துவிட்டார்கள் என்று கூறுகிறார் சீனியர் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர்.
சயனின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக.வுக்கு எதிராக ஆவேசம் காட்டவில்லை. கொட நாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் கனகராஜின் மர்ம மரணம்தான், எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் சிக்க வைப்பதற்கும், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வரை பெற்று தந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான், அந்த மர்ம மரணத்தை முக்கிய விஷயமாக திமுக அரசு பார்க்கிறது என்று கூறும் ஓய்வுப் பெற்ற காவல்துறை உயரதிகாரி ஒருவர், மர்மாக இறந்து போன கனகராஜின் சகோதரர் தனபாலை, ஏற்கெனவே திமுக கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டுவிட்டார் என்றார். கனகராஜின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்த போதே, அவர் மீதே குற்றம்சாட்டி வாக்குமூலம் கொடுத்தவர்தான் இந்த தனபால்.
ஆனால், அன்றைக்கு இ.பி.எஸ்.ஸின் பிடியில் போலீஸ் துறை இருந்ததால், அவரை மீறி போலீசார் அப்போது நேர்மையாக செயல்படவில்லை. இதனால், தனபாலின் அவலக்குரலுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
முந்தைய அதிமுக ஆட்சியின் போதும் சரி, இன்றைக்கும் சரி, கனகராஜின் மரணத்திற்கு இ.பி.எஸ்.தான் காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறார். அவரின் துணிச்சலான வாக்குமூலம்தான் எடப்பாடி பழனிசாமியின் கழுத்தை நெரிக்கும் முக்கியமான கயிறு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் வி.கே.சசிகலாவுக்கு கார் டிரைவராக இருந்த கனகராஜ், தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.உள்ளிட்ட முன்னணி அதிமுக தலைவர்கள் பலருக்கு நெருக்கமானவர்.
கனகராஜின் மர்ம மரணத்திற்கு உரிய நீதி கிடைக்காததால் ஆத்திரத்தில் இருந்து வரும் கனகராஜின் உறவினர்கள், கனகராஜ் விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்பட்ட ஆத்தூரில் அப்போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபுவை 24 மணிநேரத்தில் இ.பி.எஸ். அரசு மாற்றியதின் பின்னணி, இறப்புக்கு முன்பாக அப்போது ஓ.பி.எஸ். அணியில் இருந்த ஆறுகுட்டி எம்.எல்.ஏ.விடம் கனகராஜ் கைபேசியில் கடைசியாக பேசியது என இந்த வழக்கில் இருந்து எளிதாக எடப்பாடி பழனிசாமி விடுபட்டிட முடியாத அளவுக்கு நூல் கண்டு போல, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சிக்க வைக்க வேண்டியதற்கான எல்லா வியூகங்களையும் வகுத்துவிட்ட பிறகே, சயனை மீண்டும் வாக்குமூலம் வழங்க வைத்திருக்கிறது திமுக அரசு என்கிறார்கள் ரகசியமாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ஸ்மெல் செய்யும் காவல்துறை உயரதிகாரி ஒருவர்.
ஆக மொத்தத்தில், அடுத்தடுத்து வரும் நாட்கள் அதிமுக.வுக்கு சிக்கல் ஏற்படுகிறதோ இல்லையோ, கொட நாடு வழக்கு விசாரணை வேகமெடுத்து, ஆக்டோபஸ் போல இ.பி.எஸ்.ஸை வழக்கு விசாரணைக்குள் கொண்டு வரும் காட்சிகள், ஒட்டுமொத்த தமிழக அரசியலையே சூடாக்கிவிடும்.இபிஎஸ்.ஸுக்கு வைக்கப்பட்டுள்ள பொறி, அதிமுக எனும் உட்கட்சிக்குள்ளும் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்றார் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர், மிகுந்த சோகத்துடன்…
அடுத்து ஜெ. மரணம் குறித்த விசாரணையை தூசி தட்டி ஓ.பி.எஸ்.ஸுக்கு செக் வைக்குமா திமுக அரசு? என்ன சார் உங்க திட்டம்!